மாட்சிமை தங்கிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் அரச இறுதிச் சடங்குகளில்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்பு

மாட்சிமை தங்கிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் அரச இறுதிச் சடங்குகளில்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்பு

மறைந்த மாட்சிமை தங்கிய இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்குகளில்  கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2022 செப்டம்பர் 17 - 20 வரை இங்கிலாந்துக்கு விஜயம் செய்தார்.

முதல் பெண்மணி பேராசிரியர் மைத்ரீ விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கான  இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன ஆகியோருடன் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் மறைந்த மகாராணிக்கு ஜனாதிபதி செப்டம்பர் 18, ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து, பக்கிங்ஹாம் அரண்மனையில் மாட்சிமை தங்கிய மன்னர் சார்லஸ் III அவர்களால் வரவேற்பு உபசாரம் அளிக்கப்பட்டது.

செப்டம்பர் 19, திங்கட்கிழமை வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெற்ற அரச இறுதிச் சடங்கு  நிகழ்ச்சியில் ஜனாதிபதியும் முதல் பெண்மணியும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் உலகத் தலைவர்கள், அரச குடும்பங்கள், மாட்சிமை தங்கியவர்களின் பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள் உட்பட சுமார் இரண்டாயிரம் விருந்தினர்கள் கலந்துகொண்டனர். அன்றைய தினம் ஜனாதிபதி விக்கிரமசிங்க இரங்கல் புத்தகத்தில் கையொப்பமிட்டார். வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கான இராஜாங்கச் செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் தி ரைட் ஹொன் ஜேம்ஸ் க்ளவர்லி, திருச்சபை இல்லத்தில் வருகை தந்த உலகத் தலைவர்களுக்கு விருந்தளித்தார்.

லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள  பிரித்தானிய இலங்கை சமூகத்தின் பிரதிநிதிகளையும் ஜனாதிபதி விக்கிரமசிங்க சந்தித்தார். தேசம் குடியரசாக மாறுவதற்கு முன்னர் 20 வருடங்கள் இலங்கையின் பொதுநலவாயத் தலைவராகவும், இலங்கையின் மிக நீண்ட காலம் பதவி வகித்த அரச தலைவராகவும் இரண்டாம் எலிசபெத் மகாராணி இலங்கை மீது கொண்டிருந்த விஷேட பாசத்தை நினைவுகூர்ந்த அவர், அவரது மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு எனக் குறிப்பிட்டார். இலங்கை தனது புலம்பெயர் மக்கள் குறித்து பெருமிதம் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார். வர்த்தகம், சேவைகள், வணிகம் என இங்கிலாந்தின் பொருளாதாரத்தின் அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்த பிரித்தானிய இலங்கை சமூகத்தை வாழ்த்திய அவர், இலங்கையர்களாகவும் இலங்கை வம்சாவளியினராகவும் ஒன்றிணைந்து எமது தாய்நாட்டைக் கட்டியெழுப்ப உதவுமாறு கேட்டுக்கொண்டார். இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கான உத்தேச அலுவலகத்திற்கான கூட்டம் குறித்து ஜனாதிபதி விக்கிரமசிங்க அறிவித்ததுடன், இலங்கையில் உள்ள திட்டங்களில் அவர்களின் முதலீடுகளையும் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் இலாப நோக்கற்ற பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கு ஏற்கனவே முன்மொழிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தற்போதைய சவால்களை எதிர்கொள்வதற்கும், சமூக அமைப்புக்களைக் கட்டியெழுப்புவதற்கும் மற்றும் கல்வி முறையை நவீனமயப்படுத்துவதற்கும் இலங்கை தனது பொருளாதாரத்தை போட்டித்தன்மை வாய்ந்த ஏற்றுமதி சார்ந்த ஒன்றாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலாளர் தி ரைட் ஹொன் பட்ரிசியா ஸ்காட்லாந்து  கியூ.சி. ஐ ஜனாதிபதி செப்டெம்பர் 20ஆந் திகதி சந்தித்தார். பொதுநலவாய செயலகத்துடனான இலங்கையின் ஈடுபாடு மற்றும் பரஸ்பர நலன்கள் குறித்து அவர்கள் கலந்துரையாடினர். அவர் லண்டன் பௌத்த விகாரைக்கும் விஜயம் செய்தார். இதன் போது விகாரையின் பிரதம மதகுருவும், பிரித்தானியாவின் பிரதம சங்க நாயக்கருமான வணக்கத்திற்குரிய கலாநிதி போகொட சீலவிமல அவர்கள் இலங்கை ஜனாதிபதி மற்றும் இலங்கை மக்களுக்கு ஆசீர்வாதங்களை வழங்கினார்.

இலங்கை உயர் ஸ்தானிகராலயம்,

லண்டன்

2022 செப்டம்பர் 21

Please follow and like us:

Close