ஜகார்த்தாவில் 2021 நவம்பர் 10 -11 வரை நடைபெற்ற கைத்தொழில் அபிவிருத்தி தொடர்பான 02வது பிராந்திய மாநாட்டில் பங்கேற்பதற்காக கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ஷ இந்தோனேசியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
மாநாட்டின் போது, இலங்கையின் அனுபவத்திற்கு ஏற்ப,'கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பின்னரான பொருளாதார மீட்சிக்கான தொழில்துறை 4.0' என்ற தலைப்பில் அமைச்சர் சிறப்புரை ஆற்றினார்.
மாநாட்டின் பக்கவாட்டில், இந்தோனேசியக் குடியரசின் கைத்தொழில் அமைச்சர் அகுஸ் குமிவாங் கர்தசமிஸ்தாவுடன் இருதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுபட்ட அமைச்சர் வீரவன்ஷ, இரு நாடுகளுக்கிடையிலான தொழில்துறைத் துறையில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடினார். 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள கைத்தொழில் கண்காட்சியில் பங்கேற்குமாறு அமைச்சர் கர்தசமிஸ்தாவுக்கு அமைச்சர் வீரவன்ஷ அழைப்பு விடுத்தார்.
கைத்தொழில் அபிவிருத்திக்கான பிராந்திய மாநாட்டின் பக்கவாட்டில் பங்களாதேஷின் கைத்தொழில் அமைச்சர் நூருல் மஜித் மஹமுத் ஹூமாயனுடன் இருதரப்பு சந்திப்பொன்றில் ஈடுபட்ட அமைச்சர் வீரவன்ச, கைத்தொழில் துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடினார்.
தொழில் அமைச்சின் மேலதிக செயலாளர் (கொள்கை) திரு. எம்.ஜி.பி. நிமல் மகேஷ், கைத்தொழில் அபிவிருத்தி சபையின் தலைவர் திரு. உபசேன திஸாநாயக்க மற்றும் ஜகார்த்தாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் திருமதி. திலினி ஜயவர்தன ஆகியோர் இதன் போது அமைச்சருடன் இணைந்திருந்தனர்.
இலங்கைத் தூதரகம்,
ஜகார்த்தா
2021 நவம்பர் 16