இந்திய வெளியுறவு அமைச்சருடன் நேற்று இடம்பெற்ற தொலைபேசி உரையாடலில், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்கு இரு நாடுகளும் இதுவரை முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் பலனளித்திருப்பதாக இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் கௌரவ. தினேஷ் குணவர்தன தெரிவித்தார். தொற்றுநோயை எதிர்கொள்வதற்காக இந்திய அரசாங்கம் நல்கிய நிதி உதவி மற்றும் கோவிட் நிவாரண உதவிகளுக்காக இந்திய வெளியுறவு அமைச்சருக்கு கௌரவ. குணவர்தன நன்றிகளைத் தெரிவித்தார்.
பிராந்திய அமைப்புக்களான பிம்ஸ்டெக் மற்றும் ஐயோரா ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றுவதற்கு இரு அமைச்சர்களும் இந்தக் கலந்துரையாடலின் போது ஒப்புக்கொண்டனர். குறிப்பாக கொழும்புத் திட்டம் போன்ற பொதுவான தளங்களில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற கருத்துக்களும் இதன் போது பரிமாறிக்கொள்ளப்பட்டன.
இரு நாடுகளும் சந்திக்கும் கோவிட் தொற்றுநோய் சார்ந்த அபாயம் குறித்து இரு அமைச்சர்களும் விரிவாகக் கலந்துரையாடியதுடன், தற்போதைய நிலைமையை விரைவாக இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கான அனைத்து பலமும் இந்தியாவுக்கு இருக்கும் என அமைச்சர் குணவர்தன இந்திய வெளியுறவு அமைச்சருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
ஏறக்குறைய அரை மணி நேரம் நீடித்த இந்த உரையாடலின் போது, இரு நாடுகளுக்குமிடையிலான பரஸ்பர ஆர்வத்தின் பல முக்கியமான விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு
2021 ஜூன் 22