பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல வரைவு தொடர்பான தற்போதைய அபிவிருத்திகள் தொடர்பாக கொழும்பில் உள்ள இராஜதந்திரப் படையினருக்கு விளக்கமளிக்கும் வகையில் 2023 செப்டெம்பர் 01ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் இராஜதந்திர மாநாடு ஒன்று இடம்பெற்றது. நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் மாநாட்டில் உரையாற்றினர். நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன, வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன, நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா மற்றும் மேலதிக சொலிசிட்டர் நாயகம் நெரின் புள்ளே ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
உள்நாட்டு மற்றும் சர்வதேச பங்குதாரர்கள் வெளிப்படுத்திய ஆக்கபூர்வமான கருத்துக்கள் மற்றும் கரிசனைகளை கருத்தில் கொண்டு, சிவில் சமூகம் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களுடனும் இடம்பெற்ற விரிவான கலந்துரையாடலைத் தொடர்ந்து, 2022 இல் பயங்கரவாதத் தடைச் சட்டம் திருத்தப்பட்டதை அமைச்சர் சப்ரி ஆரம்பத்தில் நினைவு கூர்ந்தார்.
சர்வதேச தரம் மற்றும் சிறந்த நடைமுறைகளை நிலைநிறுத்தி தேசிய பாதுகாப்புத் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் பயங்கரவாத எதிர்ப்பு வரைவுச் சட்டம் இருப்பதை உறுதி செய்வதற்காக அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகளை அமைச்சர் சப்ரி சுட்டிக் காட்டினார். பொதுமக்கள், சிவில் சமூகம் மற்றும் சர்வதேசப் பங்குதாரர்கள் வெளிப்படுத்திய கருத்துக்களைக் கருத்தில் கொள்ளுதல் உட்பட, சமீபத்திய வரைவை உருவாக்குவதில் பின்பற்றப்பட்ட வெளிப்படையான மற்றும் திறந்த ஆலோசனைச் செயன்முறையை அவர் எடுத்துரைத்தார். பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் மீதான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, சட்டமூலம் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் அரச வர்த்தமானியில் மீண்டும் வெளியிடப்பட்டவுடன், எந்தவொரு நபரும் இந்த சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை குறித்து உச்ச நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்ய முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சரவையின் தீர்மானத்திற்கு இணங்க, மேலதிக கருத்துக்களைப் பெறுவதற்காக பொதுமக்களை இவ் விடயம் தீவிரமாகச் சென்றடைவதற்கு நீதி அமைச்சு முன்னெடுத்த முயற்சிகள் குறித்து அமைச்சர் ராஜபக்ஷ பங்கேற்பாளர்களுக்கு விளக்கினார். வாக்குமூலங்களை ஏற்றுக்கொள்ளுதல், தடுப்புக்காவல் உத்தரவுகள் மற்றும் பயங்கரவாதத்திற்கான வரைவிலக்கணம் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடலின் போது பரிசீலிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். வரைவு சட்டக் கட்டமைப்பில் இந்த விடயங்கள் எவ்வாறு தீர்க்கப்பட்டுள்ளன என்பதை அமைச்சர் விளக்கினார்.
மேலதிக சொலிசிட்டர் நாயகம் புல்லே வரைவு சட்டக் கட்டமைப்பின் முக்கிய அம்சங்களை முன்வைத்ததுடன், 2018 ஆம் ஆண்டின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம், உயிர்த்த ஞாயிறு விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் சர்வதேச சமூகத்தின் அவதானிப்புக்கள் போன்ற கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதில் பரிசீலிக்கப்பட்ட கூறுகளில் உள்ளடங்கும் எனத் தெரிவித்தார். புதிய வரைவானது, கருத்துச் சுதந்திரம் போன்ற அடிப்படை உரிமைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முயற்சிப்பதாகவும், மரண தண்டனையை உள்ளடக்க மாட்டாது என்றும், முழுமையான தடுப்புக்காவல் காலப்பகுதியில் நீதித்துறையின் கண்காணிப்பு உறுதி செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த வரைவு சட்டமூலம், அமைச்சரவையின் ஒப்புதலுக்கும், அரசியலமைப்புச் சட்டத்தின்படியான அடுத்தடுத்த நடைமுறைகளுக்கும் உட்பட்டது.
மாநாட்டைத் தொடர்ந்து, இராஜதந்திரப் படையின் உறுப்பினர்கள் ஆக்கபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், குறித்த விடயத்திலான இலங்கையின் அபிவிருத்திகள் குறித்து இராஜதந்திரப் படையினருக்கு வழமையான விளக்கங்கள் வழங்கப்படுவதற்கு பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2023 செப்டம்பர் 01