நம்பகமான உள்நாட்டு செயன்முறையின் மூலம் மனித உரிமைகள் மற்றும்  நல்லிணக்கத்தில் தொடர்ந்தும் முன்னேற்றம் காண்பதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி மனித உரிமைகள் பேரவையின் 51 வது அமர்வில்  எடுத்துரைப்பு

நம்பகமான உள்நாட்டு செயன்முறையின் மூலம் மனித உரிமைகள் மற்றும்  நல்லிணக்கத்தில் தொடர்ந்தும் முன்னேற்றம் காண்பதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி மனித உரிமைகள் பேரவையின் 51 வது அமர்வில்  எடுத்துரைப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் உரையாற்றிய இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் கடுமையான தடைகள் மற்றும் சவால்கள் இருந்தபோதிலும், சுயாதீன உள்நாட்டு நிறுவனங்களின் ஊடாக மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதில் உறுதியான முன்னேற்றத்தை முன்னெடுப்பதில் இலங்கை உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார். 2022 செப்டெம்பர் 12, திங்கட்கிழமை, ஜெனிவாவில் உள்ள பாலைஸ் டெஸ் நேஷன்ஸில் மனித உரிமைகளுக்கான பதில் உயர்ஸ்தானிகர் நடா அல்-நஷிப் தனது அறிக்கையை சமர்ப்பித்ததைத் தொடர்ந்து இடம்பெற்ற இலங்கை தொடர்பான  ஊடாடும் உரையாடலின் போது, அமைச்சர் சபையில் உரையாற்றினார்.

சபையில் அவர் ஆற்றிய உரையில், இந்த சுயாதீன நிறுவனங்களின் செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்காக, காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றுக்கு தொடர்ச்சியான ஆதரவும் வளங்களும் வழங்கப்படுவதாக வெளிநாட்டு  அலுவல்கள் அமைச்சர் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் கட்டமைப்பிற்குள் நம்பகமான உண்மையைக் கண்டறியும் பொறிமுறையை உருவாக்குவதற்காக அரசாங்கம் முயற்சிப்பதாகவும், இலங்கையின் குறிப்பிட்ட நிலைமைகளுக்கு ஏற்ற மாதிரியின் வரையறைகள் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தெரிவித்தார்.

மனித உரிமைகளின் பிரிக்க முடியாத தன்மையை நினைவுகூர்ந்த அமைச்சர், அரசாங்கத்தின்  உடனடி அக்கறை பொருளாதார மீட்சியாக இருக்கும் அதேவேளை, இலங்கை மக்களின் மனித உரிமைகளை முன்னேற்றுவதற்கும் சமமான முன்னுரிமை வழங்கப்பட்டு வருவதாக மீண்டும் வலியுறுத்தினார். தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள அவசர மற்றும் உடனடி நடவடிக்கைகள், மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை அவர் சபைக்கு எடுத்துரைத்தார்.

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கான அலுவலகத்தை நிறுவுவதன் மூலம் வெளிநாட்டிலுள்ள இலங்கை சமூகத்துடனான உரையாடலை விரிவுபடுத்துதல் மற்றும் அவர்களை அணுகுதல் ஆகியன குறித்தும் இதன்போது கருத்து தெரிவிக்கப்பட்டது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கணிசமான திருத்தங்கள் குறித்தும், சர்வதேசத்தின் சிறந்த நடைமுறைகளுக்கு இணங்க, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மிகவும் விரிவான தேசியப் பாதுகாப்புச் சட்டத்துடன் மாற்றியமைக்கும் அரசாங்கத்தின் நோக்கம் குறித்தும் புதிய தகவல்களை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சபையில் குறிப்பிட்டார்.

46/1 தீர்மானத்தை இலங்கை திட்டவட்டமாக நிராகரித்த போதிலும், உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் உள்ள பின்தொடர்தல் நடவடிக்கைகள் மற்றும் அது தொடர்பான பரிந்துரைகளுக்கு மத்தியில், இலங்கை தனது மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் ஒத்துழைப்பு மற்றும் உரையாடல் உணர்வுடன் பேரவையுடன் ஈடுபடுவதில் உறுதியாக உள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் குறிப்பிட்டார். நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட நாட்டுடனான ஒத்துழைப்பின் அடிப்படையிலும் அதன்  சட்டக் கட்டமைப்பிற்கு இணக்கமானதாகவும் இருக்க வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார்.

