மனித உரிமைகள் பேரவையின் 44 வது அமர்வு நிகழ்ச்சி நிரல் 3: அமைதியாக ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் மற்றும் ஒருங்கிணைவதற்கான உரிமைகள் குறித்த சிறப்பு அறிக்கையாளருடனான ஊடாடும் உரையாடல் 09 ஜூலை 2020

மனித உரிமைகள் பேரவையின் 44 வது அமர்வு நிகழ்ச்சி நிரல் 3: அமைதியாக ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் மற்றும் ஒருங்கிணைவதற்கான உரிமைகள் குறித்த சிறப்பு அறிக்கையாளருடனான ஊடாடும் உரையாடல் 09 ஜூலை 2020

Pic

 மனித உரிமைகள் பேரவையின் 44 வது அமர்வு
 
நிகழ்ச்சி நிரல் 3: அமைதியாக ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் மற்றும் ஒருங்கிணைவதற்கான உரிமைகள் குறித்த சிறப்பு அறிக்கையாளருடனான ஊடாடும் உரையாடல்
 
09 ஜூலை 2020
 
இலங்கையின் அறிக்கை

உப தலைவர் அவர்களே,

2019, ஜூலை 18 - 26 வரை இலங்கைக்கு விஜயம் செய்த அமைதியாக ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் மற்றும் ஒருங்கிணைவதற்கான உரிமைகள் குறித்த சிறப்பு அறிக்கையாளரான திரு. க்லெமன்ட் நியாலெட்சொசி வூல் அவர்களின் அறிக்கைக்கு இலங்கை நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது (A/HRC/44/50/Add.1). சிறப்பு அறிக்கையாளரின் மேம்பட்ட திருத்தப்படாத அறிக்கையின் உள்ளடக்கங்கள் குறித்து இலங்கை அரசாங்கம் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதுடன், அவற்றில் சில இன்று வழங்கப்பட்ட இறுதிப் பதிப்பில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ஊடாடும் உரையாடலில், அறிக்கையிலுள்ள விடயங்களில் மேலும் சில கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள விரும்பும் அதே வேளை, கிடைக்கக்கூடிய புதுப்பிப்புக்களை வழங்குவதற்கும் விரும்புகின்றோம்.

உப தலைவர் அவர்களே,

சிறப்பு அறிக்கையாளர் தனது அறிக்கையில் ஏற்றுக் கொண்டபடி, சிறப்பு அறிக்கையாளருடன் ஆக்கபூர்வமாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஈடுபடுவதற்கான உறுதிப்பாட்டை நிரூபிக்கும் முகமாக, 'வருகைக்கு முன்னும் பின்னும், குறிப்பாக, அந்த நேரத்தில் முன்வைக்கப்பட்ட பெரும் சிரமங்களின் போது' இலங்கை அரசாங்கமானது சிறப்பு வருகையாளருக்கு முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கியது.

இலங்கையின் 'மோதல்களுக்குப் பிந்தைய மற்றும் பல இன சமூகமாக குறிப்பிட்ட சூழ்நிலைகள்' மற்றும் ஈஸ்டர் ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறப்பு அறிக்கையாளரின் இரங்கல் ஆகிய அறிக்கையிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட விடயங்களை நாங்கள் கவனத்தில் கொள்கின்றோம்.

பயங்கரவாதத்தின் புதிய வெளிப்பாட்டுடன் தொடர்புடைய சவால்களுக்கு நாடு முகங்கொடுத்துக்கொண்டிருந்தபோதும் சிறப்பு அறிக்கையாளரின் வருகைக்கான வசதிகளை வழங்கியமையானது, ஐ.நா. மனித உரிமை வழிமுறைகளுடன் ஆக்கபூர்வமான ஈடுபாட்டைத் தொடருவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை நிரூபிக்கின்றது. கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு சிறப்பு நடைமுறை ஆணைகளை வைத்திருப்பவர்கள் மேற்கொண்ட இலங்கைக்கான 9 அரச விஜயங்களில் சிறப்பு அறிக்கையாளரின் விஜயமும் ஒன்றாவதுடன், இந்தக் கூட்டுறவு உரையாடலை வளர்ப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.

