கோவிட்-19 கட்டத்தில், இலங்கையின் பட்டய விமானங்களை 2021ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து ஆரம்பிக்கலாம் என வெளிநாட்டு அமைச்சு ஏற்பாடு செய்த சந்திப்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பிராந்திய முகாமையாளர் (தென்கிழக்கு ஆசியா) தெரிவித்தார். மியன்மாருடனான விமான இணைப்பை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கலந்துரையாடுவதற்கான இந்த சந்திப்புக்கு வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தலைமை தாங்கினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான குறிப்பிடத்தக்க பௌத்தக் கலாச்சார இணைப்பின் காரணமாக, இலங்கைக்கும் மியன்மாருக்கும் இடையிலான விமான இணைப்பு நீண்ட காலமாக கலந்துரையாடப்பட்டு வருவதாக இந்த சந்திப்பில் மெய்நிகர் வழியில் பங்கேற்ற மியான்மருக்கான இலங்கைத் தூதுவர் மாண்புமிகு பேராசிரியர் நலின் த சில்வா தெரிவித்தார். சுமார் 300 பௌத்த பிக்குகள் தற்போது இலங்கையில் கல்வி கற்று வருவதுடன், மேலும் பல இலங்கைப் பிக்குகளும், பிரதிநிதிகளும் தியானம் மற்றும் ஏனைய மத நோக்கங்களுக்காக மியன்மாருக்கு விஜயம் செய்கின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார். மியன்மாரில் மருத்துவச் சுற்றுலாவுக்கான ஏராளமான சாத்தியங்கள் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இரு நாடுகளுக்குமிடையில் விமான இணைப்பை ஏற்படுத்துவதிலான தமது தீவிரமான ஆர்வத்தை மியன்மார் அரசு, சுற்றுலா சங்கங்கள் மற்றும் குறிப்பாக மியன்மார் ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளனர்.
கோவிட்டின் பிந்தைய கட்டத்தில் இலங்கைக்கான பௌத்த சுற்றுலாப் பயணிகளை வரவேற்பதற்கு இலங்கை எதிர்பார்ப்பதனால், இது ஒரு சிறந்த முயற்சி என்றும், சரியான நேரத்தில் பொருத்தமானது என்றும் இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் உதவிப் பணிப்பாளர் ஜீவன பெர்னாண்டோ பாராட்டினார். இதுதொடர்பாக, மியன்மாரில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிப்பதற்கான பிரச்சாரத்தை மேற்கொள்வதற்காக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம் தமது முழுமையான ஆதரவை உறுதிப்படுத்தியது.
மியன்மாருக்கு விமானங்களை ஆரம்பிப்பதானது இரு தரப்பிலிருந்துமான சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியாக இருக்கும் என்றும், சுற்றுலாப் பயணிகளுக்காக இலங்கை விமான நிலையத்தை ஜனவரி 21ஆந் திகதி திறப்பதற்குத் தயாராகி வருவதால் இது சரியான நேரத்தில் பொருத்தமானது என்றும் தனது கருத்துக்களில் வெளியுறவுச் செயலாளர் தெரிவித்தார். குறிப்பாக, தென்கிழக்கு ஆசியாவிலுள்ள உடனடி அண்டை நாடுகளில் கவனம் செலுத்த அதிமேதகு ஜனாதிபதி விரும்புகின்றார். மியன்மார் இலங்கையின் மிக நெருக்கமான கடல் சார் அண்டை நாடுகளில் ஒன்றாகும் என்றும் வர்த்தகத் தொடர்புகளை மேம்படுத்துவதற்கான பெரும் சாத்தியங்கள் உள்ளதாகவும் வெளியுறவுச் செயலாளர் வலியுறுத்தினார்.
மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் நலின் த சில்வா, இராஜாங்க செயலாளர் மற்றும் விமானப் போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் அதிகாரிகள், மேலதிக செயலாளர் (கிழக்கு), பிரதி சட்ட ஆலோசகர், வெளிநாட்டு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மியன்மாரில் உள்ள இலங்கைத் தூதரகம், இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகம் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஆகியவற்றின் அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
பௌத்த மதத்தை அடிப்படையாகக் கொண்ட வரலாற்றில் இலங்கையும் மியன்மாரும் கி.மு. 4 ஆம் நூற்றாண்டுக்கு முந்தியவையாகும். அனுராதபுர இராச்சியத்தின் போது பல பிக்குகள் மற்றும் சாதாரண மக்கள் இலங்கைக்கு அடிக்கடி விஜயம் செய்திருந்ததுடன், பொலன்னறுவை இராச்சியத்தின் போது முதலாம் விஜயபாகு, முதலாம் பராக்கிரமபாகு மற்றும் இரண்டாம் விஜயபாகு ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு காணப்பட்டது. 1865ஆம் ஆண்டில் ராமண்ண நிகாய நிறுவப்பட்டமையானது மியன்மாருடனான நீடித்த உறவின் குறிப்பிடத்தக்க மைல்கல்லாகக் குறிப்பிடப்படுகின்றது. இலங்கை 1949 இல் மியன்மாருடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தி, 2019 ல் 70 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளைக் கொண்டாடியது.
வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு
2021 ஜனவரி 15