ஜனநாயக நிர்வாகத்தை வலுப்படுத்தவும், முக்கிய நிறுவனங்களின் சுதந்திரமான மேற்பார்வையை வலுப்படுத்தவும், ஊழலுக்கு எதிரான ஐ.நா. சாசனம் உட்பட ஊழலை எதிர்த்துப் போராடவும் முக்கிய மாற்றங்களை அறிமுகப்படுத்தும் உத்தேச அரசியலமைப்பின் 22வது திருத்தம் குறித்து  அமைச்சர் சபைக்குத் தெரிவித்தார்.

உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் 'பொருளாதாரக் குற்றங்கள்' குறித்த விரிவான குறிப்பு, பதத்தின் தெளிவின்மைக்கு அப்பாற்பட்டது என்பதுடன், அது மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஆணையை மீறுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இது சம்பந்தமாக, அவர் சபையின் ஸ்தாபகக் கொள்கைகளைக் கடைபிடிப்பதன் முக்கியத்துவத்தை நினைவு கூர்ந்தார்.

நாட்டின் நீண்டகால ஜனநாயகக் கோட்பாடுகள் மற்றும் நெறிமுறைகளை நிலைநிறுத்துவதிலான அரசாங்கத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் அங்கமாக நாட்டில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள  குறிப்பிடத்தக்க மாற்றங்கள் சாட்சியமளிப்பதாக அவர் குறிப்பிட்டார். இதன்போது, அரசியலமைப்பினால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கும் மக்களின் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்குமான அரசியலமைப்பு உரிமைகள் நிலைநாட்டப்பட்டுள்ளதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய சவால்களை ஏற்றுக்கொண்ட அமைச்சர், மக்களின் மனித உரிமைகளை முன்னேற்றுவதற்கு சமமான முன்னுரிமை அளித்து, பொருளாதார மீட்சிக்கான பாதையில் இலங்கை  முன்னேறும் போது, சபையின் ஆதரவையும் புரிந்துணர்வையும் பெறுவதற்கு எதிர்பார்த்தார்.

