கடந்த ஜனவரி 17ஆந் திகதி உடல்நலக்குறைவு காரணமாக இத்தாலியில் காலமான துணைத் தூதுவர் விஷாரத நீலா விக்கிரமசிங்கவுக்கு பிராத்தனை செய்வதற்காக 2022 ஜனவரி 22ஆந் திகதி, சனிக்கிழமை இத்தாலியின் மிலானில் உள்ள காசா ஃபுனரேரியா மரணச்சடங்கு இல்லத்தில் மத அனுஷ்டானங்கள் நடைபெற்றன. மறைந்த துணைத் தூதுவரின் அன்புக் கணவர் திரு. கபில ஹேரத், உறவினர்கள், துணைத் தூதரகத்தின் ஊழியர்கள் மற்றும் இத்தாலியிலுள்ள இலங்கை சமூக உறுப்பினர்களின் பங்கேற்புடன் மிலானில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகத்தினால் இந்த சமய அனுஷ்டானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இத்தாலியின் பிரதம சங்கநாயக்க தேரரும், மிலானோ சர்வதேச பௌத்த நிலையத்தின் பிரதம மதகுருவுமான வணக்கத்திற்குரிய ராஜகிய பண்டித மகாகம விபுலசிறி தேரர் மறைந்த துணைத் தூதுவருக்கு பன்சுகுலவை நிறைவேற்றி தர்ம தேஷனவை மேற்கொண்டார். இலங்கை மக்களின் அன்பையும் மரியாதையையும் பெற்ற புகழ்பெற்ற கலைஞராக மறைந்த விஷாரத விக்கிரமசிங்க தேசத்திற்கு ஆற்றிய பெரும் சேவையை நாயக்க தேரர் நினைவு கூர்ந்தார். மிலானுக்கு வருகை தருவதற்கு முன்னர் மறைந்த திருமதி. விக்கிரமசிங்கவினால் திட்டமிடப்பட்டிருந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியாமல் போனமையினால் அவரது திடீர் மறைவு மிலான் மற்றும் வடக்கு இத்தாலியில் உள்ள இலங்கை சமூகத்திற்கு ஒரு இழப்பாகும் என நாயக்க தேரர் மேலும் குறிப்பிட்டார். ஐரோப்பாவின் பிரதம சங்கநாயக்க தேரரும், ஏதென்ஸ் பௌத்த விகாரையின் பிரதம மதகுருவுமான வணக்கத்திற்குரிய எலுவாபொல பஞ்ஞரதன தேரர் அனுஷாசனத்தை மேற்கொண்டார். இந்த சமய நிகழ்வுகளில் மிலான் தர்மநிகேதனாராமயவின் பிரதம மதகுருவான வணக்கத்திற்குரிய சாஸ்தபதி பெல்கஹதென்ன சீலவிமல தேரர் மற்றும் மிலானோ லங்காராம விகாரையின் பிரதம மதகுருவான வணக்கத்திற்குரிய வௌபெத்தே சுனீத தேரர் ஆகியோர் கலந்துகொண்டனர். இத்தாலியில் உள்ள கத்தோலிக்க சமூகத்தின் சார்பாக, அருட்தந்தை தேஷான் பெரேரா கத்தோலிக்கப் பிரார்த்தனைகளை நிகழ்த்தியதுடன், அருட்தந்தை பிரிங்கி ரொசான் அப்புஹாமியும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
மத அனுஷ்டானங்களின் நிறைவில், மிலானுக்கு வருகை தந்து, மறைந்த தனது பாரியாருக்கு வழங்கிய நேர்மையான உதவிகளுக்காக மறைந்த துணைத் தூதுவரின் கணவர் கபில ஹேரத், துணைத் தூதரகம் மற்றும் இத்தாலியில் வாழும் இலங்கைச் சமூகத்தினருக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். மறைந்த துணைத் தூதுவர் இலங்கைச் சமூகத்திற்கு தனது பதவிக்காலத்தில் வழங்க விரும்பிய சேவைகளை மேலும் நினைவுகூர்ந்த அவர், ஒரு சிறந்த கலைஞராக அவரது உணர்வையும் குறிப்பிட்டார். இலங்கை சமூகத்தின் சார்பாக திரு. ஹேமந்த பீரிஸ் உரையாற்றினார்.
மறைந்த துணைத் தூதுவரின் சடலம் இந்த வாரத்தின் தொடக்கத்தில் இலங்கைக்குத் திருப்பி அனுப்பிவைக்கப்படவுள்ளது.
மிலானில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம்,
இத்தாலி
2022 ஜனவரி 24