இலங்கைக்கான மியான்மார் தூதுவர் யு ஹன் து வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தனவை ஜூலை 16ஆந் திகதி சந்தித்தார்.
நீண்டகால இலங்கை மியான்மார் சகோதரத்துவ இருதரப்பு உறவுகள் குறித்து வலியுறுத்திய வெளிநாட்டு அமைச்சர் குணவர்தன, பல நூற்றாண்டுகளாக பௌத்தத் தொடர்புகளை அடிப்படையாகக் கொண்ட வரலாற்றைப் பகிர்ந்து கொண்டார். 1803 மற்றும் 1865ஆம் ஆண்டுகளில் இலங்கையில் அமரபுர மற்றும் ராமண்ண நிகாய முறையே நிறுவப்பட்டமை இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் சான்றுகளாகும் என அவர் மீண்டும் வலியுறுத்தினார். குறித்த கருத்துக்களை அங்கீகரித்த தூதுவர், மியான்மாரைச் சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகள் தற்போது இலங்கையில் கல்வி கற்று வருவதாகக் குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் உறவுகள் பல ஆண்டுகளாக பல்வேறு வழிமுறைகள் மூலம் பலனளிப்பதாக இரு பிரமுகர்களும் ஒப்புக் கொண்டதுடன், குறிப்பாக இலங்கை மியான்மார் நாடாளுமன்ற நட்புறவுக் குழுவிற்கு புத்துயிர் அளிப்பதன் முக்கியத்துவத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டினர்.
தேரவாத பௌத்த மதத்தை அடிப்படையாகக் கொண்ட நட்புறவுகளின் அடையாளமாக விளங்கும் இலங்கைப் பிக்குகளுக்கு உற்சாகமளிக்கும் முகமாக 'அக்கமஹ பண்டித' பட்டம் ஆண்டுதோறும் வழங்கி வைக்கப்படுவதற்காக வெளிநாட்டு அமைச்சர் குணவர்தன மியன்மார் அரசாங்கத்திற்கு நன்றிகளைத் தெரிவித்தார்.
கோவிட்டுக்குப் பிந்தைய கட்டத்தில் பொருளாதார ஒத்துழைப்புக்கான சாத்தியமான பகுதிகளில் இரு நாடுகளும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்ட அமைச்சர், தேங்காய் தொழில்துறை, விவசாயம், பௌத்த சுற்றுலா, ரப்பர் மற்றும் கப்பல் துறை போன்ற பகுதிகளை சுட்டிக்காட்டினார்.
இலங்கை வெளிநாட்டு அமைச்சு மற்றும் கொழும்பில் உள்ள மியான்மார் தூதரகம் ஆகியவற்றின் அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு
2021 ஜூலை 19