இலங்கை தேசத்தின் பன்முகத்தன்மையை அங்கீகரிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் ஆற்றிய ஆரம்ப உரையில் குறிப்பிட்ட அம்சங்களை பதில் உயர்ஸ்தானிகர் நடா அல்-நஷிப் தனது உரையின் போது வரவேற்றார். கொள்கை சீர்திருத்தம், நல்லிணக்கம் மற்றும்  நிறுவனங்களை வலுப்படுத்துதல் உள்ளிட்ட இலங்கையுடனான ஒத்துழைப்பின் சாத்தியமான பகுதிகள் குறித்து கலந்துரையாடுவதில் மகிழ்ச்சியடைவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஊடாடும் உரையாடலில், சபையில் உள்ள அனைத்து பிராந்தியக் குழுக்களிடமிருந்தும், அதாவது ஆசியா பசிபிக், கிழக்கு மற்றும் மேற்கு ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன், ஆபிரிக்கா மற்றும் ஏனைய நாடுகளின் பரந்த அளவிலான அளவிலான ஆதரவை இலங்கை பெற்றது. தற்போதைய கொள்கை சீர்திருத்தத்திற்கான முன்மொழிவுகள் உட்பட, நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேலும் முன்னேற்றுவதில் மேற்கொள்ளப்பட்ட முன்முயற்சிகள் மற்றும் முன்னேற்றம் குறித்தும் இலங்கைக்கு பல நாடுகள் தமது பாராட்டுக்களைத் தெரிவித்தன. இந்த ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஆணையுடையவர்களுக்கு வழங்கப்பட்ட இரண்டு பயணங்களுக்கான தடையற்ற அணுகல் உட்பட, மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் ஐக்கிய நாடுகள் தாபனத்துடனான இலங்கையின் நேர்மறையான மற்றும் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை அவர்கள் வரவேற்றனர். தற்போதைய சவாலான காலகட்டத்தில் இலங்கைக்கு ஆதரவளிக்குமாறு சர்வதேச சமூகத்தை அவர்கள் வலியுறுத்தினர். சம்பந்தப்பட்ட நாட்டுடனான ஒத்துழைப்பு மற்றும் சபையின் ஸ்தாபகக் கொள்கைகளை கடைபிடித்தல் ஆகியவை மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்குமான முக்கிய தேவைகளாக முன்னிலைப்படுத்தப்பட்டன. சபையின் 11 உறுப்பினர்களை உள்ளடக்கிய முப்பத்தெட்டு (38)  நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தன. வளைகுடா ஒத்துழைப்பு சபை சார்பாக சவுதி அரேபியாவின் ஆதரவு அறிக்கை வெளியிடப்பட்டது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 51 ஆவது கூட்டத்தொடரின் பக்க அம்சமாக, மனித உரிமைகளுக்கான பதில் உயர்ஸ்தானிகர் நடா அல்-நஷிப் மற்றும் மனித உரிமைகள் பேரவையின் தலைவரான தூதுவர் ஃபெடரிகோ வில்லேகாஸ் ஆகியோரை சந்தித்த வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர், உள்நாட்டு நல்லிணக்கச் செயற்பாடுகள், மனித உரிமைகளை நிலைநாட்டுதல், நிர்வாகம் மற்றும் ஜனநாயகம் தொடர்பான நிறுவனங்களை மேலும் வலுப்படுத்துதல் போன்றவற்றில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்கு விளக்கினார். சுதந்திரமான உள்நாட்டு நிறுவனங்களை மேலும் வலுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவுகள், அரசியலமைப்பின் உத்தேச 22 வது திருத்தத்தின் மூலம் எதிர்பார்க்கப்படும் கணிசமான சீர்திருத்தங்கள் மற்றும் ஐ.நா. விஷேட நடைமுறை மற்றும்  சிவில் சமூகத்துடனான தொடர்புகள் மற்றும் ஈடுபாடு ஆகியவற்றை பதில் உயர்ஸ்தானிகர் வரவேற்றார்.

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. வுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி சி.ஏ. சந்திரபிரேம மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பணிமனை ஆகியவற்றின்  சிரேஷ்ட அதிகாரிகள் இந்த விஜயத்தின் போது இணைந்திருந்தனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரின் அறிக்கை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு, இலங்கை

2022 செப்டம்பர் 16

.............................................................

ஜெனீவாவில் 2022 செப்டம்பர் 12ஆம்  திகதி  நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது வழக்கமான அமர்வில் இலங்கை வெளிநாட்டு  அலுவல்கள் அமைச்சரின் அறிக்கை

தலைவர் அவர்களே,

பதில் உயர்ஸ்தானிகர் அவர்களே,

மேன்மை தங்கியவர்களே,

எமது மக்களின் மனித உரிமைகளை முன்னேற்றுவதற்கும், பாதுகாப்பதற்கும் மற்றும் சபையுடனான எமது ஈடுபாட்டை ஒத்துழைப்பு, உரையாடல் என்ற உணர்வில் தொடர்வதற்குமான எமது அசைக்க முடியாத உறுதிப்பாட்டை ஆரம்பத்தில் எமது அரசாங்கத்தின் சார்பாக மீண்டும் வலியுறுத்துகின்றேன். 46/1 தீர்மானத்தை நாங்கள் திட்டவட்டமாக நிராகரித்த போதிலும், எங்கள் உறுதிப்பாட்டிற்கு  இணங்க, உயர்ஸ்தானிகரின் அறிக்கைக்கான இலங்கையின் விரிவான எழுத்துப்பூர்வ பதிலை நாங்கள் சமர்ப்பித்துள்ளோம். சிறந்த நடைமுறைகளுக்கு அமைய, அறிக்கைக்கான ஒரு சேர்க்கையாக இலங்கையின் கருத்துக்கள் வைக்கப்பட வேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம்.

