புதிதாக நியமிக்கப்பட்ட இந்திய உயர் ஸ்தானிகர் வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்தார்

புதிதாக நியமிக்கப்பட்ட இந்திய உயர் ஸ்தானிகர் வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்தார்

Image1

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் போக்லே இன்று குடியரசுக் கட்டிடத்தில் வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவை மரியாதை நிமித்தம் சந்தித்தார். 2020 மே 14ஆந் திகதி தகைமைச் சான்றுகளை சமர்ப்பித்த பின்னர் உயர் ஸ்தானிகராக தனது பணிகளை ஆரம்பித்த முதலாவது தினத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, பரவலான இருதரப்புப் பிரச்சினைகள் குறித்த கருத்துக்களை வெளிநாட்டு உறவுகள் அமைச்சருடன் உயர் ஸ்தானிகர் போக்லே பரிமாறிக் கொண்டார்.

புதிய உயர் ஸ்தானிகரை வரவேற்ற அமைச்சர் குணவர்தன, இந்தியாவுடனான வலுவான மற்றும் ஆழ்ந்த ஒத்துழைப்புக்கான இலங்கையின் முழுமையான உறுதிப்பாட்டை உறுதிப்படுத்திய அதே நேரத்தில், கோவிட்-19 தொற்றுநோய் நிலைமைக்கு மத்தியில் இடம்பெற்ற தெளிவான நல்லெண்ணப் பரிமாற்றங்கள் தொடர்பில் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். அண்டை நாடுகளுடனான தனது முதல் கொள்கையினூடாக, இலங்கையுடனான நெருக்கமான ஒத்துழைப்புக்கான பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிமொழிகளை உயர் ஸ்தானிகர் போக்லே தெரிவித்தார்.

கோவிட்-19 நோய் நிலைமைக்குப் பின்னரான புதியதொரு சர்வதேச சூழலில், கடல்சார் ஒத்துழைப்பு, பாதுகாப்புப் பரிமாற்றங்கள், உணவு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்தல், திறன் விருத்திக்கான மேம்பட்ட உதவி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் பரஸ்பரம் நன்மை பயக்கும் வர்த்தகம், முதலீடு, வளர்ச்சி மற்றும் அரசியல் உறவுகளை நோக்கி பணியாற்றுவதற்கு இரண்டு பிரமுகர்களும் ஒப்புக்கொண்டனர். இரு நாடுகளுக்குமிடையிலான இந்து - பௌத்த கலாச்சார உறவுகளின் பண்டைய அடித்தளத்தின் அடிப்படையில், சுற்றுலாப் பரிமாற்றங்களை ஆரம்பிப்பதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டது. நிலுவையிலுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் ஏனைய இருதரப்பு ஆவணங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு இரு தரப்பினரும் மேலும் உடன்பட்டனர்.

இந்த சந்திப்பின் போது, வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க மற்றும் வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வெளிநாட்டு உறவுகள் அமைச்சு
கொழும்பு
26 மே 2020
Image2
Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close