மெய்நிகர் சந்திப்பில் இருதரப்பு ஒத்துழைப்புகள் குறித்து இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றப் பிரதிநிதிகள் மீளாய்வு

 மெய்நிகர் சந்திப்பில் இருதரப்பு ஒத்துழைப்புகள் குறித்து இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றப் பிரதிநிதிகள் மீளாய்வு

இலங்கை பாராளுமன்றத்தின் சர்வ கட்சி பிரதிநிதிகள் குழுவும், ஐரோப்பிய பாராளுமன்றத்தின்  தெற்காசிய நாடுகளுடனான உறவுகளுக்கான பிரதிநிதிகள் குழுவும் 2022 நவம்பர் 17, வியாழனன்று ஆக்கபூர்வமான மெய்நிகர் உரையாடலை நடாத்தினர். இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரி மற்றும் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரும், ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தெற்காசிய நாடுகளுடனான உறவுகளுக்கான தூதுக்குழுவின் தலைவருமான நிக்கோலா ப்ரோகாசினி ஆகியோர் இந்த சந்திப்பில் தத்தமது பிரதிநிதிகள் குழுவிற்கு தலைமை தாங்கினர். கடந்த 2017 நவம்பரில் கொழும்பில் நடைபெற்ற தனிப்பட்ட சந்திப்பின் பின்னர் இரு பாராளுமன்றங்களுக்கும் இடையில் இடம்பெற்ற முதல் உரையாடல் மெய்நிகர் சந்திப்பு இதுவாகும்.

இலங்கை - ஐரோப்பிய ஒன்றியப் பங்காளித்துவத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சப்ரி, மனிதாபிமான உதவிகள் உட்பட சமூகப் பொருளாதார மீட்சியின் செயற்பாட்டில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுதியான ஆதரவை வரவேற்றார். பரிஸ் கழகத்தின்  உறுப்பினர்களின் ஆதரவையும் ஒற்றுமையையும் பாராட்டிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர், தற்போதைய பொருளாதார நிலைமை, சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள், கடன் மறுசீரமைப்பு மற்றும் கடனாளர்களுடனான கலந்துரையாடல்கள் குறித்து ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கினார். அரசியலமைப்பின் 21வது திருத்தம், ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள், பொருத்தமான உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மாதிரியிலான கலந்துரையாடல்கள், சர்வதேச நெறிமுறைகள் மற்றும் தரநிலைகளுக்கு ஏற்ப பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ரத்துச்செய்தல் மற்றும் மாற்றியமைத்தல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைதிகளின் விடுதலை, மற்றும் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளிலான ஒட்டுமொத்த முன்னேற்றம் உட்பட இலங்கையின் அண்மைய அபிவிருத்திகள் குறித்தும் அமைச்சர் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினருக்கு விளக்கினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இணைத்தலைவர் நிக்கோலா ப்ரோகாசினி, கூட்டு ஆணைக்குழுவின்  செயற்பாட்டின் கீழ் நடைமுறையில் உள்ள பன்முகக் கருப்பொருள் ஒத்துழைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பல வருடக் குறிகாட்டித் திட்டத்தின் கீழ் உள்ள ஆதரவுடன் ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை இருதரப்பு உறவுகளின் முன்னேற்றத்தை வரவேற்றார். ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக உறுதியளித்த அவர், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையின் மூலம் இலங்கைக்கு கிடைத்த நன்மைகள் மற்றும் நாட்டின் இணக்க செயன்முறைகள் குறித்தும் கருத்துக்களைக் குறிப்பிட்டார். ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் இரண்டாவது பெரிய ஏற்றுமதிச் சந்தையாக இருப்பதால், ஐரோப்பிய ஒன்றியச் சந்தைக்கான இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு வரியில்லா அணுகலை வழங்கும் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகைகளுக்காக அரசாங்கத்தின் ஆழ்ந்த பாராட்டுக்களை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தெரிவித்தார்.

இந்து சமுத்திரத்தில் இலங்கையுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் பரந்த ஈடுபாடு, காலநிலை  நடவடிக்கை தொடர்பான ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதாரங்களில் உலகளாவிய தொற்றுநோய் மற்றும் எரிசக்தி, உரம் மற்றும் உணவு விலைகள் ஆகியவற்றின் ஏற்றத்தாழ்வுத் தாக்கம் ஆகியன குறித்தும் இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது தலையீடுகளில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான இலங்கையின் ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்களை வரவேற்றனர். குறிப்பாக தற்போதைய  சமூகப் பொருளாதாரச் சூழலில் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையின் முக்கியத்துவத்தை அவர்கள் எடுத்துரைத்தனர். பாராளுமன்றத்தில் பெண்கள் பேரவையை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அடிமட்ட மட்டத்தில் பெண்களை மேம்படுத்துவதில் ஜி.எஸ்.பி. பிளஸின் பங்களிப்பையும், ஆடைகள் மற்றும் ஏனைய துறைகளில் பெண்களுக்கு வழங்கப்படும் வேலை வாய்ப்புக்களையும் சுட்டிக்காட்டினார். இலங்கையின் வெளிநாட்டு நேரடி முதலீடு மற்றும் சுற்றுலாத்துறைக்கான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பங்களிப்பும் இதன்போது பாராட்டப்பட்டது.

இலங்கையின் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் மாறுபட்ட தலையீடுகள் மற்றும் வெளிப்படையான கருத்துப் பரிமாற்றங்களை ஐரோப்பிய ஒன்றியத்தின் இணைத்தலைவர் வரவேற்றார். இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு இரு தரப்பும் பகிரங்கமான உறுதிப்பாட்டை  மீண்டும் வலியுறுத்தின.

வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய உட்பட ஸ்ரீ லங்கா பொதுஜன  பெரமுன, சமகி ஜன பலவேகய, இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 19 பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த மெய்நிகர் சந்திப்பில் கலந்து கொண்டனர். ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களின் ஈடுபாடுகளின் போது, ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் மாக்சிமிலியன் க்ராஹ் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் சர்வதேச வர்த்தக குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். ஐரோப்பிய வெளிவிவகாரச் சேவையின் தெற்காசியப் பிரிவின் தலைவரும் இதன் போது உரையாற்றினார்.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர்கள், இலங்கை நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும்  இலங்கை வர்த்தகத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2022 நவம்பர் 22

Please follow and like us:

Close