பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் வியட்நாமின் டொன் டக் தாங் பல்கலைக்கழகம் ஆகியவற்றின்  முகாமைத்துவக் கற்கைப் பீடங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு

பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் வியட்நாமின் டொன் டக் தாங் பல்கலைக்கழகம் ஆகியவற்றின்  முகாமைத்துவக் கற்கைப் பீடங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு

பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் வியட்நாமின் டொன் டக் தாங் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் முகாமைத்துவக் கற்கைப் பீடங்களின் கல்வியியலாளர்களுக்கு இடையேயான மெய்நிகர் சந்திப்பொன்றை வியட்நாமில் உள்ள இலங்கைத் தூதரகம் 2021 செப்டம்பர் 23ஆந் திகதி ஏற்பாடு செய்தது. இரு பல்கலைக்கழகங்களின் கல்வியாளர்களும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதுடன், கல்விப் பரிமாற்றங்கள், கூட்டு ஆராய்ச்சி, சர்வதேச மாநாடுகளில் பங்கேற்பு, முதுகலை மாணவர்களுக்கான குறுகிய ஆய்வு விஜயங்கள் மற்றும் குறுகிய இணையவழி கல்வித் திட்டங்களை  வழங்குதல் போன்றவற்றின் மூலம் மாணவர்களிடையேயான சாத்தியமான எதிர்கால ஒத்துழைப்புக்கள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும் முறைப்படுத்தவும் மற்றும் ஒத்துழைப்புக்காக அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் உடனடியாக நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நுழைவதற்கு கல்வியியலாளர்கள் ஒப்புக்கொண்டனர்.

தனது தொடக்க உரையில், அங்குள்ள கல்வியியலாளர்களுக்கும், மெய்நிகர் சந்திப்புக்குப் பொறுப்பான அமைப்பாளர்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்த வியட்நாமில் உள்ள இலங்கைத் தூதுவர் திரு. பிரசன்ன கமகே, இரு பல்கலைக்கழகங்களும் தேவையான கல்வித் திறனையும் ஏனைய நோக்கங்களையும் அடைந்து கொள்வதற்கு வலியுறுத்தினார். இத்தகைய முயற்சிகள் மூலம் மக்களுக்கிடையிலான தொடர்புகளை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்ததுடன், இரு பல்கலைக்கழகங்களின் கூட்டு முயற்சிகளுக்குமான தூதரகத்தின் ஆதரவை  மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இரு பல்கலைக்கழகங்களினதும் முகாமைத்துவப் பீடங்களுக்கிடையேயான வலுவான ஒற்றுமைகளின் காரணமாக, எதிர்கால ஒத்துழைப்புக்கான பல வாய்ப்புக்கள் இருப்பதை தனது கருத்துக்களில் டொன் டக் தாங் பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஒத்துழைப்பு, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி. டின் ஹோங் பாக் அடிக்கோடிட்டுக் காட்டினார். தனது பீடத்தினால் வழங்கப்படும் கல்வித் திட்டங்களின் தன்மை மற்றும் இந்த வகையான  சர்வதேச ஒத்துழைப்பின் மூலம் மாணவர்கள் மற்றும் கல்வி ஊழியர்களுக்கு சர்வதேச வெளிப்பாட்டிற்கான வழிகளைத் தொடர்வதற்கான விருப்பம் குறித்து பேராதனைப் பல்கலைக்கழக முகாமைத்துவப் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் அதுல ஏக்கநாயக்க விளக்கினார்.

டொன் டக் தாங் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவப் பீடத்தை கலாநிதி. டிரான் தி ஃபி புவாங் மற்றும் கலாநிதி. புங் மின் துவான் ஆகியோர் மேலும் பல சிரேஷ்ட ஊழியர்களின் உதவியுடன் பிரதிநிதித்துவப்படுத்தினர். செயற்பாட்டு முகாமைத்துவம் மற்றும் முதுகலைக் கற்கைத் திணைக்களங்களின் தலைவர் பேராசிரியர் ரவீந்திர எச். குருப்புகே, வணிக நிதித் திணைக்களத்தின் தலைவர் கலாநிதி. சுஜீவ கொடித்துவக்கு மற்றும் செயற்பாட்டு முகாமைத்துவத்  திணைக்களத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி. எஸ். மகேஸ்வரன் இந்த மெய்நிகர் சந்திப்பின் போது பேராசிரியர் ஏக்கநாயக்கிற்கு உதவினார்.

இலங்கைத் தூதரகம்,

ஹா நோய்

2021 செப்டம்பர் 28

Please follow and like us:

Close