மொரிஷியஸில் நடைபெறவுள்ள மேற்கு இந்து சமுத்திர கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான 3வது அமைச்சர்கள் மட்டத்திலான மாநாட்டில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி பங்கேற்கவுள்ளார்

 மொரிஷியஸில் நடைபெறவுள்ள மேற்கு இந்து சமுத்திர கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான 3வது அமைச்சர்கள் மட்டத்திலான மாநாட்டில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி பங்கேற்கவுள்ளார்

மொரீஷியஸின் வெளிநாட்டு அலுவல்கள், பிராந்திய ஒருங்கிணைப்பு மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மனீஷ் கோபினின் அழைப்பின் பேரில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, 2023 நவம்பர் 16ஆந் திகதி மொரிஷியஸில் நடைபெறவுள்ள மேற்கு இந்து சமுத்திர கடல்சார் காவல் மற்றும்  பாதுகாப்பு தொடர்பான 3வது அமைச்சர்கள் மட்டத்திலான மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.

முக்கியமான உலகளாவிய வர்த்தக மற்றும் வணிக மையமான மேற்கு இந்து சமுத்திரம், உலகளாவிய கடல் பிரதேசத்தில் பல தொடர்புகளைக் கொண்டுள்ளது. சட்டத்திற்கு முரணான போக்குவரத்து மற்றும் கடத்தல், சட்டவிரோதமான, முறைப்பாடு செய்யப்படாத மற்றும் கட்டுப்பாடற்ற மீன்பிடித்தல், ஆட்கடத்தல்   மற்றும் கடல் மாசுபாடு போன்ற கடல்சார் பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் இப்பகுதி தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றது.

இந்நிலையில், மேற்கு இந்து சமுத்திர கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான மாநாட்டைக் கூட்டுவதற்காக மொரீஷியஸ் முயற்சிகளை எடுத்துள்ளதுடன், அதன் 2 பதிப்புக்கள் 2018 மற்றும் 2019 இல் நடாத்தப்பட்டுள்ளன. பிராந்தியத்தில் கடல்சார் திறனை மேம்படுத்துவதற்கான  உறுதியான நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் உயர்மட்ட உரையாடலுக்கான தளமாக இது செயற்படுகின்றது.

மொரிஷியஸில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகளை வளர்க்கும் நோக்கில் அமைச்சர் சப்ரி  அமைச்சர் கோபினுடன் இருதரப்பு சந்திப்பில் ஈடுபடவுள்ள அதே வேளை, இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் தலைமைப் பொறுப்பை இலங்கை ஏற்றுக்கொண்ட  2023 ஒக்டோபர் 9-11 வரை இலங்கையில் இடம்பெற்ற சிரேஷ்ட அதிகாரிகளின் 25வது குழு மற்றும் 23வது அமைச்சர்கள் குழுக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்தி, இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் எதிர்கால நடைமுறைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் அமைச்சர்கள் சபையின் தலைவர் என்ற வகையில், மொரிஷியஸில் உள்ள இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் செயலகத்தைப் பார்வையிடவுள்ளார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2023 நவம்பர் 14

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close