மியான்மாரில் இணைய மோசடி கடத்தலில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையர்கள் பத்திரமாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டமை 

மியான்மாரில் இணைய மோசடி கடத்தலில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையர்கள் பத்திரமாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டமை 

மியன்மார் மற்றும் தாய்லாந்திலுள்ள இலங்கை தூதரகங்களின் ஒருங்கிணைப்புடன் மியன்மார் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சானது, மியான்மாரில் இணைய மோசடி கூட்டுகளில் கட்டாய குற்றச் செயல்களுக்காக கடத்தப்பட்ட எட்டு இலங்கையர்களை வெற்றிகரமாக மீட்டு,  திருப்பி அனுப்பியது.

இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கமைய , மியான்மார் சட்ட அமுலாக்க அதிகாரிகள் கடத்தப்பட்ட இலங்கையர்களை 2024, ஏப்ரல் 4 அன்று  மீட்டனர். பாங்காக்கில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி தாய்லாந்தில் உள்ள மேஸோ எல்லை வாயிலில் அவர்களை வரவேற்றதைத்தொடர்ந்து, அவர்கள் பாங்காக்கிற்கு அழைத்து வரப்பட்டு, இடம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் உதவியுடன் அவர்கள் திருப்பி அனுப்பப்படும் வரை தங்குமிட வசதிகளை வழங்கினர்.

மீட்கப்பட்ட இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு இடம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பானது, ஏற்பாட்டியல் தொடர்பிலான உதவிகளை வழங்கியது. கடத்தல்காரர்களிடமிருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, மியான்மரில் உள்ள இலங்கை தூதரகம், மியான்மரை தளமாகக் கொண்ட ஈடன் அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம், மியாவாடி காவல் நிலையத்தில் அவர்கள் தற்காலிகமாக தங்கியிருந்தபோது அவர்களுக்கு உணவு மற்றும் பிற தேவைகளை வழங்கியது.

அமைச்சின் தூதரக வெளிநாட்டு அலுவல்கள் பிரிவு, உரிய பங்காளர்களுடன் இணைந்து திருப்பி அனுப்பும் செயல்முறையை ஒருங்கிணைத்ததைத்தொடர்ந்து, தூதரக அலுவல்களுக்கான வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் ஏ.எஸ்.கே செனவிர்த்ன அவர்கள், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) மீட்கப்பட்டு திருப்பியனுப்பப்ட்ட எட்டு இலங்கையர்களை வரவேற்றார். அவ்வெட்டு இலங்கையர்களும், தாம் இலங்கைக்கு பாதுகாப்பாகத் திரும்புவதை உறுதி செய்வதில் வெளிநாடு அலுவல்கள்  அமைச்சின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு மனமார்ந்த நன்றிகளுடனான பாராட்டைத்  தெரிவித்தனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சானது, மியன்மார் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்கள் மற்றும் இடம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பு (IOM) உட்பட்ட ஏனைய பங்காளர்களுக்கு, இவ்விடயத்தில் வழங்கிய உதவிகளுக்கு, தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவிக்க விரும்புகிறது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

 2024 ஏப்ரல் 18

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close