ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள தொழில்முறை இலங்கையர்களின் சங்கம் ஏற்பாடு செய்த 'இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் தொழில்முறை இலங்கையர்கள் ஆராய்ச்சிக் கருத்தரங்கு 2021' இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியத்திலுள்ள 25 பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகளுடன் நடைபெற்றது.இரு நாடுகளின் கல்வியாளர்களும் அவர்களின் ஆராய்ச்சிப் பணிகளை வெளிப்படுத்தவும், ஆராய்ச்சியாளர்களுக்கு அந்தந்த ஆய்வுத் துறைகளில் நிபுணர்களுடன் தொடர்புகொள்வதற்குமாக இலங்கை ஆராய்ச்சியாளர்களுக்கு (பி.எச்.டி/எம்.ஃபில்) சந்தர்ப்பத்தை வழங்குவதே இந்த ஆராய்ச்சிக் கருத்தரங்கின் முக்கிய நோக்கமாகும்.
யாழ்ப்பாணம் புனித ஜோன்ஸ் கல்லூரியின் முன்னாள் மாணவரும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவருமான ஐக்கிய இராச்சியத்தின் லீஸ்டர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் நிஷான் கனகராஜா நிகழ்வின் முக்கிய உரையை நிகழ்த்தினார். ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சுதந்த லியனகே சிறப்பு விருந்தினராக உரையாற்றினார். பேராசிரியர் லியனகே வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஆவார்.
நான்கு அமர்வுகளின் கீழ் இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களின் 12 கல்வி விளக்கக்காட்சிகளை இந்தக் கருத்தரங்கு உள்ளடக்கியது. பெல்ஃபாஸ்ட் குயின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி. எம்.எம்.பி.என். பியசேன இந்தக் கருத்தரங்கின் வெற்றியாளராவார். இலங்கையின் வயம்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எச்.ஜி.என். ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் சால்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் மல்ஷா தெவிந்தி கீக்கியனகே முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பெற்றனர்.
இந்நிகழ்வில் பேசிய உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன, இந்த முயற்சியானது ஐக்கிய இராச்சியத்திற்கும் இலங்கைக்கும் இடையே கல்வித்துறையில் எதிர்கால ஒத்துழைப்புக்கான வழி வகுக்கும் என்றும், அதே போல் 1வது மற்றும் 2வது தலைமுறை பிரித்தானிய இலங்கையர்களை இணைக்கும் என்றும் கூறினார். ஐக்கிய இராச்சியத்தில் உள்ள தொழில்முறை இலங்கையர்களின் சங்கத்தின் தலைவர் துஷார மதுரசிங்கவும் இந்த நிகழ்வில் உரையாற்றினார்.
ஐக்கிய இராச்சியத்தில் உள்ள தொழில்முறை இலங்கையர்களின் சங்கத்துடன் இணைந்து வருடாந்த நிகழ்வாக உயர்ஸ்தானிகராலயம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்யவுள்ளது.
இலங்கை உயர்ஸ்தானிகராலயம்
லண்டன்
2021 செப்டம்பர் 08