பிம்ஸ்டெக்கில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புத் துறையை இலங்கை வழிநடத்தவுள்ளது

பிம்ஸ்டெக்கில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புத் துறையை இலங்கை வழிநடத்தவுள்ளது

IMG_6864

  

பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சியில் (பிம்ஸ்டெக்) விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புத் துறையை இலங்கை வழிநடத்தவுள்ளது. எதிர்காலத்தில் பிம்ஸ்டெக்கின் தொழில்நுட்ப பரிமாற்ற வசதியை இலங்கையில் திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பிம்ஸ்டெக் செயலகத்திற்கான ஒரு பணிப்பாளரையும் இலங்கை நியமிக்கவுள்ளது.

2020 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் திகதி வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்ற சிரேஷ்ட அதிகாரிகள் கூட்டத்தின் 20வது அமர்வில் பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளிடையே ஒத்துழைப்புக்கான பகுதிகள் இறுதி செய்யப்பட்டபோது இது ஒப்புக் கொள்ளப்பட்டது. சிரேஷ்ட அதிகாரிகள் கூட்டத்துக்கு முன்னதாக, பொருளாதார விவகாரங்களுக்கான லேதிக செயலாளர் பி.எம். அம்ஸா அவர்களின் தலைமையில் 2020 மார்ச் 01 முதல் 02 வரை 3வது நிரந்தர செயற்குழுக் கூட்டம் வெளிநாட்டு உறவுகள் அமைச்சில் நடைபெற்றது.

தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் மனித வள மேம்பாடு ஆகியவற்றிலான ஒத்துழைப்பு உள்ளடங்கலாக, விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு தொடர்பான துறையை வழிநடத்துவதற்கு இலங்கைக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. வர்த்தகம், முதலீடு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் பங்களாதேஷூக்கும், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பில் பூட்டானுக்கும், விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பில் மியான்மாருக்கும், பாதுகாப்பு (பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் நாடுகடந்த குற்றம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் எரிசக்தி) தொடர்பில் இந்தியாவுக்கும், மக்களுக்கிடையிலான தொடர்புகள் (கலாச்சாரம், சுற்றுலா, சிந்தனை மன்றங்கள், ஊடகம் போன்றவை) தொடர்பில் நேபாளத்துக்கும், தொடர்புகளை ஏற்படுத்தல் தொடர்பில் தாய்லாந்துக்கும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளன. பிம்ஸ்டெக்கின் கீழ் பிராந்திய ஒத்துழைப்பின் செயன்முறையை திறம்பட நடாத்துவதற்கான நிறுவனப் பொறிமுறையான பிம்ஸ்டெக் சாசனமும் இறுதி செய்யப்பட்டு, 5வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சிரேஷ்ட அதிகாரிகள் கூட்டத்தின் 20வது அமர்வுக்கு தலைமை தாங்கிய வெளிவிவகார செயலாளர் ஆரியசிங்க, இலங்கை தலைமையைப் பொறுப்பேற்றதிலிருந்து, 20 ஆண்டு பழமை வாய்ந்த இந்த அமைப்பை மீண்டும் புதுப்பிப்பதற்கு முயன்றதாகத் தெரிவித்தார். இந்த சூழலில், பிம்ஸ்டெக்கின் எதிர்கால நடவடிக்கைகளில் மேலதிக கவனம் செலுத்தப்படுமாதலால், பிம்ஸ்டெக் சாசனத்தை இறுதி செய்வதன் மூலமாகவும், உறுப்பு நாடுகளிடையே ஒத்துழைப்பின் வரையறுக்கப்பட்ட பகுதிகளை ஒதுக்கீடு செய்வதன் மூலமாகவும் நிறுவனக் கட்டமைப்பின் தேவை குறித்து இலங்கை கவனம் செலுத்தியது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் தாய்லாந்திற்கு தலைமைப் பதவியை ஒப்படைக்கத் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை, உச்சிமாநாட்டிற்கு முன்னதாக வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் தொடர்புகளை ஏற்படுத்தல் ஆகிய துறைகளில் ஒத்துழைப்புக்கான உறுதியான வழிமுறைகளை இறுதி செய்வதற்கு முயற்சிப்பதில் ஆர்வமாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

குற்றவியல் விடயங்களில் பரஸ்பர சட்ட உதவி தொடர்பான பிம்ஸ்டெக் சாசனம் மற்றும் பிம்ஸ்டெக் தொழில்நுட்ப பரிமாற்ற வசதிகளை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியவற்றை இறுதி செய்வதற்கும் மேலதிகமாக, 2019 ஏப்ரல் மாதத்தில் பிம்ஸ்டெக் உள்ளிணைப்புக் கட்டத்தினை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதனை பிம்ஸ்டெக்கின் பொதுச்செயலாளரான தூதுவர் ஷாஹிதுல் இஸ்லாம் பாராட்டினார். விரிவான ஒத்துழைப்புக்கான துறைசார் கூட்டங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், இந்த முன்னோக்கில் அனைத்து உறுப்பு நாடுகளும் ஆதரவு வழங்குவதற்கும், பிம்ஸ்டெக் சுதந்திர வர்த்தகப் பகுதியின் பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்கும் அழைப்பு விடுத்தார்.

2018 ஆகஸ்ட் மாதத்தில் பிம்ஸ்டெக்கின் தலைவராக தனது கடமைகளை ஏற்றுக்கொண்ட இலங்கை, அதன் பின்னர் மூன்று நிரந்தர செயற்குழுக் கூட்டங்கள் மற்றும் ஒரு சிரேஷ்ட அதிகாரிகள் கூட்டம் ஆகியவற்றை நடாத்தியதன் மூலம் அமைப்பின் ஆக்கபூர்வமான முன்னேற்றத்திற்கு உதவியது. பிம்ஸ்டெக் சாசனத்தினை இறுதி செய்வதற்கும் மேலதிகமாக, துறைகளின் பகுத்தறிவாக்கம் மற்றும் இராஜதந்திர கல்விக்கூடங்கள் / பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் பயிற்சி நிறுவனங்களுக்கிடையேயான பரஸ்பர ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம், துறைசார் மற்றும் நிறுவன நிர்வாக விடயங்கள் தொடர்பிலும் கூட்டங்களின் போது கலந்துரையாடப்பட்டது.

17வது அமைச்சரவைக் கூட்டம் மற்றும் 21வது சிரேஷ்ட அதிகாரிகள் கூட்டத்திற்கு முன்னதாக இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறும் 5வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டிற்காக இலங்கை தயாராகி வருகின்றது.

இலங்கைத் தூதுக்குழுவில் பொருளாதார விவகாரங்களுக்கான (பல்தரப்பு) பதில் பணிப்பாளர் நாயகம் அன்சுல் ஜான், பிரதி சட்ட ஆலோசகர் திலானி சில்வா, பொருளாதார விவகாரங்களுக்கான பணிப்பாளர் சஷிகா சோமரத்ன, சட்ட உத்தியோகத்தர் சகுந்தலா ராஜமந்திரி மற்றும் வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் நிறைவேற்று உதவியாளர் கலனி தர்மசேன ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

வெளிநாட்டு உறவுகள் அமைச்சு

கொழும்பு

4 மார்ச் 2020

IMG_5815
_MG_0311
01. Group 02. Group
Please follow and like us:

Close