மதம் அல்லது நம்பிக்கைச் சுதந்திரத்திற்கான சிறப்பு அறிக்கையாளரின் இலங்கை விஜயம் சம்பந்தமாக மனித உரிமைகள் பேரவையின் 43 வது அமர்வில் 2020 மார்ச் 02 ஆந் திகதி அவரால் வழங்கப்பட்ட அறிக்கை தொடர்பில் அவருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையிலான இலங்கையின் அறிக்கை

மதம் அல்லது நம்பிக்கைச் சுதந்திரத்திற்கான சிறப்பு அறிக்கையாளரின் இலங்கை விஜயம் சம்பந்தமாக மனித உரிமைகள் பேரவையின் 43 வது அமர்வில் 2020 மார்ச் 02 ஆந் திகதி அவரால் வழங்கப்பட்ட அறிக்கை தொடர்பில் அவருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையிலான இலங்கையின் அறிக்கை

 pic1

தலைவர் அவர்களே,

மத சுதந்திரம் அல்லது நம்பிக்கையின் சிறப்பு அறிக்கையாளர் திரு அஹ்மத் ஷாஹீத் 2019 ஆகஸ்ட் 15 முதல் 26 ஆகஸ்ட் வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து வெளியிட்ட அறிக்கையைக் கவனத்தில் கொண்ட இலங்கை, இன்று இச்சபையில் இவ்வறிக்கையை வழங்குகிறது (A/HRC/43/48/Add.2). சிறப்பு அறிக்கையாளரின் மேம்பட்ட திருத்தப்படாத அறிக்கையானது, இலங்கையின் கருத்துக்களுக்காக, பெப்ரவரி 28, 2020 காலக்கெடுவுடன் பெப்ரவரி 3, 2020 அன்று, அதாவது, கடந்த வெள்ளிக்கிழமை, இலங்கைக்கு வழங்கப்பட்டது. இது இன்று (திங்கட்கிழமை) ஒரு ஊடாடும் உரையாடலுக்கு வழிவகுத்துள்ளது.

இருப்பினும், மட்டுப்படுத்தப்பட்ட இந்த காலப்பகுதியில் சிறப்பு அறிக்கையாளரின் அறிக்கைக்கு இலங்கை சில பொதுவான அவதானிப்புகளை வழங்கவிரும்புகிறது. வரவிருக்கும் எமது முழுமையான அவதானிப்புக்களும், இந்த அறிக்கையின் ஒரு அங்கமாக பிரசுரிக்கப்படவேண்டுமென நாம் கோரிக்கை விடுக்கின்றோம். சிறப்பு அறிக்கையானது; ஐ.எஸ் பயங்கரவாதிகளால் ஈர்க்கப்பட்ட சில உள்நாட்டுப் பயங்கரவாதக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்டதும் வழிபாட்டிடங்கள் மற்றும் ஹோட்டல்களில் அப்பாவி மக்களைக் குறிவைத்து, 45 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட 258 பேரைப் பலிகொண்டதுமான கொடுமையான தொடர் குண்டுத்தாக்குதல்கள் நடந்தேறிய நான்கே மாதங்களில், 2019 ஆகஸ்ட் இல் தான் இலங்கைக்கு கிடைத்தது. தேசம் எதிர்கொண்ட பல்வேறு சவால்களின் போது, இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டமையானது, ஐ.நா. மனித உரிமை பொறிமுறைகளுடன் திறந்ததும் ஆக்கபூர்வமானதுமான உரையாடல்களைப் பேணுவதென்ற அரசாங்கத்தின் கொள்கையின் வெளிப்பாடாகும்.

இன, மத வேறுபாடுகள் இருந்தபோதிலும் இலங்கை மக்கள் பல நூற்றாண்டுகளாக இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர், தொடர்ந்தும் வாழ்கின்றனர். ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாக பிரிவினைவாத பயங்கரவாதத்தின் வேதனையை அனுபவித்த அவர்கள், கடும் போராட்டத்தின் மூலம் வென்ற அமைதியையும் சுதந்திரத்தையும் அனுபவித்து வந்ததுடன், கடந்த தசாப்தத்தில் நல்லிணக்கப் பாதையிலும் தேசிய ஆற்றுப்படுத்தல் முயற்சிகளிலும் இறங்கினர். ஆனபோதிலும், உயிர்த்தெழுந்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள்; உலகளாவிய அச்சுறுத்தலான பயங்கரவாதம்; அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதத்தின் ஒரு பொது எதிரியை நாம் எதிர்த்துப் போராடுகிறோம் என்பதை நினைவூட்டியது.

