நியூயோர்க், ஐக்கிய நாடுகள் சபையில் 2020 ஜூலை 2ஆந் திகதி நடைபெற்ற சர்வதேச வெசாக் தினத்தின் இணைய வழியிலான தாமதமான நினைவு நிகழ்வுகளில், இலங்கையின் வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களின் கருத்துக்கள்

நியூயோர்க், ஐக்கிய நாடுகள் சபையில் 2020 ஜூலை 2ஆந் திகதி நடைபெற்ற சர்வதேச வெசாக் தினத்தின் இணைய வழியிலான தாமதமான நினைவு நிகழ்வுகளில், இலங்கையின் வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களின் கருத்துக்கள்

வணக்கத்திற்குரிய மகா சங்கத்தினரே,

மரியாதைக்குரிய மதப் பிரமுகர்களே,

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் கௌரவ அன்டோனியோ கட்டரெஸ் அவர்களே,

பொதுச் சபையின் தலைவர் கௌரவ திஜ்ஜனி முஹம்மத் - பாண்டே அவர்களே,

மேன்மை தங்கியவர்களே, கனவான்களே, கனவாட்டிகளே,

ஆயுபோவன்! மும்முறை ஆசீர்வதிக்கப்பட்ட வெசாக் தினத்தை கொண்டாடுவதற்கும், ஐக்கிய நாடுகள் சபையால் வெசாக் தினத்தை சர்வதேச அளவில் அங்கீகரித்த 20வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதமாகவும் இன்று இலங்கையிலிருந்து உங்களுடன் இணைகின்றேன்.

கோவிட்-19 உலகளாவிய தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள உலகம் கடந்து வரும் துரதிர்ஷ்டவசமான நேரங்களைக் கருத்தில் கொண்டு, வெசாக் தினத்திலிருந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பின்னர் இந்த மைல்கல்லைக் கொண்டாடும் நாம் இன்னும் அதிர்ஷ்டசாலிகள் ஆவதுடன், அதற்காக தொழில்நுட்பத்திற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த நிகழ்விற்கு வசதிகளை வழங்கி, ஒருங்கிணைத்தமைக்காக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் நியூயோர்க்கிலுள்ள தாய்லாந்து மற்றும் இலங்கையின் நிரந்தரத் தூதரகங்கள் ஆகிய அதன் இணைத் தொகுப்பாளர்களுக்கும், மற்றும் பெரும் முக்கியத்துவமும், பொருத்தப்பாடும் நிறைந்த இந்த நினைவுகூரல் நிகழ்வில் இணைந்து கொண்டமைக்காக வணக்கத்திற்குரிய மகா சங்கத்தினர், மேன்மை தங்கியவர்கள், கனவான்கள் மற்றும் கனவாட்டிகளுக்கு நான் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

உலகெங்கிலுமுள்ள மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினருக்கு மிகவும் புனிதமானதாகக் கருதப்படும் வெசாக் பௌர்ணமி போயா தினமானது, அறிவொளியூட்டப்பட்ட கௌதம புத்தரின் பிறப்பு, ஞானமடைதல் மற்றும் இறப்பைக் குறித்து நிற்கின்றது.

ஐக்கிய நாடுகளின் தலைமையகம் மற்றும் ஏனைய ஐக்கிய நாடுகள் அலுவலகங்களில் வெசாக் தினத்திற்கு சர்வதேச அங்கீகாரத்தை வழங்குவதில் முக்கிய பங்காற்றிய அப்போதைய இலங்கையின் வெளிநாட்டு உறவுகள் அமைச்சரான காலஞ்சென்ற லக்ஷ்மன் கதிர்காமர் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவும் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றேன். இலங்கை 1999 இல் ஐ.நா. பொதுச் சபையின் 54 வது அமர்வில் இந்த முயற்சியை மேற்கொண்டதுடன், புத்தரை கௌரவிக்கும் முகமாக, வெசாக் தினத்தை ஒரு சிறப்பு தினமாக அறிவித்து ஐக்கிய நாடுகள் சபையால் கொண்டாடுவதற்காக பொதுச் சபைக்கு முன்மொழிந்திருந்தது.

புத்தரின் காலத்தில் நோய் மற்றும் பஞ்சத்தால் பேரழிவிற்குள்ளான இந்தியாவின் விசாலா நகரத்தைப் போலவே, கோவிட்-19 தொற்றுநோயும் பேரழிவு தரக்கூடிய சுகாதாரப் பாதிப்புக்கள், மனிதாபிமான நெருக்கடி, பொருளாதாரங்களின் பேரழிவு மற்றும் ஏனையவர்களின் மத்தியிலான சமூக, உளவியல் பதட்டங்கள் போன்ற பல துரதிர்ஷ்டங்களை அதனுடன் கொண்டு வந்துள்ளது.

