பொருளாதார மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பு குறித்து தாய்லாந்தின்  தொழில்துறை  அமைச்சர் சூர்ய ஜங்ருங்ரேங்கிட்டுடன் தூதுவர் கொலொன்ன கலந்துரையாடல்

 பொருளாதார மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பு குறித்து தாய்லாந்தின்  தொழில்துறை  அமைச்சர் சூர்ய ஜங்ருங்ரேங்கிட்டுடன் தூதுவர் கொலொன்ன கலந்துரையாடல்

தாய்லாந்து இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவர் மற்றும் யுனெஸ்கெப்பின் நிரந்தரப் பிரதிநிதி சி.ஏ. சமிந்த ஐ. கொலொன்ன 2021 டிசம்பர் 07ஆந் திகதி தாய்லாந்தின் கைத்தொழில் அமைச்சர்  சூர்ய ஜங்ருங்ரேங்கிட்டை அவரது அமைச்சில் வைத்து சந்தித்தார்.

தூதுவரை அன்புடன் வரவேற்று, இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய இரு நாடுகளினதும் முதலீட்டுக் கொள்கைகளுக்கு இடையே உள்ள ஒற்றுமைகளைக் குறிப்பிட்ட அமைச்சர் ஜங்ருங்ரேங்கிட், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பெறுமதியை அதிகரிப்பதற்கு தாய்லாந்து எதிர்பார்த்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

எதிர்கால ஒத்துழைப்பிற்கான பகுதிகளாக உணவு பதப்படுத்துதல், இரத்தினங்கள் மற்றும்  ஆபரணங்கள், நாகரீக வடிவமைப்பு மற்றும் சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்கள் ஆகிய துறைகளில் நிபுணத்துவத்தை பரிமாறிக்கொள்ளுதல் அமைச்சர் ஜங்ருங்ரேங்கிட்டால் அடையாளம் காணப்பட்டன. தாய்லாந்துடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அவர் அழைப்பு விடுத்தார்.

இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கைத்தொழில் அமைச்சர் ஆகியோரின் அன்பான  வாழ்த்துக்களைத் தெரிவித்த தூதுவர் சமிந்த கொலொன்ன, தேசியப் பாதுகாப்பு, பொருளாதார அபிவிருத்தி மற்றும் வெளிநாட்டு உறவுகள் என்பன தற்போதைய அரசாங்கத்தின் தேசியக் கொள்கையின் மூன்று முக்கிய தூண்கள் எனவும், ஆசிய நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கையின் வெளிநாட்டு அமைச்சின் கீழ் பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் ஜங்ருங்ரேங்கிட் தெரிவித்த கருத்துக்களை ஆமோதித்த தூதுவர், தாய்லாந்துடன் கைச்சாத்திடப்பட்டுள்ள மூலோபாயப் பொருளாதார பங்காளித்துவ உடன்படிக்கையின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ள உட்கட்டமைப்பு, இரத்தினம் மற்றும் ஆபரணங்கள், விவசாயத் தொழில்,  மீன்பிடி, சுற்றுலா, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், நிதி ஒத்துழைப்பு, பொதியிடல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பத்து துறைகளில் ஒத்துழைப்பை விரைவுபடுத்துவதற்கும், தற்போதுள்ள மிகக்குறைந்த வர்த்தக அளவை அதிகரிப்பதற்கும் இலங்கை மிகவும் ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

போதுமான பொருளாதாரத் தத்துவம், கூட்டு முயற்சிகளுக்கான வணிகம் முதல் வணிகம்  வரையிலான கூட்டாண்மை, முதலீடு ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கையில் ஒரு கிராமம் ஒரு தயாரிப்புத் திட்டமாக செயந்படுத்தப்பட்ட தாய்லாந்தில் ஒரு டம்போன் ஒரு தயாரிப்புத் திட்டம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது

தூதுவரின் வேண்டுகோளுக்கு இணங்க, இலங்கையில் இல்மனைட், கிராஃபைட், மின்னணுவியல், மருந்துகள், வாகனங்கள் மற்றும் உதிரிப் பாகங்கள் மற்றும் தேயிலைக் கைத்தொழில்களில்  எதிர்கால ஒத்துழைப்புக்கான வழிகள் குறித்து தாய்லாந்து கைத்தொழில் கூட்டமைப்பு மற்றும் தனது சிரேஷ்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் ஜங்ருங்ரேங்கிட் அறிவுறுத்தினார்.

தூதுவர் கொலொன்ன எதிர்காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அமைச்சர் ஜங்ருங்ரேங்கிட்டிற்கு அழைப்பு விடுத்தார்.

கைத்தொழில் ஊக்குவிப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நட்டாபோல் ரங்சிட்போ,  பணிப்பாளர் பிரதானா புன்யாரிட், தொழில்துறை அமைச்சின் தொழில்துறை பொருளாதார அலுவலகத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் சிரிபென் கியாட்ஃபுங்பூ மற்றும் பேங்கொக்கில் உள்ள தூதரகத்தின் முதல் செயலாளர் சரித ரணதுங்க ஆகியோர் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

இலங்கையின் தூதரகம் மற்றும் நிரந்தரப் பணிமனை,

பேங்கொக்

2021 டிசம்பர் 13

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close