ரஷ்யா-உக்ரைன் மோதலில் சிக்கிக்கொண்டுள்ள இலங்கையர்கள் தொடர்பாக ரஷ்ய கூட்டமைப்பின் தூதுவருடனான அமைச்சர் சப்ரியின் சந்திப்பு

ரஷ்யா-உக்ரைன் மோதலில் சிக்கிக்கொண்டுள்ள இலங்கையர்கள் தொடர்பாக ரஷ்ய கூட்டமைப்பின் தூதுவருடனான அமைச்சர் சப்ரியின் சந்திப்பு

2024 மே 29, அன்று வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி, ரஷ்யா - உக்ரைன் மோதலில் இடைநிறுத்தப்பட்டுள்ள இலங்கையர்களின் அவசரநிலைமை தொடர்பாக ரஷ்ய தூதுவர் லெவன் எஸ் ஜகார்யனுடன் தொடர் கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டார்.  2024 மே 07, அன்று ரஷ்ய தூதுவருடன் நிகழ்ந்த முந்தைய சந்திப்பைத் தொடர்ந்து இச்சந்திப்பு நடைபெற்றது.

வெளிநாட்டு அலுவல்களுக்கான இராஜாங்க அமைச்சர் கௌரவ தாரகபாலசூரிய தலைமையிலான உயர்மட்ட தூதுக்குழுவொன்று ரஷ்யாவிற்கு விஜயம் மேற்கொண்டு, கலந்துரையாடல்களை மேற்கொள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்த தீர்மானத்தை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரஷ்ய தூதுவருக்கு அறிவித்தார். ரஷ்ய கூட்டமைப்பில் உள்ள இலங்கை தூதுவராலயத்தினால், இலங்கை தூதுக்குழுவின் உரிய சந்திப்புக்களுக்காக, முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர், தூதுவர் ஜகார்யனுக்கு தெரிவித்தார்.  ரஷ்யத்தூதுவர், இலங்கைப் பிரஜைகளின் நலன் தொடர்பான தனது அக்கறையைப்பகிர்ந்து கொண்டதுடன், விஜயம் செய்யும் தூதுக்குழுவிற்கு அனைத்து வசதிகளையும் வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சரிடம் உறுதியளித்தார்.

மாஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் பொறுப்பாளராக, மூத்த வெளிநாட்டுச் சேவை அதிகாரியான தூதுவர் பி எம் அம்சா, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்  கடமைகளைப் பொறுப்பேற்பார் என்றும் வெளிவிவகார அமைச்சர் ரஷ்ய தூதுவரிடம் தெரிவித்தார்.

சூழ்நிலையின் அவசர நிலையைக்கருத்தில் கொண்டு, இவ்விவகாரத்தினை தீர்த்து வைப்பதற்காக, இலங்கையுடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கு தூதுவர் ஜகார்யன் தனது ஆதரவை தெரிவித்தார்.   அண்மையில் ரஷ்யாவுக்குச் சென்றவர்களில் பலர் சுற்றுலா வீசாவில் பயணம் செய்திருப்பதை அவதானிக்கும்போது, உடனடி நடவடிக்கையாக, இனிமேல், ரஷ்யா, முழுமையான வீசா நேர்முகத்தேர்வொன்றின் பின்னரே முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சுற்றுலா வீசா வழங்கும், என்று தூதுவர் ஜகார்யன் தெரிவித்தார்.  மனித கடத்தல்காரர்களுக்கு பலியாக வேண்டாம் என்றும், ரஷ்யகூட்டமைப்பில் சட்டவிரோத வேலைவாய்ப்புகளில் ஈடுபட வேண்டாம் என்றும் இலங்கை அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பதை அமைச்சர் சப்ரி மீண்டும் வலியுறுத்தினார்.

ரஷ்ய தூதுவரை சந்திப்பதற்கு முன்னர், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர், 2024, மே 28 அன்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் பாராளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர மற்றும் காமினி வலேபொட முன்னிலையில் ரஷ்யா - உக்ரைன் மோதலில் ஈடுபட்டுள்ள இலங்கையர்களின் குடும்பங்களுடன் கலந்துரையாடியமை, அவர்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பான நாடு திரும்புதலை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியது.

அதேவேளை, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு உக்ரைன் அதிகாரிகளை அணுகி, உக்ரைன் இராணுவத்தில் இடைநிறுத்தப்பட்டதாகக் கூறப்படும் இலங்கையர்களுக்கான உதவி, விடுதலை மற்றும் பாதுகாப்பாக நாடு திரும்புதல் குறித்து கலந்துரையாடியுள்ளது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2024, மே 29

Please follow and like us:

Close