
தித்வா சூறாவளியால் ஏற்பட்ட பாதகமான காலநிலை நிலைமைகளைத் தொடர்ந்தான தேசிய மீட்சி மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகள் குறித்து இலங்கைக்கு அங்கீகாரம் பெற்ற வெளிநாட்டு இராஜதந்திர தூதரகங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் மற்றும் கௌரவத் தூதுவர்களுக்கு இராஜதந்திர விளக்கமளிப்பு நிகழ்விற்கு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர் இன்று (2025, டிசம்பர் 05) இணை-தலைமை தாங்கினர்.
அவசரகால சூழ்நிலையில் துரித ஆதரவிற்காகவும், நாடு விரிவான மீட்பு முயற்சிகளை மேற்கொள்ளும்போது வழங்கப்பட்ட ஒத்துழைப்பு மற்றும் உதவிக்காகவும் அனைத்து இராஜதந்திரத் தூதரகங்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் ஏனைய கூட்டாளர்களுக்கு பிரதமர் அமரசூரிய தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
இலங்கை இப்போது அவசரகால பதிலளிப்பு கட்டத்திலிருந்து, மீட்பு மற்றும் மறுசீரமைப்பு கட்டத்திற்கு நகர்ந்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். சமூகங்கள் விரைவில் நிலைபேறான தன்மைக்கு திரும்புவதை உறுதி செய்வதற்காக பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் மின்சாரம், நீர் வழங்கல், போக்குவரத்து இணைப்புகள், சுகாதார வசதிகள் மற்றும் தொலைத்தொடர்பு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை முழுமையாக மீட்டெடுப்பது அரசாங்கத்தின் உடனடி முன்னுரிமைகளில் உள்ளடங்கும் என்று அவர் வலியுறுத்தினார்.
அபிவிருத்திக் கூட்டாளர்களின் உதவியுடன் விரிவான தேவைகளுக்கான மதிப்பீடு நடத்தப்பட்டு வருவதாகவும், அதன் முடிவுகள் புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்புத் திட்டங்களை வழிநடத்தும் என்றும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார். சாலைகள், பாலங்கள் மற்றும் போக்குவரத்து இணைப்புகளை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல்; கால்வாய்கள், நீர்ப்பாசன அமைப்புகளை மறுசீரமைத்தல்; நீர், சுகாதாரம் மற்றும் சுகாதார சேவைகளை மீட்டெடுப்பது; மற்றும் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் அபாயங்களைக் குறைக்க பாரிய அளவிலான கழிவு முகாமைத்துவம் மற்றும் குப்பைகளை அகற்றுதல் உள்ளிட்ட அடையாளம் காணப்பட்ட முன்னுரிமைப் பகுதிகளை ஆதரிக்குமாறு பிரதமர் அமரசூரிய அனைத்து சர்வதேச கூட்டாளர்களையும் கோரினார். தொடர்ச்சியான சர்வதேச ஒற்றுமையின் அவசியத்தை அவர் மீண்டும் வலியுறுத்தியதுடன், அனைத்து அதிகாரிகள், முதன்மை உதவி வழங்குனர்கள் மற்றும் கூட்டாளர்களின் அயராத முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போதைய நிலைமை மற்றும் முதற்கட்ட துரித சேத மதிப்பீடுகளின் கண்டுபிடிப்புகள் குறித்த கண்ணோட்டத்தை பேரிடர் முகாமைத்துவ மையத்தின் பணிப்பாளர் நாயகம் வழங்கினார்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர், இலங்கையின் உள்வரும் சுற்றுலாத்துறைச்சி செயற்பாட்டாளர்கள் சங்கம் (SLAITO) மற்றும் இலங்கை ஹோட்டல் சங்கம் (THASL) ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் சேர்ந்து, வனவிலங்கு பூங்காக்கள், கடல் பூங்காக்கள் மற்றும் கலாச்சாரா முக்கியத்துவம் பெற்ற இடங்கள் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தளங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதெனவும், அவை பார்வையிடக்கூடியவை என்பதையும் எடுத்துரைத்ததுடன், ஒட்டுமொத்த சுற்றுலா நடவடிக்கைகள் தொடர்ந்து நிலைபேறான தன்மையை அடைவதன்பொருட்டு சுற்றுலாப் பயணிகளை ஊக்குவித்தார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கித் தவிக்கும் அனைத்து சுற்றுலாப் பயணிகளையும் பாதுகாப்பாக வெளியேற்ற உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நேரத்தில் சர்வதேச சமூகம் இலங்கைக்கு வழங்கக்கூடிய வலுவான ஆதரவானது, நாட்டை உல்லாசப்பயணத்தின் தளமாகத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்படுவதற்காகவே என்று சுற்றுலாத் துறை பங்குதாரர்கள் வலியுறுத்தியதுடன், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளிக்கும் பொருட்டு, அடிப்படைத்தளத்தில் ஏற்படும் முன்னேற்றங்களுக்கு ஏற்ப பயண ஆலோசனைகளை தொடர்ந்து மதிப்பாய்வு செய்வதை ஊக்குவிக்குமாறு இராஜதந்திரச் சமூகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
அமர்வில் கலந்து கொண்ட இராஜதந்திரப் படைகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் இலங்கையுடனான தங்கள் ஒற்றுமையை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், நாட்டின் மீட்சி மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு உதவுவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் மற்றும் திட்டமிடப்பட்ட ஆதரவு நடவடிக்கைகள் குறித்து விளக்கினர்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2025, டிசம்பர் 5