உப தலைவர் அவர்களே,

ஜனநாயகம் முழுமையாக உணரப்படுவதற்கு அமைதியாக ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் மற்றும் ஒருங்கிணைவதற்கான உரிமைகள் அவசியம் என்ற சிறப்பு அறிக்கையாளரின் கருத்துடன் இலங்கை ஒன்றுபடுகின்றது. இந்த உரிமைகளுக்கு நீண்டகாலமாக உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் இலங்கையின் அரசியலமைப்பால் சாட்சியமளிக்கப்படுகின்றது. இலங்கையில் தொழிற்சங்க இயக்கம் 1900 களின் முற்பகுதியில் இருந்து செயற்பட்டு வருவதுடன், இது அமைதியாக ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் மற்றும் ஒருங்கிணைவதற்கான தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் மட்டுமல்லாமல், 1930 கள் மற்றும் 1940 களில் காலனித்துவ ஆட்சியாளர்களால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ஜனநாயகத்திற்கான போராட்டத்திலும் ஒரு முக்கிய உந்துதலாக இருந்து வருகின்றது.

இந்த உரிமைகளுக்கு இன்று அரசியலமைப்பின் 14 வது பிரிவின் கீழ் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ளதுடன், அவை சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை அங்கீகரித்த வரம்புகள் மற்றும் அரசியலமைப்பின் 15 வது பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள விதிவிலக்கான காரணங்களுக்கு மட்டுமே உட்பட்டவையாகும். பிரிவு 14 இல் இலங்கை நீதித்துறையானது அமைதியாக ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் மற்றும் ஒருங்கிணைவதற்கான உரிமைகளை ஒரு நியாயமான அடிப்படை உரிமையாக உச்சநீதிமன்றத் தீர்ப்புக்களின் வாயிலாக எவ்வாறு தொடர்ந்தும் நிலைநிறுத்தியுள்ளது என்பதைக் குறிக்கின்றது. இலங்கையின் துடிப்பான ஜனநாயக செயற்பாட்டில், இந்த உரிமைகள் எவ்வாறு மக்களால் அனுபவிக்கப்படுகின்றன என்பதை நாட்டில் இடம்பெறும் பல்வேறு குழுக்களின் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஏனைய விதமான ஒன்றுகூடல்கள் சான்று பகர்கின்றன.

மனித உரிமை ஆர்வலர்கள், ஏனைய சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் உட்பட இலங்கை சமுதாயத்தில் இந்த அரசியலமைப்பு உரிமைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. முதலாளிகளால் இடம்பெறும் நியாயமற்ற தொழிலாளர் நடைமுறைகளைத் தடைசெய்வதற்காக 1999 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க தொழில்துறை பிணக்குச் (திருத்தம்) சட்டமானது, எந்தவொரு முதலாளியும் பின்வருவனவற்றை செய்யக்கூடாது என குறிப்பிடுகின்றது -

(அ)     எந்தவொரு தொழிற்சங்கத்திலும் சேர, அல்லது சேருவதைத் தவிர்க்க, அல்லது தொழிலாளி ஒருவர் உறுப்பினராக இருக்கும் ஒரு தொழிற்சங்கத்தின் உறுப்புரிமையிலிருந்து விலகுவதை வேலை செய்யும் நிபந்தனையாக தேவைப்படுத்துவது,

(ஆ)    ஒரு தொழிற்சங்கத்தின் உறுப்பினர் அல்லது தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் காரணமாக ஒரு தொழிலாளியை பணிநீக்கம் செய்தல்,

(இ)     ஒரு உறுப்பினர், அலுவலகப் பொறுப்பாளர் அல்லது ஒரு தொழிற்சங்கத்தின் பிரதிநிதியாக தொழிலாளி ஒருவர் மாறுவதைத் தடுக்கும் நோக்கத்திற்காக அவருக்கு ஏதேனும் தூண்டுதல் அல்லது வாக்குறுதியைக் கொடுத்தல்,

(ஈ)      பின்வருவனவற்றை செய்வதற்கு ஒரு பணியாளரைத் தடுத்தல்,

  • ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்குதல், அல்லது
  • நிதி அல்லது ஏனைய வழிகளில் ஒரு தொழிற்சங்கத்தை ஆதரித்தல்,

