புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் சேர் டி.பி. ஜயதிலக்கவின் உருவப்படத்தை சபாநாயகர் திறந்து வைப்பு

புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் சேர் டி.பி. ஜயதிலக்கவின் உருவப்படத்தை சபாநாயகர் திறந்து வைப்பு

நவீன இந்திய-இலங்கை உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டதன்  80வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இந்தியாவுக்கான இலங்கையின் முதலாவது பிரதிநிதியான சேர் டி.பி. ஜயதிலக்கவின் உருவப்படத்தை இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (28) புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் திறந்து வைத்தார்.

1942ஆம் ஆண்டு இந்தியாவுக்கான முதல் பிரதிநிதியாக சேர் டி.பி. ஜயதிலக்கவை இலங்கை  (அப்போதைய சிலோன்) அனுப்பியதிலிருந்து இந்த ஆண்டு 80வது ஆண்டு நிறைவைக் குறித்து நிற்கின்றது. இந்த ஆண்டு புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட முக்கியமான ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், சான்சரி கட்டிடத்தில் சேர் டி.பி. ஜயதிலக்க அவர்களின் உருவப்படத்தை திறந்து வைப்பது தொடர் நடவடிக்கைகளில் ஒன்றாகும். முன்னதாக, பெப்ரவரியில், உயர்ஸ்தானிகராலயம் அதன் சான்சரி கட்டிடத்திற்கு சேர் டி.பி. ஜயதிலக்க அவர்களின் பெயரை சூட்டியது.

உருவப்படத்தை திறந்து வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எளிமையான நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.பி. ரத்நாயக்க, ரோஹினி குமாரி விஜேரத்ன மற்றும் பாராளுமன்ற  செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர். சபாநாயகர் தலைமையிலான இலங்கை நாடாளுமன்றக் குழு சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு இலங்கை திரும்பும் வழியில் டில்லியில் தரித்திருந்தனர்.

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் உயர்ஸ்தானிகராலய  ஊழியர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

சேர் தொன் பரோன் ஜயதிலக்க, அரச நபர், பௌத்த கல்வியியலாளர், பரிஸ்டர், அவரது  சகாப்தத்தின் முன்னோடி இலக்கியவாதி மற்றும் ஒரு காலத்தில் இலங்கையின் உள்துறை அமைச்சர் ஆகிய பதவிகளை வகித்த அவர், கல்கத்தா மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவராவார். சேர் பரோன் முதன்முதலில் இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கான உணவுப் பொருட்கள் குறித்து பேச்சுவார்த்தை நடாத்துவதற்காக இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்ததுடன், பின்னர் அவர் புதுடில்லிக்கான இலங்கை அரசாங்கத்தின் முதல் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.

1948ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் முறையான இராஜதந்திர  உறவுகளை ஸ்தாபிப்பதற்கு முன்னர் சேர் டி.பி. ஜயதிலக்க இந்தியாவுக்கான இலங்கைப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டமையானது, இரு நாடுகளும் காலங்காலமாக அனுபவித்து வரும் மிகவும் சிறப்பான பிணைப்பு மற்றும் நெருங்கிய உறவின் சாட்சியமாகும்.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

புதுடில்லி

2022 செப்டம்பர் 01

Please follow and like us:

Close