தலைவர் அவர்களே,

சமீப காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை நாங்கள் நன்கு அறிந்தவர்களாகவும், அது குறித்து உணர்ச்சிபூர்வமானவர்களாகவும் இருக்கின்றோம். உள்ளக மற்றும் வெளிப்புறக் காரணிகளால் உருவாகும் கடுமையான பொருளாதார நெருக்கடி நம் அனைவருக்கும் பல படிப்பினைகளை வழங்குகின்றது. வியன்னா பிரகடனம் மற்றும் செயற்றிட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மனித உரிமைகளின் பிரிக்க முடியாத தன்மையை இந்தச் சூழலில் நினைவு கூர்கின்றோம். எமது மக்கள் எதிர்கொள்ளும் சமூகப் பொருளாதார இன்னல்கள் குறித்து அரசாங்கம் மிகவும் உணர்ச்சிபூர்வமானதாக உள்ள அதே வேளையில், சமூகத்தின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பொருட்களை வழங்குவதன் மூலம் சவால்களை எதிர்கொள்ளவும் அவர்களது நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் உடனடியான  பல்நோக்கு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளதுடன், கடன் மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன. மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களை நெருக்கடியின் பாதகமான பாதிப்புக்களில் இருந்து பாதுகாப்பதற்காக ஐ.நா. முகவர் மற்றும் இருதரப்புப் பங்காளிகளுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடாத்தி வருகின்றது. பல சவால்கள் இருந்தபோதிலும், நிலையான அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சி நிரலின் இலக்குகளை அடைவதில் இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதற்கு முயற்சிக்கும்.

எமது நீண்டகால ஜனநாயகக் கோட்பாடுகள் மற்றும் நெறிமுறைகளை நிலைநிறுத்துவதற்கான எமது தொடர்ச்சியான அர்ப்பணிப்புக்கு சமீபத்திய மாற்றங்கள் சாட்சியமளிக்கின்றன. அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கும் கருத்துத் தெரிவிப்பதற்குமான அரசியலமைப்பு உரிமைகள், எமது மக்கள் தமது உரிமைகளைப் பயன்படுத்துவதற்கான ஜனநாயக இடத்தை உத்தரவாதப்படுத்தியது. இது சம்பந்தமாக, குற்றவியல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் விளையும் சட்டத்தின் மீறல்கள், சட்டம் மற்றும் அரசியலமைப்பிற்கு இணங்க, அத்தகைய சுதந்திரங்கள் ஜனநாயகமற்ற அரசியல் நோக்கங்களை அடைந்து கொள்வதற்கு ஆர்வமுள்ள கூறுகளால் துஷ்பிரயோகம்  செய்யப்பட்ட சூழ்நிலைகளில் தீர்க்கப்பட்டன.

தலைவர் அவர்களே,

கடுமையான தடைகள் மற்றும் சவால்கள் இருந்தபோதிலும், சுதந்திரமான உள்நாட்டு நிறுவனங்களின் ஊடாக மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதில் உறுதியான முன்னேற்றத்தைத் தொடர்வதில் இலங்கை உறுதியாக உள்ளது.

இந்த சபையின் பல உறுப்பினர்களுடன் இணைந்து இலங்கையும் 46/1 தீர்மானத்தை எதிர்த்துள்ளதுடன், அதன் சட்டபூர்வமான தன்மை மற்றும் நோக்கங்களுடன் அடிப்படையில் உடன்படவில்லை. தீர்மானத்தின் உள்ளடக்கம், குறிப்பாக அதன் செயற்பாட்டுப் பந்தி 06, இலங்கை மக்களின் இறையாண்மை மற்றும் ஐ.நா. சாசனத்தின் கோட்பாடுகளை மீறுவதாகக் குறிப்பிட்டு நாங்கள் அதனை தொடர்ச்சியாக எடுத்துரைத்துள்ளோம். மீண்டுமொருமுறை, தீர்மானம் தொடர்பான எந்தவொரு தொடர் நடவடிக்கைகளையும் மற்றும் அது தொடர்பாக உயர்ஸ்தானிகரால் மேற்கொள்ளப்படும் பரிந்துரைகள் மற்றும் தீர்மானங்களையும் திட்டவட்டமாக நிராகரிக்க வேண்டிய கட்டாயத்தில்  இருக்கின்றோம்.