(உ)     ஒரு தொழிற்சங்கத்தின் நடவடிக்கைகளை நடாத்துவதில் தலையிடுதல்,

(ஊ)    பின்வருவனவற்றுக்காக ஒரு தொழிற்சங்கத்தின் எந்தவொரு தொழிலாளி அல்லது அலுவலகப் பொறுப்பாளரை நிராகரித்தல் அல்லது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தல்;

  • எந்தவொரு தீர்ப்பாயத்திற்கும் அல்லது அதிகாரமுள்ள நபருக்கும் முன்பாக அத்தகைய பணியாளர் அல்லது அலுவலகப் பொறுப்பாளர் நல்ல நம்பிக்கையுடன் அளித்த அறிக்கைக்கு, அல்லது
  • ஒரு தொழில்துறை பிணக்கைத் தொடர்ந்து, அத்தகைய தொழிலாளி அல்லது அலுவலகப் பொறுப்பாளரால் செய்யப்பட்ட தொழிற்சங்க உறுப்பினர்களின் நிவாரணம் பெறுவதற்கான அல்லது அத்தகைய உறுப்பினர்களின் பணி நிலைமைகளை மேம்படுத்துவதற்கான வேலைவாய்ப்பு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பான முதலாளியின் செயல்கள் அல்லது விடுபடுதல் தொடர்பான எந்தவொரு அறிக்கைக்கு,

(எ)      நாற்பது சதவீதத்திற்கும் குறைவான தொழிலாளர்கள் இருப்பின், ஒரு தொழிற்சங்கத்துடன் பேரம் பேச மறுத்தல். இந்த பந்தியின் நோக்கத்திற்காக, குறைந்தது நாற்பது சதவிகிதம் தொழிலாளர்கள் யாருடைய சார்பாக பேரம் பேச முற்படுகிறார்கள் என்பதை அறிவதற்காக தொழில் ஆணையாளர் அல்லது அவர் சார்பாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு அதிகாரி எந்தவொரு பணியிடத்திலும் ஒரு வாக்கெடுப்பை நடத்தலாம்,

சர்வதேச மட்டத்தில், இலங்கை அனைத்து முக்கிய ஐ.நா. மனித உரிமை ஒப்பந்தங்களையும், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பல அடிப்படை சாசனங்களையும், குறிப்பாக ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் மற்றும் ஒழுங்கமைக்கும் உரிமையைப் பாதுகாத்தலுக்கான சாசன இல. 98 மற்றும் ஒழுங்கமைத்தல் மற்றும் ஒன்றாக பேரம் பேசுவதற்கான உரிமைக்கான சாசன இல. 87 ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

உப தலைவர் அவர்களே,

ஜனநாயக விதிகளை அடிப்படையாகக் கொண்ட சமூகங்களுக்கான ஒரு முக்கிய சவாலானது போட்டியிடும் மனித உரிமைகளுக்கு இடையில் ஒரு சமமான சமநிலையை ஏற்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. எனவே, எவ்வாறு அமைதியாக ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் மற்றும் ஒருங்கிணைவதற்கான உரிமைகள் மிக முக்கியமானவையோ, அது போலவே ஏனைய நபர்கள் அல்லது குழுக்களின் உரிமைகளை மீறாத வகையில் அவை பொறுப்புடன் செயற்படுவதும் முக்கியமாகும். எமது பார்வையில், சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சாசனத்தின் 'தேசிய பாதுகாப்பு அல்லது பொதுப் பாதுகாப்பு, பொது ஒழுங்கு, பாதுகாப்பு பொது சுகாதாரம் அல்லது ஒழுக்கநெறிகள் அல்லது மற்றவர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பாதுகாத்தல்' என்ற வகையிலான பிரிவுகள் 21 மற்றும் 22 இல் உள்ள ஒன்றுகூடுதல் / சங்கம் மீதான கட்டுப்பாடுகளை இது அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. குறிப்பாக பல இன மற்றும் பல மத அமைப்பைக் கொண்ட வளர்ந்து வரும் தேசத்தில், 'இன அல்லது மத நல்லிணக்கம்' மற்றும் 'தேசிய பொருளாதாரம்' போன்ற இந்த உரிமைகளுக்கான வரம்புகளுக்கு அடிப்படையாக இலங்கை அரசியலமைப்பின் கீழ் அமைவதும் இதே கருத்தேயாகும்.