இச்சூழ்நிலையில், சிறப்பு அறிக்கையாளரின் அறிக்கையானது, உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து சில மாதங்களிலேயே இலங்கையில் மத சுதந்திரம் அல்லது நம்பிக்கைக்கான இடத்தை தீர்மானிக்க முற்பட்டது துரதிர்ஷ்டவசமானது என்று நாங்கள் கருதுகிறோம். இந்த தாக்குதல்களின் அளவு இலங்கையில் ஒரு தேசிய அவசரகால நிலையை ஏற்படுத்தி, அனைத்து சமூகங்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பின் நலனுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள பயங்கரவாதக் கூறுகளை அடையாளம் கண்டு மட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற நிலையை ஏற்படுத்திய அதேவேளை, தேசிய பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகளுக்கு இடையிலான நுட்பமான சமநிலையையும் பேணவேண்டியிருந்தமை நினைவுகூரத்தக்கது. இத் தாக்குதல்களுக்குப் பின்னர், உள்நாட்டு அமைதியின்மையின் எந்தவொரு பழிவாங்கும் செயல்களையும் தடுக்கவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், மிக முக்கியமாக அனைத்து மக்களதும், குறிப்பாக முஸ்லீம் சமூகத்தின் பாதுகாப்பையும் உறுதி செய்ய அரசாங்கம் உடனடியாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது. நிலைமையைக் கட்டுப்படுத்த உதவிய நாட்டின் சிவில் மற்றும் அரசியல் தலைமையின் ஆக்கபூர்வமான மற்றும் நல்லிணக்க அணுகுமுறைகள் மற்றும் அழைப்புகள் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பாராட்டப்பட்டன. குறிப்பாக முஸ்லீம் சமூகத்தினர் விசாரணைகள் மற்றும் தேடல் நடவடிக்கைகளில் பாதுகாப்பு நிறுவனங்களுடன் ஒத்துழைப்பதற்குச் செயலூக்கமான நடவடிக்கைகளை எடுத்தனர். கைதான சந்தேக நபர்களுக்குச் சட்டரீதியான பாதுகாப்புகள் வழங்கப்பட்டதுடன் அவர்களின் நிலைமையைக் கண்காணிக்க சுயாதீன நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. பயங்கரவாத தாக்குதல்கள் நடந்த 3 வாரங்களுக்குப் பின் இடம்பெற்ற குழுவன்முறைச் சம்பவங்கள் இனரீதியாக ஊக்கமளிக்கப்படவில்லை, அவை சட்டத்திற்கு கட்டுப்படாதோரால் மேற்கொள்ளப்பட்டன. சிலரைக் கைது செய்தல் மற்றும் சம்பந்தப்பட்டவர்களை நீதியின் முன் நிறுத்துவதன் மூலம் அரசாங்கம் இக்கும்பல்களைத் திறம்பட கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. விரைவில் இந்த நாடு சாதாரண நிலைக்குத் திரும்பியதுடன், சகல இலங்கையர்களுக்கும், நாட்டுக்கு வருகை தருபவர்களுக்குமான பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட சட்ட ஏற்பாடுகளையும் மற்றும் தேவையான சட்ட செயற்பாடுகளையும் செயற்படுத்துவதன் மூலம் சட்டமும் ஒழுங்கும் வலுவாக மீள நிறுவப்பட்டது. இதுவிடயத்தில் இலங்கை பாதுகாப்பு படையினரின் உடனடியான, தொழில் ஈடுபாடுள்ள நடவடிக்கையானது குறிப்பாகப் பாராட்டப்பட்டது.

அதனால், சிறப்பு அறிக்கையாளரின் அறிக்கையிலுள்ள; “இலங்கை பாதுகாப்பு படையினர் வன்முறையைத் தடுக்கவோ நிறுத்தவோ செயற்படாது வன்முறைக்கும்பலுடன் ஒத்துழைத்தமை” தொடர்பான “கடுமையான கரிசனங்கள்”, “இந்த வன்முறைக்கெதிரான அதிகாரிகளின் நடவடிக்கையின்மை” மற்றும் “வன்முறைச் செயல்கள் அதிகாரிகளின் மௌனம் மற்றும் செயற்பாடின்மையால் மகிழ்விக்கப்பட்டமை” ஆகிய தவறான குறிப்புக்களை இந்த அரசாங்கம்  நிராகரிக்கிறது. சம்பவங்கள் நடந்ததாகக் கூறப்பட்டவுடனேயே அவை முழுமையாக மறுக்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்ட பின்னரும் கூட, இந்த தவறான சம்பவங்கள் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளமை வருந்தத்தக்கது. சட்டத்திற்கேற்ப பயங்கரவாத செயல்களைத் தடுக்க குற்றவியல் விசாரணைகள் நடத்தப்பட்ட நிகழ்வுகளை, மதத்தின் அல்லது நம்பிக்கையின் சுதந்திரத்தை மீறும் முயற்சியாகச் சித்தரிக்க இந்த அறிக்கை முயன்றதும் வருந்தத்தக்கது.

