மாலைதீவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் 2022 ஜூலை 29 ஆந் திகதி மாலைதீவில் உள்ள திலாபுஷி தீவில் நடமாடும் கொன்சியூலர் மற்றும் தொழிலாளர் சேவையொன்றை ஏற்பாடு செய்திருந்தது.
2022 மார்ச் 17ஆந் திகதி ஹூல்ஹூமலே தீவில் மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்ற தொடக்க நிகழ்விற்குப் பின்னர், இது போன்ற நடமாடும் சேவை இடம்பெற்ற இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
புதிய கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளுதல், இலங்கை சாரதி அனுமதிப் பத்திரங்களை மாற்றியமைத்தல், சான்றிதழ்களை சான்றளித்தல் மற்றும் தொழிலாளர் தொடர்பான பிரச்சினைகளை கவனித்தல் உட்பட பல சேவைகளை உயர்ஸ்தானிகரின் தலைமையிலான தூதரகக் குழுவினர் இலங்கையர்களுக்கு இதன்போது வழங்கினர்.
பெருமளவிலான இலங்கையர்கள் பணிபுரியும் இரண்டு படகு கட்டுமானம் மற்றும் பழுதுபார்க்கும் தளங்களையும் குழுவினர் பார்வையிட்டனர்.
இலங்கை - மாலைதீவு கூட்டு முயற்சி நிறுவனமான கீல் மரைன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் முகாமையாளர் அசங்க பெர்னாண்டோஇந்த நடமாடும் சேவையை நடாத்துவதற்காக நிறுவனத்தின் அலுவலக இடத்தை இலவசமாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
திலாஃபுஷி என்பது மாலேயின் மேற்கில் அமைந்துள்ள மாநகர நிலப்பரப்பு தொழில்துறைப் பகுதியாக உருவாக்கப்பட்ட ஒரு செயற்கைத் தீவு ஆகும். படகு உற்பத்தி சீமெந்துப் பொதியிடல், மித்தேன் எரிவாயு போத்தல் மற்றும் பல்வேறு பெரிய அளவிலான கிடங்கு ஆகியன தீவின் முக்கிய தொழில்துறை நடவடிக்கைகளாகும்.
இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,
மாலே, மாலைதீவு
2022 ஆகஸ்ட் 03