பிரேசிலுக்கான இலங்கைத் தூதுவர் சுமித் தசநாயக்க 2022 செப்டம்பர் 19 ஆந் திகதி பிரேசிலில் உள்ள முன்னணி பொருளாதார மையங்களுடன் இலங்கையின் வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கான தூதரகத்தின் அணுகல் திட்டத்தின் ஒரு பகுதியாக கோயாஸ் மாநிலத்திற்கு விஜயம் செய்தார். 42 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்டு பிரேசிலில் வேகமாக அபிவிருத்தியடைந்து வரும் மாநிலங்களில் ஒன்றான கோயாஸ், வர்த்தகம், விவசாயம், கால்நடைகள், சுரங்கம் மற்றும் உணவு உற்பத்தி போன்றவற்றில் முன்னணி மாநிலமாக உள்ளது. இந்த விஜயத்தின் போது தூதுவருடன் தூதரகத்தின் அமைச்சர் ஆலோசகர் (வணிகம்) சீவலி விஜேவந்தவும் உடனிருந்தார்.
கோயானியாவின், கோயாஸிலுள்ள கோயாஸ் வர்த்தகம், தொழில்கள் மற்றும் சேவைகள் சங்கத்தின் தலைமையகத்தில் கோயாஸ் ரூபன்ஸ் ஃபிலேட்டியின் வர்த்தகம், தொழில்கள் மற்றும் சேவைகள் சங்கத்தின் தலைவர் தூதுவரை அன்புடன் வரவேற்றார். கலந்துரையாடலின் போது, தூதுவர் தசநாயக்க, கோயாஸ் மாநிலத்தில் கைத்தொழில் துறையுடன் குறிப்பாக மருந்து, தகவல் தொழில்நுட்ப சேவைகள், சுற்றுலா மற்றும் இறப்பர் சார்ந்த தொழில்களில் இலங்கையின் ஆர்வத்தை எடுத்துரைத்தார். பிரேசிலிய முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் குறிப்பாக கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டையில் உள்ள கைத்தொழில் வலயத்தில் முதலீட்டு வாய்ப்புக்கள் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
கோயாஸ் வர்த்தகம், கைத்தொழில்கள் மற்றும் சேவைகள் சங்கம், இலங்கைக்கும் கோயாஸ் மாநிலத்திற்கும் இடையில் கட்டமைக்கப்பட்ட முறையில் வர்த்தக நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு இலங்கையில் உள்ள முன்னணி வர்த்தக சம்மேளனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டது. அதன்படி, 2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் முன்மொழியப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இறுதி செய்ய இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். சர்வதேச வர்த்தகத்திற்கான இயக்குநர்கள் ஜோஸ் ப்ரெனோ மற்றும் கோயாஸின் வர்த்தகம், தொழில்கள் மற்றும் சேவைகள் சங்கத்தின் அகிரா நினோமியா ஆகியோரும் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
அனாபோலிஸில் உள்ள கோயாஸ் மாநிலத்தில் உள்ள தொழில்துறை கூட்டமைப்பின் பிராந்திய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டம், பிரேசிலின் மருந்துத் தேவைகளில் 40மூ அனாபோலிஸ் நகரில் உற்பத்தி செய்யப்படுகின்றன என்ற உண்மையைக் கருத்தில் கொண்டு இலங்கையின் மருந்துத் துறையில் பிரேசிலிய நிறுவனங்கள் முதலீடு செய்யும் சாத்தியத்தை மையமாகக் கொண்டது. மருந்துத் துறையில் வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்புக்கள் இருப்பதைத் தூதுவர் எடுத்துரைத்ததுடன், பிரேசிலிய மருந்து நிறுவனங்கள் இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகளை ஆராயலாம் என சங்கத்தின் அனாபோலிஸ் பிராந்தியத்தின் தலைவர் வில்சன் டி ஒலிவேரா தெரிவித்தார். இதன்படி, இலங்கைக்கு விஜயம் செய்து பிரேசில் நிறுவனங்களுக்கு உள்ள வசதிகள் குறித்து நேரடியாக தகவல்களைப் பெற்றுக்கொள்ள தூதுக்குழுவினருக்கு தூதுவர் அழைப்பு விடுத்தார். வெளிநாட்டு வர்த்தக சபையின் தலைவர் வில்லியம் லீசர் ஓட்வயர் மற்றும் கோயாஸ் மார்சல் மாநிலத்தின் சிண்டிகேட் ணஃப் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸின் நிறைவேற்றுத் தலைவர் ஹென்ரிக் சோரெஸ் ஆகியோரும் கூட்டத்தில் இணைந்தனர்.
இலங்கையை ஒரு சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் நோக்கில், கோயாஸ் மாநிலத்தின் சுற்றுலா நடத்துநர்கள் சங்கத்தின் தலைவரான எலினா மீரெல்ஸ் உடன் இலங்கை அணி சந்திப்பொன்றையும் நடத்தியது. நவம்பர் 2022 இல் சுற்றுலா நடத்துநர்களுடன் இலக்கு விழிப்புணர்வு ஊக்குவிப்பு நிகழ்வை ஏற்பாடு செய்வதற்கான உதவியை சங்கத்தின் தலைவர் உறுதியளித்தார்.
இலங்கைத் தூதரகம்,
பிரேசில்
2022 செப்டம்பர் 27