தலைவர் அவர்களே,

உயர்ஸ்தானிகரின் அறிக்கையானது 'பொருளாதாரக் குற்றங்கள்' குறித்து விரிவாகக் குறிப்பிடுவதைக் காணமுடிகின்றது. இந்த வார்த்தையின் தெளிவின்மைக்கு அப்பால், அத்தகைய குறிப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஆணையை மீறுகின்றமை கவலைக்குரிய விடயமாகும். இந்தச் சூழலில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைத்  தீர்மானங்கள் 60/251, 48/141 மற்றும் ஐ.பி. தொகுப்பு ஆகியவற்றைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் நினைவுகூருகின்றோம்.

இருந்த போதிலும், நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்துவதற்கும் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கும் நிறுவப்பட்டு வரும் விரிவான சட்டக் கட்டமைப்பு குறித்து இலங்கை தொடர்ந்தும் சபைக்கு  விளக்கமளித்துள்ளது. அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட 22வது திருத்தம் பல முக்கிய மாற்றங்களை அறிமுகப்படுத்துவதுடன், இது ஜனநாயக நிர்வாகத்தையும் முக்கிய நிறுவனங்களின் சுயாதீன மேற்பார்வையையும் மற்றும் ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சாசனத்தின் அரசியலமைப்பு அங்கீகாரம் உட்பட, பொது ஆய்வு, நிர்வாகத்தில் பங்கேற்றல் மற்றும் ஊழலுக்கு எதிராக போராடுதல் போன்வற்றை வலுப்படுத்தும். இதில், அரசியலமைப்பு சபையின் அமைப்பு, தேசிய கொள்முதல் ஆணைக்குழு மற்றும் கணக்காய்வு சேவை ஆணைக்குழுவை மீண்டும் அறிமுகப்படுத்துதல் ஆகியவை அடங்கும். உத்தேச சட்டக் கட்டமைப்பானது, சொத்துப் பிரகடன முறையை வலுப்படுத்தி, நிறுவனத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளை வெளிப்படுத்துவோரின் உரிமைகளைப் பாதுகாத்து, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவின் சுதந்திரத்தை அதிகரிக்கும். பொது நிறுவனங்களில் மோசடி, விரயம் மற்றும் துஷ்பிரயோகம் ஆகியவற்றைக் கண்டறிந்து தடுப்பதன் மூலம் அரசாங்க செலவினங்களை மேற்பார்வையிடும் ஒரு ஆய்வாளர் நாயகம் போன்ற ஒரு அமைப்பை நிறுவுவதற்கான முன்மொழிவு பரிசீலனையில் உள்ளது.

தலைவர் அவர்களே,

உள்நாட்டு நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக்  கொண்ட நடவடிக்கைகள் அர்த்தமுள்ளதாகவும் நிலையானதாகவும் இருக்க வேண்டுமானால், அது சம்பந்தப்பட்ட நாட்டுடனான ஒத்துழைப்பின் அடிப்படையில், அதன் மக்களின் அபிலாஷைகளுடன் இணக்கமாக, அதன் அடிப்படை சட்டக் கட்டமைப்பிற்கு இணக்கமாக இருக்க வேண்டும். அரசியலமைப்பிற்கு முரணான மற்றும் ஊடுருவும் வெளி முயற்சிகள் மீண்டும் மீண்டும் நாட்டில் அர்த்தமுள்ள முடிவுகளைத் தரத் தவறிவிட்டன என்பதையும், அவை உறுப்பு நாடுகளின் வளங்களில் பயனற்ற விரயத்தை ஏற்படுத்துகின்றன என்பதையும் சர்வதேச சமூகம் அறிந்திருக்கின்றது.

அரசியலமைப்பின் கட்டமைப்பிற்குள் நம்பகமான உண்மையைக் கண்டறியும் பொறிமுறையை உருவாக்க அரசாங்கம் முயற்சிக்கும். இலங்கையின் குறிப்பிட்ட நிலைமைகளுக்கு பொருந்தக்கூடிய அத்தகைய மாதிரியின் வரையறைகள் கலந்துரையாடப்படுகின்றன.

'முந்தைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் கண்டுபிடிப்புக்களின் மதிப்பீடு மற்றும்  முன்னோக்கிச் செல்லும் வழி' தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஒரு ஆலோசனைக் குழுவை நிறுவுதல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் முற்போக்கான திருத்தங்கள் மற்றும் கைதிகளின் விடுதலை போன்றவற்றுக்கு வழிவகுத்துள்ளன. மேலதிக பரிந்துரைகள் காத்திருக்கின்றன.

