இலங்கை மற்றும் ரஷ்யாவின் சுகாதாரப் பிரிவுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பின் கட்டமைப்பில், இலங்கையின் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு தொடர்பான தொடர் விரிவுரைகள் 07 ஆகஸ்ட் மற்றும் 21 ஆகஸ்ட் 2021 வரை நடைபெற்றன.
இலங்கை சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் (மருத்துவ சேவைகள்) வைத்தியர் சுனில் டி அல்விஸ், மொஸ்கோ பெருநகர நிர்வாக யூரி லுஷ்கோவ் பல்கலைக்கழகத்தின் பயிற்சியாளர்களுடன் இலங்கையின் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் மொஸ்கோ பெருநகர நிர்வாக பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஒத்துழைப்பின் விளைவாக இந்த முயற்சி ஏற்படுத்தப்பட்டதுடன், வெளிநாடுகளுக்கான ஆய்வு சுற்றுப்பயணங்கள் உள்ளடங்கலாக இது ஆண்டுதோறும் மொஸ்கோ மருத்துவமனைகளின் தலைவர்களுக்கான பயிற்சியை ஏற்பாடு செய்கின்றது.
இந்த ஆண்டு பல்கலைக்கழகம் தனது உயர்மட்டப் பயிற்சியாளர்களை இலங்கைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதுடன், தூதரகம், இலங்கை சுகாதார அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து, பயிற்சியாளர்கள் இலங்கைக்குச் செல்வதற்கு முன் இணையவழி விரிவுரைகளை ஏற்பாடு செய்தது. வைத்தியர் சுனில் டி அல்விஸின் சொற்பொழிவுகளின் தலைப்புக்களாக, இலங்கை சுகாதார அமைப்பின் வரலாறு, இலங்கையின் சுகாதார அமைப்பு, இலங்கையில் உள்ள சுகாதார நிறுவனங்கள் ஆகியன அமைந்திருந்தன.
மொஸ்கோ மருத்துவமனைகளின் சுமார் 20 தலைவர்கள் இணையவழி விரிவுரைகளில் கலந்து கொண்டதுடன், கேள்வி பதில் அமர்வுகளிலும் பங்கேற்ற அதே வேளை, இலங்கையின் சுகாதார அமைப்பு மற்றும் இலங்கைக்கு வரவிருக்கும் ஆய்வு சுற்றுப்பயணத்தில் தமது உண்மையான ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.
இலங்கை சுகாதார அமைச்சுக்கும் தனிப்பட்ட முறையில் மேலதிக செயலாளர் (மருத்துவ சேவைகள்) வைத்தியர் சுனில் டி அல்விஸ் அவர்களுக்கும் மற்றும் மொஸ்கோ பெருநகர நிர்வாக யூரி லுஷ்கோவ் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்திற்கும், மற்றும் இலங்கை மற்றும் அதன் நிறுவனங்களுடனான உறவின் வளர்ச்சிக்கான ஆர்வத்திற்காக பல்கலைக்கழகத்தின் தாளாளர் திரு. வாசிலி யூரிவிச் ஃபைவிஸ்கி அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் தூதரகம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.
இலங்கைத் தூதரகம்
மொஸ்கோ
2021 ஆகஸ்ட் 31