சவுதி அரேபியாவின் தம்மாமிலுள்ள கிழக்கு மாகாண வர்த்தக சபை (அஷர்கியா சபை), ஏற்றுமதி அபிவிருத்தி சபை மற்றும் இலங்கை வெளிநாட்டு அமைச்சு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், இலங்கை மற்றும் சவுதி அரேபியா ஆகியவற்றுக்கு இடையே இருதரப்பு வர்த்தகத்தை ஊக்குவிக்கும் முகமாக, இரு நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பங்கேற்புடன் 2021 செப்டம்பர் 14ஆந் திகதி வெபினாரொன்றை ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் ஏற்பாடு செய்தது.
பங்கேற்பாளர்களை வரவேற்ற அஷர்கியா வணிக சபையின் பணிப்பாளர் குழுவின் தலைவர் அப்துல்ஹகிம் அல்கால்டி, இரு நாடுகளுக்கிடையேயான வணிக உறவுகளை மேம்படுத்துவதற்காக சவுதி இறக்குமதியாளர்களுடன் தேவையான ஒருங்கிணைப்பை வழங்குவதற்காக இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கான முழு ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தார்.
இந்தத் திட்டம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவை மேம்படுத்தும் என இலங்கை வெளிநாட்டு அமைச்சின் பொருளாதார விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் தனது தொடக்க உரையில் குறிப்பிட்டார். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த அனைத்து பங்குதாரர்களுக்கும் அவர் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்கள், சவுதி சந்தையை பூர்த்தி செய்யக்கூடிய பல்வேறு இலங்கைத் தயாரிப்புக்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களை உள்ளடக்கிய விரிவான விளக்கத்தை அளித்த இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் (சந்தைப்படுத்தல்) அனோமா பிரேமதிலக்க, துறை சார்ந்த இலங்கை நிறுவனங்களின் பிரதிநிதித்துவத்தை சுருக்கமாக அறிமுகப்படுத்தினார்.
தற்போது 100,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ள அஷர்கியா சபை மற்றும் அதன் செயற்பாடுகள் குறித்த விளக்கத்துடன், சவுதியின் பொருளாதாரம் மற்றும் இலங்கை மற்றும் சவுதி அரேபியா ஆகியவற்றுக்கு இடையேயான வர்த்தக உறவுகள் குறித்து அஷர்கியா சபையைச் சேர்ந்த முஹமத் ரத்வான் அவர்களின் விளக்கக்காட்சியும், முதலீட்டாளர்களுக்கு சவுதி அரசாங்கம் வழங்கும் சேவைகள் உள்ளடங்கலாக, சவுதி அரேபியாவில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புக்கள் மற்றும் வர்த்தக சூழல் குறித்து முதலீட்டு அமைச்சின் மஜித்-அல் முலா அவர்களின் விளக்கக்காட்சியும் வழங்கப்பட்டன. விளக்கக்காட்சியின் போது, சவுதி மற்றும் இலங்கை நிறுவனங்களுக்கிடையிலான வணிகத் தொடர்புகளை எளிதாக்குவதற்காக உருவாக்கப்பட்ட அறையின் விஷேட இணையத்தளத்தில் தம்மைப் பதிவு செய்து கொள்ளுமாறு இலங்கை நிறுவனங்களுக்கு அஷர்கியா சபையினால் அழைப்பு விடுக்கப்பட்டது.
ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தின் அமைச்சர் (வர்த்தகம்) சஞ்சீவ பட்டிவில நிறைவுரையாற்றினார். இரு நாடுகளுக்கிடையேயான மொத்த வர்த்தக அளவை அதிகரிக்கும் நோக்கத்துடன், இலங்கை வர்த்தகர்களுக்காக சவுதி வணிக சமூகத்திலிருந்து சாத்தியமான வணிகப் பங்காளிகளை அறிமுகப்படுத்துவதற்காக தூதரகம் இந்த வெபினார் அமர்வை முதன்முறையாக ஏற்பாடு செய்தது.
இலங்கைத் தூதரகம்
ரியாத்
2021 செப்டம்பர் 17