பிரதமர் நரேந்திர மோடியுடன் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடியுடன் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சந்திப்பு

இந்தியாவிற்கு விஜயம் செய்துள இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை இன்று (16) பிற்பகல் புதுடில்லியில் வைத்து சந்தித்த இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி,நெருங்கிய நட்பு நாடான இலங்கையுடன் இந்தியா எப்போதும் உறுதுணையாக நிற்கும் எனத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் இந்தியாவிற்கு மேற்கொள்ளப்பட்ட விஜயத்தின் போது ஒப்புக் கொள்ளப்பட்ட குறுகிய மற்றும் நடுத்தரக் கால பொருளாதார ஒத்துழைப்பு நடவடிக்கைகளைப் பின்தொடர்வதற்காக இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ புதுடில்லிக்கு விஜயம் செய்துள்ளார்.

இந்தியப் பிரதமருக்கும், இலங்கை நிதியமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் உள்ள அவைத் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பு மிகவும் சுமுகமான முறையில் நடைபெற்றது.

இந்த நெருக்கடியான நேரத்தில் இலங்கைக்கு இந்தியா வழங்கிய அனைத்து உதவிகளுக்கும் பிரதமர் மோடிக்கு நிதியமைச்சர் ராஜபக்ஷ நன்றிகளைத் தெரிவித்தார். நெருங்கிய நண்பரான இலங்கையுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கும் என அமைச்சரிடம் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.

இந்த சந்திப்பின் போது இருதரப்பு உறவுகள் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து இரு பிரமுகர்களும் கலந்துரையாடினர். விவசாயம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, டிஜிட்டல் மயமாக்கல், சுற்றுலா மற்றும் மீன்வளம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டன.

இயற்கை விவசாயத்தை நோக்கி நகரும் இலங்கையின் தீர்மானம் குறித்து பிரதமரும் அமைச்சரும் கலந்துரையாடினர். இயற்கை விவசாயத்தின் நன்மைகள் மற்றும் இலங்கைக்கு பொருத்தமானதாக இருக்கக்கூடிய நனோ உரங்கள் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புக்களை உருவாக்குவதில் இந்தியாவின் அனுபவத்தை பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அபிவிருத்தியில் ஒத்துழைப்பது பரஸ்பரம் நன்மை பயக்கும் என்பதையும், அதை வீரியத்துடன் தொடர வேண்டும் என்பதையும் இரு பிரமுகர்களும் ஒப்புக்கொண்டனர்.

தனித்துவமான டிஜிட்டல் அடையாளத்தில் இந்தியாவின் நிபுணத்துவம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் இதேபோன்ற திட்டத்திற்கான இருதரப்பு ஒத்துழைப்புக்கான முன்மொழிவு ஆகியவற்றைக் குறிப்பிடுவதன் மூலம், அத்தகைய அடையாளம் பொது மக்களுக்கு பல்வேறு சேவைகளை அணுகுவதற்கான ஒரு தளமாக செயற்பட முடியும் என வலியுறுத்தப்பட்டது.

இலங்கையில் இராமாயணப் பாதையை ஊக்குவிப்பதன் முக்கியத்துவம் மற்றும் குஜராத் உட்பட இந்தியாவில் பௌத்த சுற்றுப்பாதை, இலங்கைக்கு அதிக எண்ணிக்கையிலான இந்திய சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக எடுத்துக்காட்டப்பட்டது. இந்த சூழலில்,  2009ல் இலங்கைக்கும் குஜராத் மாநிலத்துக்கும் இடையே கைச்சாத்திடப்பட்ட சுற்றுலா தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், அரச அளவில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான வார்ப்புருவாக செயற்படக்கூடியது.

இரு நாடுகளுக்கு இடையேயான மீன்பிடிப் பிரச்சினை குறித்து விரிவாகக் கலந்துரையாடிய பிரதமர் மோடியும், அமைச்சர் ராஜபக்ஷவும், மீனவர்களை மனிதாபிமான முறையில் நடாத்துதல், வாழ்வாதாரம், நடைமுறையாக்கம், கடல் சூழலியல், கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை முன்கூட்டியே விடுவித்தல் உள்ளிட்ட சிக்கலான மற்றும் பல பரிமாண அம்சங்களை அங்கீகரித்தனர். இந்த சிக்கலான பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டிய அவசரத் தேவை குறித்தும் இரு பிரமுகர்களும் ஒப்புக்கொண்டனர்.

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட இந்த சந்திப்பில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் கலந்து கொண்டார்.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

புதுடில்லி

2022 மார்ச் 24

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close