ஆடை விதிகள் மீதான கட்டுப்பாடுகள் தொடர்பான குறிப்புகளைப் பொறுத்தவரை, அந்த நேரத்திலிருந்த உடனடியான பாதுகாப்பு அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, அடையாளத்தை மறைப்பதைத் தடுக்கும் நோக்கில், அவசரகால விதிமுறைகளின் கீழ் சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை ஒரு தற்காலிக நடவடிக்கையாகவே இருந்ததென்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களின் பாதுகாப்பு, ஒழுங்கு, உடல்நலம், அல்லது ஒழுக்கம் அல்லது மற்றவர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பாதுகாக்கும் நோக்கத்திற்காக ஒருவரின் மதம் அல்லது நம்பிக்கைகளின் சுதந்திரத்தை சட்டத்தினால் மட்டுப்படுத்துவதற்கு அனுமதிக்கிறது என, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை இக்கழகத்தின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம்.

சிறுபான்மையினரைப் பாதுகாக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச ஒப்பந்த சட்டம் பயன்படுத்தப்படவில்லை, ஆனால் மதம் அல்லது நம்பிக்கையின் சுதந்திரத்தைக் குறைக்கும் ஒரு "அடக்குமுறைச் சாதனமாக" மாறியுள்ளது என்று அறிக்கையில் தவறாக குறிப்பிடப்பட்டிருப்பதை இலங்கை திட்டவட்டமாக நிராகரிக்கிறது. 2007 இல் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச ஒப்பந்தச் சட்டம் இயற்றப்பட்டதிலிருந்து, இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் 90% பேர் பெரும்பான்மையான சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை இது தொடர்பில் நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். பௌத்தமதத்தின் “மேலாதிக்கத்தை” அடிப்படையாகக்கொண்டு மற்ற மதங்களின் மீது பாகுபாடு காட்டுவது பற்றி இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ள கருத்துகளைப் பொறுத்தவரையில், அரசியலமைப்பின் 9 வது பிரிவு புத்த சாசனத்தை பாதுகாக்கவும் வளர்க்கவும் அரசுக்கு தேவைப்படுகிறது என்பதையும் அதேநேரம், அந்த அரசியலமைப்பின் கீழ் சகல மதங்களுக்குமான உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன என்பதையும் நாம் வலியுறுத்த விரும்புகிறோம். இலங்கை அரசியலமைப்பு அல்லது தேசிய சட்டங்களில் எந்தவொரு ஏற்பாடும் மதம் அல்லது பொது வாழ்வின் எந்தவொரு பிரிவிலும் உள்ள நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு நபரை பாகுபடுத்த அனுமதிக்காது. மாறாக, அரசியலமைப்பின் 12 வது உறுப்புரையானது, இனம், மதம், மொழி, சாதி, பாலினம், அரசியல் கருத்து, பிறந்த இடம் அல்லது அத்தகைய காரணங்களை அடிப்படையாகக் கொண்ட பாகுபாட்டைத் தடை செய்கிறது.

சிறப்பு அறிக்கையாளரின் அறிக்கையில், சில நிகழ்வுகள், உச்சநீதிமன்றத்தின் தீர்மானங்கள் ஊகத்தின் அடிப்படையில் தவறாகப் பிரதிபலிக்கப்பட்டுள்ளன. வேறு சில சந்தர்ப்பங்களில் அரசியலமைப்பு ஏற்பாடுகள் தவறாகப் பிரதிபலிக்கப்பட்டுள்ளன, எடுத்துக்காட்டாக, மதம் மாறுவதற்கான மற்றும் மாற்றப்படுவதற்கான உரிமை குறித்த சிறப்பு அறிக்கையாளரின் கருத்துக்கள் உச்சநீதிமன்ற தீர்மானத்தின் தவறான பிரதிபலிப்பாகும்.