இந்தக் காலங்களில், இத்தகைய நிச்சயமற்ற தன்மைக்கு மாறாக ஒளியை நோக்கி புத்தரின் போதனைகள் எமக்கு வழிகாட்டும். நான்கு நல்லொழுக்கங்களின் நடைமுறையான, 'மெத்த' எனும் அன்பு, 'முடித' எனும் இரக்கம், 'கருண' எனும் அனுதாப மகிழ்ச்சி மற்றும் 'உபேக்க' எனும் சமநிலை ஆகியவற்றின் மூலம் மனிதகுலத்தின் துன்பங்களைத் தணிக்க முடிவதுடன், நம்பிக்கையையும் புரிந்துணர்வையும் உருவாக்குவதன் மூலம் வலுப்படுத்த முடியும்.

சமகால நம்பிக்கைகளின் பின்னணியில் அனைத்து உயிரினங்களின் துன்பங்களுக்கும் ஒரு தீர்வை விளக்கும் புத்தரின் போதனைகளே 'பௌத்த தர்மத்தின்' பிறப்பாகும். தர்மம் என்பது ஒரு மதம் அல்லது நம்பிக்கை அமைப்பு மட்டுமல்ல, உலகெங்கிலுமுள்ள அனைத்து உயிரினங்களும் எல்லாவற்றின் உண்மையான தன்மையையும் உணருவதற்கான ஒரு தத்துவமும், வாழ்க்கை முறையுமாகும். இது அறிவின் ஒரு பாதையாவதுடன், அதன் குறிக்கோளானது, ஏனையவற்றுடன், சுயநலக் கருத்தின் பயனற்ற தன்மை என வகைப்படுத்தப்படும் உண்மையான இயல்பு மற்றும் இருத்தலின் யதார்த்த அறியாமையின் அழிவுடன் அடையப்படுகின்றது.

2600 ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட அதன் உள்ளார்ந்த ஞானம் மற்றும் மதிப்புக்களை இது இன்னும் எதிர்பார்க்கின்றது. இது தொடர்ந்தும் ஆறுதலையும், இன்ப நலன்களையும் மற்றும் அமைதியையும் அளித்து வருவதுடன், சிக்கலான நவீன உலகில் பலருக்கு மன அமைதியை உறுதி செய்கின்றது. ஒருவரின் விதியின் எஜமானாக மனிதனே விளங்குவதுடன், மீட்பு, விடுதலை, இரட்சிப்பு அல்லது விடுவிப்பின் இறுதிக் குறிக்கோள் சுயமான விளைவுகளின் முற்போக்கான பாதை வழியாகவும் அமைவதால், தார்மீக மற்றும் ஆன்மீக ரீதியில் ஒரு மனிதன் தன்னை மேம்படுத்திக் கொள்ளும் திறனை புத்தர் வலியுறுத்துகின்றார்.

புத்தர் மூன்று சந்தர்ப்பங்களில் இலங்கைக்கும், பதினாறு வெவ்வேறு புனித இடங்களுக்கும் விஜயம் செய்தார்.

அவரது தந்தை பேரரசர் அசோகவின் வழிகாட்டுதலின் பேரில் 2300 ஆண்டுகளுக்கு முன்பு மஹிந்த மகா தேரரால் புத்தசாசனம் அல்லது ஒழுங்கு இலங்கையில் நிறுவப்பட்டதுடன், இன்றுவரை இலங்கை புத்தரின் போதனைகளை மிகவும் அழகிய வடிவத்தில் கொண்டுள்ளது.

2000ஆம் ஆண்டில் ஐ.நா. தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டதிலிருந்து, ஐக்கிய நாடுகளின் தலைமையகத்திலும், உலகெங்கிலுமுள்ள அதன் அலுவலகங்களிலும் வெசாக் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது மகிழ்ச்சியூட்டுவதாக அமைந்துள்ளது. இந்த ஆண்டும் கூட இந்த இணைய வழியிலான கொண்டாட்டத்தின் மூலமாக, அதே வணக்கத்துடனும், நினைவாற்றலுடனும் பாரம்பரியம் தகர்க்கப்படாமல் உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையில் வெசாக் தினத்தை அனுசரிப்பதை நிறைவேற்றிய உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பாக எனது ஆழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மும்மணிகளின் ஆசீர்வாதங்களுடன், உங்கள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, மற்றும் இயற்கையின் உண்மையான அர்த்தத்தில் அனைத்து உயிரினங்களுக்குமான வாழ்க்கை நிலைமைகள் அமைய வேண்டுமென நான் வாழ்த்துகின்றேன்.

புத்த பெருமானின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி நிறைவு செய்கின்றேன்,

'சியலு சத்வயோ நிதுக் வெத்வாநீரோகி வெத்வாசுவபத் வெத்வா'.

 

எல்லா உயிரினங்களும் பாதுகாப்பாக இருக்கட்டும்,

எல்லா மனிதர்களும் துன்பத்திலிருந்து விடுபடட்டும்,

எல்லா மனிதர்களும் நன்றாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கட்டும்!

Please follow and like us:

Close