வெளிநாட்டு அமைச்சு மற்றும் பட்டிக், கைத்தறி மற்றும் உள்ளூர் ஆடைத் தயாரிப்புக்களுக்கான இராஜாங்க அமைச்சு ஆகியன இணைந்து இலங்கையின் பட்டிக், கைத்தறி மற்றும் உள்ளூர் ஆடைத் தயாரிப்புக்களை உலகெங்கிலும் உள்ள இலங்கைத் தூதரகங்களின் மூலம் ஊக்குவிப்பதற்கான கூட்டு அமர்வை 2022 பெப்ரவரி 18ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சில் நடாத்தின.
நிகழ்விற்குத் தலைமை தாங்கிய வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், பொருளாதார இராஜதந்திர முயற்சிகளின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தியதுடன், இலங்கையின் உள்நாட்டு உற்பத்திகள் மக்களின் படைப்பாற்றலின் விளைவேயாகும் என்றும், வெளிநாடுகளில் அவற்றை ஊக்குவிப்பதானது நேரடியாகவே பொருளாதாரத்தை அடிமட்டத்தில் இருந்து உயர்வடையச் செய்யும் என்றும் வலியுறுத்தினார். இலங்கையின் பட்டிக் மற்றும் கைத்தறித் தயாரிப்புக்களை தாம் அங்கீகாரம் பெற்றுள்ள நாடுகளில் ஊக்குவிக்குமாறு இலங்கை இராஜதந்திரிகளிடம் கேட்டுக்கொண்ட பட்டிக், கைத்தறி மற்றும் உள்ளூர் ஆடைத் தயாரிப்புக்களுக்கான இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, தூதரகங்கள் மற்றும் நிகழ்வுகளில் காட்சிப்படுத்தத் தேவையான மாதிரிகளை வழங்கினார். வெளிநாடுகளில் அவற்றை ஊக்குவிப்பதற்காக முன்னெடுக்கப்படும் பல்வேறு முயற்சிகள் குறித்தும் விளக்கினார். வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே இலங்கையின் குடிசைத் தொழில்துறையின் கலைப் படைப்புக்களின் அழகை எடுத்துரைத்ததுடன், இந்தத் துறையை மீண்டும் புதுப்பிக்க வாரந்தோறும் பாட்டிக் தினத்தை அனுசரிப்பதற்குப் பரிந்துரைத்தார்.
பட்டிக், கைத்தறி மற்றும் உள்ளுர் ஆடைத் தயாரிப்புக்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜனக தர்மகீர்த்தி, இலங்கை கைவினைப்பொருட்கள் சபையின் தலைவர் லக்மால் விக்கிரமாராச்சி மற்றும் வெளிநாட்டு அமைச்சு மற்றும் பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சு ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்ட அதே வேளை, இலங்கைத் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் ஏனைய இராஜதந்திர அதிகாரிகள் மெய்நிகர் ரீதியாக இணைந்து கொண்டனர்.
வெளிநாட்டு அமைச்சு,
கொழும்பு
2022 பிப்ரவரி 18