இந்த ஆண்டு, மிகவும் கடினமான பணியான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மீளாய்வை  நாங்கள் வழங்கியதால், மனித உரிமைகளை மேலும் மேம்படுத்துவதற்காக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை, சர்வதேசத்தின் சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப மிகவும் விரிவான தேசிய பாதுகாப்புச் சட்டமாகக் கொண்டு வருவோம். குழுக்கள் மற்றும் தனிநபர்களின் பட்டியல் அண்மையில் நீக்கப்பட்டமை ஆக்கபூர்வமான உரையாடலுக்கு மேலும் உத்வேகத்தை வழங்கும்.

பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் உரிமைகளை முன்னேற்றுவதற்கும்,  இழப்பீடுகளை வழங்குவதற்கும் நிறுவப்பட்ட சுதந்திரமான சட்டப்பூர்வ அமைப்புக்கள், அந்தந்த ஆணைகளைத் தொடர்ந்தும் தீவிரமாகச் செயற்படுத்துகின்றன.

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் விசாரணை மற்றும் சரிபார்ப்பு செயன்முறையைத் தொடங்கியுள்ளதுடன், தடயங்களுக்கானதும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்ப ஆதரவு தொடர்பானதுமான தனிப் பிரிவுகளை அமைத்து, சம்பந்தப்பட்ட நீதித்துறை நடவடிக்கைகளில் பார்வையாளராக செயற்படுகின்றது.

பொருளாதாரக் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், இழப்பீடுகளுக்கான அலுவலகம் அதன் ஆணையைத் தொடர்ந்தும் வழங்குவதுடன், அண்மையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசிய இழப்பீட்டுக் கொள்கை மற்றும் வழிகாட்டுதல்கள் பண இழப்பீட்டிற்கு அப்பால், ஏனைய வகையான ஆதரவை நோக்கி அலுவலகத்தின் பணியை விரிவுபடுத்தியுள்ளன. தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றின் செயற்பாடுகளை வலுப்படுத்தத் தேவையான ஆதரவும் வளங்களும் தொடர்ந்தும் வழங்கப்பட்டு  வருகின்றன.

அனைத்து சமூகங்களையும் தலைமுறைகளையும் உள்ளடக்கிய வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கான அணுகல் வெளிநாட்டிலுள்ளஇலங்கையர்களுக்கான அலுவலகத்தை நிறுவுவதன் மூலம் விரிவுபடுத்தப்படும் என்பதுடன், இதன் மூலம் மேலதிகமான தீவிர ஈடுபாட்டிற்கு உதவிகள்  வழங்கப்படும்.

தலைவர் அவர்களே,

உலகளாவிய பிரகடனத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளபடி, மனித உரிமைகள் ஒன்றுக்கொன்று சார்ந்தவையும், ஒன்றோடொன்று தொடர்புடையவையும் மற்றும் பிரிக்க முடியாதவையுமாகும். மனித உரிமைகளை நிலைநிறுத்துவதில், ஏனைய நாடுகளுடனும் ஐக்கிய நாடுகள் சபையுடனும் கிடைக்கும் கணிசமான நிபுணத்துவத்திலிருந்து நாம் பயனடைந்துள்ளோம். நாங்கள் தொடரும்போது,  அவசியமான சந்தர்ப்பங்களில் சிறந்த நடைமுறைகள் குறித்து மேலதிக ஆலோசனை மற்றும் ஆதரவைப் பெறுவோம்.

