பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சினால் ஆக்கபூர்வமான பொருளாதாரத் திட்டம் அறிமுகம்

பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சினால் ஆக்கபூர்வமான பொருளாதாரத் திட்டம் அறிமுகம்

நாட்டின் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் இலங்கையின் கலாச்சாரப் பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கான நோக்கத்துடன் பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சு 'ஆக்கபூர்வமான பொருளாதாரத் திட்டத்தை' அறிமுகப்படுத்தியுள்ளது. 'ஆக்கபூர்வமான பொருளாதாரம்' என்பது உலகப் பொருளாதாரத்தின் வேகமாக விரிவடைந்து வரும் பிரிவாவதுடன், வேலைவாய்ப்பு, வருமானம் மற்றும் ஏற்றுமதியை உருவாக்குவதில் முக்கிய பங்களிப்பைச் செய்துள்ளது. படைப்பாற்றலின் அடிப்படையில், இது கலை, புத்தாக்கம், கலாச்சாரத் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது. இது நிலையான அபிவிருத்திக்கும் உகந்தது.

இலங்கையில் ஆக்கபூர்வமான பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்காக, பிராந்திய ஒத்துழைப்பினால் மேற்காள்ளப்படும் பங்களிப்பை அங்கீகரித்த பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் கௌரவ. தாரக்க பாலசூரிய, 'ஆக்கபூர்வமான பொருளாதாரத் திட்டத்தின்' கீழ் இந்தோனேசியாவுடன் இரண்டு அங்குரார்ப்பண முன்முயற்சிகளை ஆரம்பித்தார். இந்த முன்முயற்சிகள் இலங்கையில் பத்திக் தொழிற்துறையின் அபிவிருத்தி மற்றும் நாட்டின் தனித்துவமான கட்டடக்கலைப் பாரம்பரியத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றன.

பத்திக், ஆடை மற்றும் உள்ளூர் ஆடை உற்பத்திகளின் இராஜாங்க அமைச்சு, இலங்கைக்கான இந்தோனேசியத் தூதரகம், தனியார் துறை பத்திக் உற்பத்தியாளர்கள் மற்றும் இந்தோனேசியாவின் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு அமைச்சின் எஸ்.எம்.ஈ.எஸ்.ஓ. ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இலங்கை பத்திக்குகளை மேம்படுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த முன்முயற்சியின் நோக்கமானது, தொழில்துறையை மேம்படுத்துவதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் புதிய உத்திகளை அறிமுகப்படுத்தி, இலங்கையின் பத்திக் தயாரிப்புக்களை வெளிநாடுகளில் ஊக்குவிப்பதற்காக இந்தோனேசியாவின் நிபுணத்துவத்தைப் பெற்றுக்கொள்வதாகும். இந்த முன்முயற்சி, குறிப்பாக கிராமப்புறப் பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும், ஏற்றுமதித் துறையில் பங்களிப்புச் செய்வதற்கும் உதவும்.

இலங்கையின் கட்டடக்கலைப் பாரம்பரியத்தை வெளிநாட்டில் ஊக்குவிப்பற்கு முயற்சிக்கும் வகையில் இரண்டாவது முன்முயற்சி அமைகின்றது. இது சம்பந்தமாக, ஜெஃப்ரி பாவாவின் புகழ்பெற்ற படைப்புக்கள் மற்றும் அவரது 'அயனமண்டல நவீனத்துவம்' சார்ந்த பாணி ஆகியன உள்ளடங்கலான நாட்டின் கட்டிடக்கலை குறித்து ஆய்வு செய்வதற்காக இந்தோனேசியாவின் மிகவும் முக்கியமான சில கட்டிடக் கலைஞர்கள் சுற்றுப்பயணமொன்றை மேற்கொள்வற்காக திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முன்முயற்சி கலாச்சார ஒத்துழைப்பை மேம்படுத்தும் அதே வேளையில், இரு நாடுகளினதும் கட்டிடக்கலை சகோதரத்துவங்களுக்கிடையில் தொடர்புகளை உருவாக்குவதற்கும், சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் முயற்சிக்கின்றது.

இந்த இரண்டு முன்முயற்சிகள் குறித்து இலங்கை மற்றும் இந்தோனேசியா இடையே கடந்த வாரம் மெய்நிகர் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. எஸ்.எம்.ஈ.எஸ்.ஓ. இந்தோனேசியாவின் தலைமை நிறைவேற்று அதிகாரி திரு. லியோனார்ட் தியோசோப்ரட்டா மற்றும் இந்தோனேசியாவின் முன்னணி கட்டிடக் கலைஞர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் கௌரவ. தாரக்க பாலசூரிய, இந்தோனேசியாவிற்கான இலங்கைத் தூதுவர் திருமதி. யசோஜா குணசேகர, பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சின் பணிப்பாளர் நாயகம் திருமதி. சாவித்ரி பானபொக்கே மற்றும் பத்திக் மற்றும் கட்டிடக்கலைத் துறைகளின் பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சு
கொழும்பு

2021 மே 18

Please follow and like us:

Close