பாகிஸ்தானின் சியால்கோட்டில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் முகாமையாளராகப் பணியாற்றிய இலங்கைப் பிரஜை பிரியந்த குமார தியவதனகே கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கு 2022 ஏப்ரல் 18ஆந் திகதி பாகிஸ்தானின் குஜ்ரன்வலாவில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து வழங்கிய தீர்ப்பை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு வரவேற்கின்றது.
நாற்பத்தி ஒன்பது வயதான பிரியந்த குமார தியவதனகே மிகவும் சர்ச்சைக்குரிய சூழ்நிலையில் மத நிந்தனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு 2021 டிசம்பர் 03ஆந் திகதி ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டு அவரது சடலம் எரிக்கப்பட்டது. இந்த சம்பவம் இரு நாடுகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதுடன், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இலங்கைக்கு உறுதியளித்தார்.
இந்த கொலை வழக்கில் மொத்தம் 88 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 72 குற்றவாளிகளுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், ஒன்பது குற்றவாளிகளுக்கு அபராதத்துடன் கூடிய ஆயுள் தண்டனையும் விதித்து பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மற்றொரு குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
மறைந்த பிரியந்த குமார தியவதனகேவின் குடும்பத்திற்கு 2021 டிசம்பர் 15ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸினால் நிதியுதவிகள் கையளிக்கப்பட்டமை நினைவுகூரத்தக்கது. இந்நிகழ்வின் போது, தொழில்தருநர் மற்றும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் நிதிப் பலன்கள் உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்யுமாறு பாகிஸ்தான் அரசாங்கத்திடம் தான் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார். பிரியந்த குமார தியவதனகேயின் குடும்பத்திற்கு அவரது சம்பளத்தை நிறுவனம் தொடர்ந்தும் செலுத்தி வருகின்ற நிலையில், சியால்கோட் பிரதேசத்தில் உள்ள வர்த்தக சமூகம் அவரது குடும்பத்திற்கு 100,000 அமெரிக்க டொலர்களை வழங்கியிருந்தது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2022 ஏப்ரல் 20