அமைதியாக ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் மற்றும் ஒருங்கிணைவதற்கான உரிமைகள் மீதான இந்த வரம்புகளானது, சட்டபூர்வமான தன்மை, தேவை மற்றும் விகிதாசாரத்தின் கொள்கைகளுக்கு ஏற்ப பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய இலங்கை அரசாங்கம் பாடுபட்டுள்ளது:

  • ஈஸ்டர் ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர் அறிவிக்கப்பட்ட அவசரகால விதிமுறைகள், பொருந்தக்கூடிய சட்டத்தின்படி, அவற்றின் நீட்டிப்புக்கு உத்தரவாதமளிக்கும் சூழ்நிலைகள் நிறுத்தப்பட்டவுடன் உடனடியாக நீக்கப்பட்டன. 'பயங்கரவாதத் தாக்குதல்களில் இருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கான நியாயமான தேவையை' சிறப்பு அறிக்கையாளர் அங்கீகரித்திருப்பதை நாங்கள் ஒப்புக்கொள்வதுடன், இந்த விதிமுறைகளின் கீழ் கைது செய்யப்பட்ட நபர்கள் விரைவாக விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர் அல்லது பொருத்தமான சட்ட நடைமுறைகளுக்கு அனுப்பப்பட்டனர் என்பதைப் புதுப்பிக்க விரும்புகின்றோம்.
  • அரசு சாரா நிறுவனங்களின் பதிவு தொடர்பாக, பதிவுசெய்தல் தொடர்பான தேவைகள், சட்டபூர்வமான தேசிய பாதுகாப்பு நலன்களுடன் சங்கத்தின் சுதந்திரத்தை பாதுகாப்பதில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை சமநிலைப்படுத்தும் நோக்கம் கொண்டவை என்பதை நாங்கள் கவனிக்க விரும்புகின்றோம். பயங்கரவாதிகள் தமது நடவடிக்கைகள் / அமைப்புக்களுக்கான நிதியை மாற்றுவதற்காக ஒரு முறைப்படுத்தப்படாத செயன்முறையை தவறாக பயன்படுத்துவதற்கான வாய்ப்பை ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்களுக்குப் பின்னர் நடாத்தப்பட்ட விசாரணைகள் சுட்டிக்காட்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
  • சில பொது சேவைகள் அத்தியாவசியமானவையாக அறிவிக்கப்படுவதைப் பொறுத்தவரை, சில தொழிற்சங்க நடவடிக்கைகள் பொது மக்களின் உரிமைகளுக்கு உடனடி அச்சுறுத்தலை ஏற்படுத்திய நிகழ்வுகளில் மட்டுமே இந்த சட்ட விதிகள் அரசாங்கத்தால் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். போக்குவரத்துச் சேவை ஊழியர்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்த நடவடிக்கை மக்கள் தொகையில் ஒரு பெரிய பிரிவின் அடிப்படை மனித உரிமைகளை அச்சுறுத்தியபோது, இந்தச் சட்டம் சமீப காலங்களில் இரண்டு முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை முன்னிலைப்படுத்த விரும்புகின்றோம்.
  • சிறப்பு அறிக்கையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவிப்பின் தேவையானது, பொது வாழ்க்கையை சீர்குலைக்கும் நோக்கில், பொது வீதிகளில் ஏற்படக்கூடிய தடைகளை நிர்வகிக்கும் நோக்குடன், குறிப்பாக அவசர நேரங்களில், அதன் விளைவாக ஏற்படக்கூடிய ஊர்வலங்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த ஆண்டு பெப்ரவரி முதல், மக்கள் தமது போராட்டங்களை அல்லது கூட்டங்களை ஏனைய மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு குறைந்தபட்சம் இடையூறு விளைவிக்காமல் முன்னெடுப்பதற்காக தலைநகரின் மையத்தில் ஒரு பிரத்யேக நில இடப்பரப்பு ஒதுக்கப்பட்டுள்ளது.
  • சிறப்பு அறிக்கையாளர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, சட்டவிரோத கூட்டங்களைக் கலைப்பதற்கான நடவடிக்கைகள் சட்டபூர்வமான, விகிதாசார மற்றும் முற்றிலும் சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிப்பதனையும், பாதுகாப்பதனையும் நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும் என்ற வகையில் பொலிஸ் திணைக்களம் 2016 இல் பொலிஸாருக்கு தெளிவான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. மக்களின் அடிப்படை உரிமைகளை மீறாத வகையில், நிர்ணயிக்கப்பட்ட சட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்களின்படி சாத்தியமான கடைசி முயற்சியாக மட்டுமே சக்தியைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றது. பொலிஸ் உறுப்பினர்கள் தமது மனித உரிமை பயிற்சித் திட்டங்களின் ஒரு பகுதியாக இது தொடர்பாக வழக்கமான பயிற்சியைப் பெற்றுக் கொள்கின்றார்கள். இந்த உத்தரவுகளை முழுமையாக அமுல்படுத்துவதை உறுதி செய்வதில் அரசாங்கம் செயற்படும் அதே நேரத்தில் தவறான அதிகாரிகள் சட்டத்தின் சரியான செயன்முறைக்கு ஏற்ப பொறுப்புக்கூறுவதனை உறுதிசெய்கின்றது.

கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல் எனக் கூறப்படும் அறிக்கைகள் தொடர்பில், குறித்த சம்பவங்களை விசாரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்காக, சட்ட அமுலாக்க அதிகாரிகளிடம் அல்லது இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு அல்லது தேசிய பொலிஸ் ஆணைக்குழு போன்ற சுயாதீனமான தேசிய நிறுவனங்களுக்கு முறையான முறைப்பாடுகளை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கான எமது அழைப்பை மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றோம். சிவில் சமூக இடத்தைப் பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதுடன், அச்சுறுத்தல் எனக் கூறப்படும் முறைப்பாடுகள் விசாரிக்கப்பட்டு வழக்குத் தொடரப்படுவதை உறுதிசெய்கின்றன.

தேசிய பாதுகாப்பின் நலனுக்காக வழக்கமான பாதுகாப்பு வலையமைப்புக்களை செயற்படுத்துவதைத் தவிர, குறிப்பாக பேரழிவு தரும் ஈஸ்டர் ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர், பாதுகாப்புப் படைகள் மற்றும் புலனாய்வு அமைப்புக்கள் நாட்டில் எந்தவொரு குறிப்பிட்ட குழுவினரையும் கண்காணிப்பதில் ஈடுபடவில்லை என்பதையும் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றோம். உலகெங்கிலுமுள்ள தீவிரமான கூறுகளின் உத்திகளின் துல்லியமான நுட்பங்களுக்கிடையில் அதன் தேசிய பாதுகாப்பு நலன்களை சமரசம் செய்வதனால், எந்தவொரு நாடும் வருந்தத்தக்க விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என நாங்கள் நம்புகின்றோம். எனவே, பாதுகாப்புத் துறையின் சீர்திருத்தங்கள் தொடர்பான பரிந்துரைகளைச் செய்யும்போது, அந்த அப்பட்டமான யதார்த்தத்தை கவனத்தில் கொள்ளுமாறு இலங்கை அரசாங்கம் சிறப்பு அறிக்கையாளரைக் கோருகின்றது.

மத சிறுபான்மையினரை துன்புறுத்துவதாகக் கூறப்படுவது தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், அனைத்து மதத்தினரையும் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வகையில், பிரதான மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் சமூகங்களிடையே வெறுப்பைத் தூண்டுவதைத் தடுப்பதற்காக, தண்டனைச் சட்டத்தில் ஒரு திருத்தம் பரிசீலிக்கப்படுகின்றது.

இறுதியாக, உப தலைவர் அவர்களே, அமைதியாக ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் மற்றும் ஒருங்கிணைதல் மற்றும் இந்த சபையின் ஏனைய சிறப்பு நடைமுறை ஆணைகளை வைத்திருப்பவர்களுடன், எமது உள்நாட்டுக் கொள்கைகள் மற்றும் முன்னுரிமைகளின் அமைப்பில் தொடர்ந்தும் ஈடுபடுவதற்கான தனது உறுதிப்பாட்டை இலங்கை மீண்டும் தெரிவிக்க விரும்புகின்றது.

நன்றி.

Please follow and like us:

Close