ஒரு குறிப்பிட்ட மதச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களை பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் அளவிற்கு தீவிரமயமாக்குவதற்கான இயக்கிகள் மற்றும் மூல காரணங்களை இந்த அறிக்கை போதுமான அளவில் விவாதிக்கத் தவறியதுடன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள், சந்தேக நபர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் உள்ளிட்ட, இலங்கை சமூகத்தின் வெவ்வேறு தரப்பினரிடமிருந்த பரந்த அளவிலான உள்ளீடுகளைக் கொண்டிருக்கவில்லை என்பதும் தெரிகிறது. வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் அவமதிப்பு ஆகியவற்றை விவரிப்பதில், பௌத்த வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள், அழித்தல் போன்ற சம்பவங்கள் மற்றும் நாட்டின் சில பகுதிகளில் பௌத்த வழிபாட்டாளர்களைத் தடுத்த நிகழ்வுகள் ஆகியவற்றைக் குறிப்பிட அறிக்கை தவறிவிட்டது.

சகல தரப்பிலுமுள்ள தீவிரவாத அம்சங்களைக் கவனத்தில் கொள்ளுதல், வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான அலுவலகம் மூலம் இழப்பீடு வழங்குதல், மற்றும் மதங்களுக்கிடையேயான சபைகளை அமைப்பதற்கான பொறிமுறைகளை அமைத்தலுக்கான வழிமுறைகளை அமைத்தல் போன்ற மத நல்லிணக்கத்தை வளர்ப்பதற்காக அரசாங்கமும் சட்ட அமுலாக்க முகவரமைப்புக்களும் மேற்கொண்ட உறுதியான நடவடிக்கைகளில் இந்த அறிக்கை போதுமான அளவில் கவனஞ்செலுத்தவில்லை.

ஏப்ரல் 21 க்குப் பின்னர், அனைத்து மதங்களின் சகல குடிமக்களையும் பாதுகாத்து உதவுவதில் இலங்கையர்களின் எழுச்சி மற்றும் ஒற்றுமையானது; முஸ்லிம்களின் தொழுகையின்போது பௌத்தர்களும் கிறிஸ்தவர்களும் அவர்களைப் பாதுகாத்ததன் மூலம் நிரூபித்துக்காட்டப்பட்டமை, சேதமடைந்த சொத்துக்களை புதுப்பித்தமை மற்றும் சேதமடைந்த தேவாலயங்களை பாதுகாப்பு படையினர் புதுப்பித்தமை ஆகியவை இந்த அறிக்கையில் பிரதிபலிக்கவில்லை என்பதும் துரதிர்ஷ்டவசமானது.

இந்தச் சவாலான காலகட்டத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழு போன்ற இலங்கையின் சுயாதீன நிறுவனங்களின் பாராட்டுக்குரிய செயற்பாடுகளும் அவற்றிற்கான கவனத்தைப் பெறவில்லை.

"பாடசாலைப் பாடத்திட்டமானது மனித உரிமைகள் கல்வியை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட வேண்டும்" என்று அறிக்கை குறிப்பிடுகிறது, ஆனால் மனித உரிமைகள் கல்வி ஏற்கனவே பாடசாலைகளில் தேசிய பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகவுள்ளது. பல்வேறு சமூகங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த பாடசாலைச் சிறுவர்களிடையே அதிக புரிந்துணர்வை வளர்ப்பதற்காக, பாடசாலைகள் உட்பட பல்வேறு மட்டங்களில் பல இணை பாடத்திட்ட திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டும் வழங்கப்பட்டும் வருகின்றன.

பிரச்சனைகள் தொடர்பில் கவனஞ்செலுத்துவதற்கான நம்பத்தகுந்த முகவரமைப்புகள், இயலளவு மற்றும் தேவையான சட்டக் கட்டமைப்பை இந்த ஆட்சி கொண்டுள்ளது என்பதை இலங்கை அரசாங்கம் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது. நாட்டின் அரசியலமைப்பிற்கேற்ப, அதன் அனைத்து மக்களின் மனசாட்சி மற்றும் மத சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் ஊக்குவிக்கவும் இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது.

சிறப்பு அறிக்கையாளருடனும் இக்கழகத்துடனும் ஆக்கபூர்வமானதும் அர்த்தமுள்ளதுமான வகையில் இந்த முடிவை நோக்கித் தொடர்ந்தும் ஈடுபடுவதை நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.

நன்றி

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close