முக்கிய வர்த்தக சபைகளுடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கலந்துரையாடல்

முக்கிய வர்த்தக சபைகளுடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கலந்துரையாடல்

ஏற்றுமதியாளர்களுக்கான வாய்ப்புக்கள் மற்றும் சாத்தியக்கூறுகள், இலங்கையின் சரக்குகள்  மற்றும் சேவைகளை ஏற்றுமதி செய்வதில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, 2022 அக்டோபர் 12ஆந் திகதி ஏராளமான ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் மற்றும் வர்த்தக சபைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் வணிகத் தலைவர்களை சந்தித்தார். அமைச்சர் அலி சப்ரியுடனான சந்திப்பில் வெளிவிவகார செயலாளர் தூதுவர் அருணி விஜேவர்தன மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் சபைகளுடனான இந்த சந்திப்பு, வணிக சமூகத்தின் வணிக முயற்சிகளை மேம்படுத்துவதற்கும், ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும் அமைச்சு உதவக்கூடிய மற்றும் எளிதாக்கக்கூடிய மிகவும் பயனுள்ள நடவடிக்கைகள் சார்ந்த கருத்துக்கள், யோசனைகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெறுவதற்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சால் நடாத்தப்பட்டது. கூட்டத்தில் உரையாற்றிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர், தனியார் துறை, சபைகளுடன் ஒத்துழைத்து அவர்களின் வர்த்தக முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கு அமைச்சு உறுதிபூண்டுள்ளதாகவும், இதன் மூலம் நாட்டின் ஏற்றுமதித் துறைக்குத் தேவையான பொருளாதார முன்னேற்றம் மற்றும் உதவிகளை வழங்குவதாகவும் தெரிவித்தார். அமைச்சின் கீழ் உள்ள அனைத்து தூதரகங்களும், தனியார் மற்றும் பெறுநிறுவனத் துறையின் பொருளாதார மற்றும் வர்த்தக நோக்கங்களை அடைவதில் அவர்களுக்கு உதவி, எளிதாக்குவதற்காக வெளிநாடுகளில் உள்ள திறப்புக்களை தனியார்  துறையுடன் இணைப்பதில் தொடர்ந்தும் தொழில்ரீதியாக ஈடுபடுவதாகவும் அவர் உறுதியளித்தார்.

இதில் கலந்து கொண்ட அமைப்புக்களும், மன்றங்களும் தமது கருத்துக்களைத் தெரிவித்ததுடன், முக்கிய நாடுகளுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை வெற்றிகரமாக நிறைவு செய்வது,  இந்த நேரத்தில் ஏற்றுமதியை உயர்த்துவதற்கும், அதிகரிப்பதற்குமான வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் முன்னுரிமையாகக் கருதப்பட வேண்டும் என குறிப்பிட்டனர். எதிர்மறையான ஊடகக் கருத்துக்களால் எழும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, நன்கு கட்டமைக்கப்பட்ட பொறிமுறையை அரசாங்கம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், இதனால் நாட்டின் பிம்பம் மற்றும் சுயமரியாதை மேம்படுத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இலங்கை வர்த்தக சம்மேளனம், தேசிய வர்த்தக சம்மேளனம், வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம், இலங்கை ஏற்றுமதியாளர் சங்கம், தேயிலை வர்த்தகர் சங்கம், இலங்கை ஆடை ஏற்றுமதி சங்கம், கூட்டு ஆடைகள் சங்க மன்றம் உட்பட 20 க்கும் மேற்பட்ட முன்னணி வர்த்தக மற்றும்  ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டன.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2022 அக்டோபர் 12

 

Please follow and like us:

Close