ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தினால் இராணுவத் தளபதியும், பாதுகாப்புத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது உடனடிக் குடும்பத்திற்கு விதிக்கப்பட்ட பயணத் தடைகள் குறித்து இலங்கையின் கடுமையான ஆட்சேபனைகளை அமெரிக்கத் தூதுவர் அலினா டெப்லிட்ஸிடம் வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று (2020 பெப்ரவரி 16) தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை (2020 பெப்ரவரி 14) அமெரிக்க இராஜாங்க செயலாளரினால் இது குறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து வெளிநாட்டு உறவுகள் அமைச்சு இலங்கை அரசாங்கத்தின் ஆட்சேபனையை உடனடியாக வெளியிட்டது.
சிரேஷ்டத்துவத்தின் அடிப்படையில் லெப்டினன்ட் ஜெனரல் சில்வா அப்போதைய அரச தலைவரால் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டதுடன், அவருக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் குறித்த ஆதாரபூர்வமான அல்லது நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் எதுவும் இல்லை என்பதையும் கலந்துரையாடலின் போது அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார். அவர் மிகவும் சிரேஷ்ட இராணுவ அதிகாரி என்ற காரணத்தினால், தற்போதைய அரச தலைவர் கோத்தாபய ராஜபக்ஷ அவர்களால் பதில் பாதுகாப்புத் தலைவராக தரமுயர்த்தப்பட்டார்.
ஒரு தசாப்தத்திற்கு முன்னர் இலங்கையை பயங்கரவாதத்திலிருந்து விடுவிப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளில் லெப்டினன்ட் ஜெனரல் சில்வாவும் ஒருவர் என்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர், தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் முக்கிய பதவிகளை வகிப்பதற்கு நிரூபிக்கப்பட்ட நிபுணத்துவத்துடன் கூடிய நபர்களுக்கு அழைப்பு விடுப்பதற்கான ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியின் சிறப்புரிமையை வெளிநாட்டு அரசாங்கமொன்று கேள்விக்குட்படுத்துகின்றமை ஏமாற்றமளிப்பதாக தெரிவித்தார். இந்த நடவடிக்கையானது அமெரிக்க - இலங்கை உறவை அனாவசியமாக சிக்கலுக்குட்படுத்துவதாக அமைச்சர் தெரிவித்தார்.
சுயாதீனமாக சரிபார்க்கப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்படாது, 2015 ஆம் ஆண்டின் மிகவும் சர்ச்சைக்குரிய OISL அறிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்மை அறியப்பட்ட போது, தகவல் ஆதாரங்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்குமாறு அமைச்சர் அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்தார். இந்த அறிக்கையானது ‘மனித உரிமை குறித்த விசாரணையொன்றாவதுடன், குற்றவியல் தொடர்பான விசாரணை அல்ல’ மற்றும் ‘கட்டளைச் சங்கிலியின் விளக்கத்தில் வழங்கப்பட்ட பெயர்கள் இதில் பட்டியலிடப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மீறல்களுக்கான நேரடியான பொறுப்பு அல்லது கட்டளையின் கீழான அல்லது உயர்ந்த பொறுப்பு என்ற வகையிலான குற்றவியல் பொறுப்பைக் குறிக்கவில்லை. தனிப்பட்ட குற்றவியல் பொறுப்பானது ஒரு நீதிமன்றத்தால் மட்டுமே தீர்மானிக்கப்பட முடியும்’ போன்ற விடயங்கள் நினைவு கூரப்பட்டன.
தனது தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுமாறு ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்திடம் வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
இலங்கை அரசாங்கத்தின் கவலைகளை வொஷிங்டன் டி.சி.க்கு தெரிவிப்பதாக அறிவித்த தூதுவர் டெப்லிட்ஸ், பாதுகாப்புத் துறை உட்பட இலங்கையுடனான தொடர்ச்சியான ஒத்துழைப்பின் அனைத்து அம்சங்களுக்கும் மற்றும் அதன் விரிவாக்கத்தை உறுதி செய்வதற்கும் அமெரிக்க அரசாங்கத்தின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
வெளிவிவகார செயலாளர் ரவினாத ஆரியசிங்க, வட அமெரிக்கப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் தர்ஷன எம். பெரேரா மற்றும் வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் அதிகாரிகள் இந்த சந்திப்பின் போது அமைச்சருடன் இணைந்திருந்தனர். இந்த சந்திப்பில் ஐக்கிய அமெரிக்கத் தூதுவருடன் தூதரகத்தின் பிரதித் தலைவர் திரு. மார்ட்டின் கெல்லி இணைந்திருந்தார்.