மனித உரிமைகள் பேரவை மற்றும் அதன் பொறிமுறைகளுடனான எமது ஒத்துழைப்பை மேலும் தொடருவோம். இலங்கையானது 9 முக்கிய மனித உரிமைகள் உடன்படிக்கைகளில் அங்கம்  வகிப்பதுடன், ஐ.நா. சாசன அமைப்புக்களுடன் வழக்கமான மற்றும் ஆக்கபூர்வமான ஈடுபாட்டைப் பேணி வருகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் விஷேட ஆணை பெற்றுள்ள அனைவருக்கும் இலங்கைக்கு வருகை தருமாறு நாங்கள் நிலையான அழைப்பை விடுத்துள்ள அதே வேளையில், சமீப காலங்களில் அத்தகையோரின் அதிக எண்ணிக்கையிலான விஜயங்களுக்கு வசதிகளை வழங்கியுள்ளோம். உலகளாவிய காலாந்தர மீளாய்வு செயன்முறையின் மூலம் சபையுடன் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை எதிர்பார்க்கின்றோம். உலகளாவிய காலாந்தர மீளாய்விலான எமது கடமைகளை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம் என்பதுடன், வரவிருக்கும் நான்காவது சுழற்சி உலகளாவிய காலாந்தர மீளாய்வில் முன்கூட்டியே ஈடுபடுவோம்.

இந்த ஆண்டு மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இடம்பெற்ற உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின்  இலங்கைக்கான இரண்டு விஜயங்களுக்கு நாங்கள் தடையற்ற அணுகலை வழங்கினோம். இந்த விஜயங்கள் பலதரப்பட்ட பங்குதாரர்களுடன் ஈடுபடுவதற்கும் முன்னேற்றத்தைக் காண்பதற்குமான வாய்ப்பை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அதிகாரிகளுக்கு வழங்கியது.

தலைவர் அவர்களே,

இலங்கையில் மோதல்கள் முடிவுக்கு வந்து 13 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அதன்  பின்னர் தமது சொந்த அபிலாஷைகளுடன் புதிய தலைமுறை உருவாகியுள்ளது. நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான பிரச்சினைகள் உள்நாட்டு செயன்முறையின் மூலம் விரிவாகக் கையாளப்படும் அதே வேளையில், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக சபையின் நிகழ்ச்சி நிரலில் தொடரும் இந்தத் தீர்மானத்தின் பாதையை யதார்த்தமாகச் சிந்தித்துப் பார்ப்பதற்கும், அது இலங்கை மக்களுக்குப் பலனளித்ததா என்பதைப் பற்றிய யதார்த்தமான மதிப்பீட்டையும் மேற்கொள்ள வேண்டிய நேரம் இது. களத்தில் உண்மையான முன்னேற்றத்தை ஒப்புக்கொண்டு இலங்கைக்கு ஆதரவளிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

தற்போதைய சவால்கள் வலிமையானதாக இருந்தாலும், எமது மக்களின் முன்னேற்றத்திற்காக நிறுவன மாற்றத்தை நோக்கிச் செயற்படுவதற்கான தனித்துவமான வாய்ப்பை எங்களுக்கு வழங்கியுள்ளது. இந்த சவாலான நேரத்தில் எமது நண்பர்கள் மற்றும் பங்காளிகள் வழங்கிய ஒற்றுமை மற்றும் ஆதரவை இலங்கை பாராட்டுகின்றது. ஐக்கியம் மற்றும் நல்லிணக்கம் குறித்து ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் ஆற்றிய தனது ஆரம்ப உரையில், 'நாம் ஒன்றுபட்டால், தேசத்தை உற்சாகப்படுத்த முடியும்' எனக் குறிப்பிட்டார்.

தலைவர் அவர்களே,

பல சவால்களின் ஊடாக, ஆசியாவின் பழமையான ஜனநாயக நாடுகளில் ஒன்றான இலங்கையில், அதன் மக்கள் தமது ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்திக் கொள்ளும் அதே வேளையில், உறுதிப்பாடு மற்றும் நெகிழ்ச்சியுடன் உள்ளனர். எங்களுடைய சவால்களை ஒப்புக்கொண்டு,  புதிய வீரியத்துடன் முன்னேறுவதற்கு நாங்கள் தயங்குவதில்லை. எமது உடனடியான அக்கறையாக பொருளாதார மீட்சி விளங்கினாலும், எமது மக்களின் மனித உரிமைகளை முன்னேற்றுவதும் அதற்கு சமமான முன்னுரிமையாகும். இந்தப் பாதையில் நாம் செல்லும்போது, இந்த சபையின் உண்மையான ஆதரவையும் புரிதலையும் எதிர்பார்க்கின்றோம்.

நன்றி.

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close