வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, அமைச்சரவை அந்தஸ்தில் உள்ள பங்களாதேஷ் கப்பல் போக்குவரத்து அமைச்சர் காலித் மஹ்மூத் சவுத்ரியுடன் நவம்பர் 23ஆந் திகதி கப்பல் துறையில் மேலும் ஒத்துழைப்பதற்கான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.
இக்கலந்துரையாடலின் போது, இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்புக்காக தெரிவு செய்யப்பட்ட முக்கிய பகுதிகளில் ஒன்றாக கப்பல் போக்குவரத்தின் முக்கியத்துவத்தை இரு அமைச்சர்களும் வலியுறுத்தினர். அமைச்சர்கள் அலி சப்ரி மற்றும் காலித் சௌத்ரி ஆகியோர், இத்துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, கூட்டுப் பணிக்குழு மற்றும் இணைச் செயலாளர் மட்டத்திலான பேச்சுவார்த்தைகளின் 2வது அமர்வை முன்கூட்டியே நடாத்துவது அவசியமாகும் என ஒப்புக்கொண்டனர். மேலும், இரு நாடுகளுக்குமிடையிலான கரையோரக் கப்பல் போக்குவரத்து தொடர்பான உத்தேச ஒப்பந்தத்தை இறுதிசெய்வது குறித்தும், கொழும்பு மற்றும் சட்டோகிராமிற்கு இடையிலான ஊட்டி சேவையின் நிலையான செயற்பாட்டு நடைமுறைகள் குறித்தும் இரு அமைச்சர்களும் கலந்துரையாடினர். பங்களாதேஷின் ஏற்றுமதியில் 40மூ, முக்கியமாக மேற்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்குச் செல்லும் ஆடைகள், கொழும்பு துறைமுகத்தைப் பயன்படுத்தி சட்டோகிராமில் இருந்து கொண்டு செல்லப்படுவதுடன், இதனால் சிங்கப்பூருடன் ஒப்பிடும்போது பங்களாதேஷ் ஏற்றுமதிக்கான செலவையும் நேரத்தையும் குறைக்கின்றது என்ற வகையில், பங்களாதேஷ் கப்பல் துறையில் மிக முக்கியமான பங்காளியாக உள்ளது என்பதை அமைச்சர் சப்ரி எடுத்துரைத்தார்.
ஜப்பான் மற்றும் பங்களாதேஷின் உதவியுடன் ஆழ்கடல் துறைமுகமாக அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் கொக்ஸ் பஸார் மாவட்டத்தில் உள்ள மடர்பாரி துறைமுகத்தின் அபிவிருத்தி குறித்து பங்களாதேஷ் அமைச்சர் குறிப்பிட்டதுடன், இது போன்ற முயற்சிகளின் மூலம் கொழும்பு மற்றும் சட்டோகிராம் துறைமுகங்களுக்கு இடையே நேரடித் தொடர்பை எப்போதும் வைத்திருப்பதை இலக்காகக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார். நாட்டின் துறைமுகங்களில் முனைய மேம்பாட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யுமாறு அமைச்சர் சப்ரி பங்களாதேஷ் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். மேலும், கொழும்புத் துறைமுக நகரத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு உள்ள வாய்ப்புக்கள் குறித்தும் பங்களாதேஷ் தரப்புக்கு விளக்கமளித்த அமைச்சர், இலங்கையில் உள்ள சாத்தியக்கூறுகளை பார்வையிடுவதற்கு வருகை தருமாறு பங்களாதேஷ் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
கொழும்புத் துறைமுகத்திற்கு வரும் பங்களாதேஷ் கப்பல்களுக்கு முன்னுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு பங்களாதேஷ் தரப்பு இலங்கைத் தரப்பிடம் கோரிக்கை விடுத்தது. கொழும்புத் துறைமுகத்தை கப்பல் சரக்குப் பரிமாற்றல் கேந்திரமாக பரவலாகப் பயன்படுத்தும் நாடாக பங்களாதேஷ் இருப்பதால், இரு தரப்பினரும் மேலும் ஒத்துழைப்பது குறித்து கலந்துரையாடினர். கப்பல் துறையின் வளர்ச்சி இரு நாடுகளினதும் சுற்றுலா அபிவிருத்திக்கு சாதகமான காரணியாக அமைகின்றது என்பதை அமைச்சர்கள் ஒப்புக்கொண்டனர். வலுவான விமான இணைப்பைக் கொண்டிருப்பதன் அவசியம் மற்றும் தனியார் விமான நிறுவனங்களின் நுழைவு குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அமைச்சர் அலி சப்ரி ஐயோராவின் துணைத் தலைவராக 22வது அமைச்சர்கள் பேரவைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டாக்காவிற்கு வருகை தந்துள்ளார்.
இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,
டாக்கா
2022 நவம்பர் 24