மொஸ்கோவில் இடம்பெற்ற சுற்றுலா ஊக்குவிப்புப் பிரச்சாரத்தில் இராஜாங்க அமைச்சர் தாரக்க  பாலசூரிய பங்கேற்பு

மொஸ்கோவில் இடம்பெற்ற சுற்றுலா ஊக்குவிப்புப் பிரச்சாரத்தில் இராஜாங்க அமைச்சர் தாரக்க  பாலசூரிய பங்கேற்பு

மொஸ்கோவில் 'ஓட்டிக் ஓய்வுக் கண்காட்சி' மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பிரச்சாரத்தில் இலங்கைக் கூடாரத் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக, பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய 2021 செப்டம்பர் 05 முதல் 08 வரை ரஷ்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார். இந்த நிகழ்வுகளிலான இலங்கையின் பங்கேற்பானது, ரஷ்யாவின் குளிர்காலப் பயணிகளை இலக்காகக் கொண்டு இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த விஜயத்தின் போது, நாட்டின் மிகப் பெரிய பயணக் கண்காட்சியான ஓய்வு நேரக் கண்காட்சியில் இலங்கையின் கூடாரத் திறப்பு விழாவில் இராஜாங்க அமைச்சர் பங்கேற்றார். இந்த ஆண்டு, தொற்றுநோய் நிலைமை இருந்தபோதிலும் இந்தக் கண்காட்சி 6,000 பார்வையாளர்களை ஈர்த்ததுடன், இது ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் வெளிநாடுகளுக்குச் செல்ல ஆர்வமாக இருப்பதைக் குறிக்கின்றது.

சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்வின் போது ஊடகவியலாளர்கள் மற்றும் பயணப் பிரதிநிதிகளுக்கு மத்தியில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர், பாரம்பரிய சுற்றுலாத் தலங்களுக்கு அப்பால், ரஷ்ய சுற்றுலாப் பயணிகளுக்கு விஷேடமான புதிய அனுபவங்களையும் காட்சிகளையும் மத்திய மலைப்பகுதிகளில் அழகிய கிராமங்களில் உலாவி அனுபவிப்பதற்கு உகந்ததாக வழங்குவதாகத் தெரிவித்தார். வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இலங்கையில் முன்னெடுக்கப்படும் சுகாதார நடவடிக்கைகளையும் இராஜாங்க அமைச்சர் பாலசூரிய எடுத்துரைத்தார்.

உலகம் முழுவதும் உள்ள இளம் பயணிகள் மத்தியில் சமூக ஊடகங்கள் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால், இலங்கையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவதற்காக சமூக ஊடகத்தின் செல்வாக்கின் முக்கியத்துவம் குறித்து இராஜாங்க அமைச்சர் பாலசூரிய கலந்துரையாடினார். இலங்கையில் சுற்றுலாத் துறையில் ரஷ்ய முதலீடுகளையும் அவர் ஊக்குவித்தார்.

பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சு

2021 செப்டம்பர் 15

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close