சென்னையிலுள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி டி. வெங்கடேஸ்வரனின் அழைப்பின் பேரில், இந்தியாவின் தென் மாநிலங்களில் உள்ள நெசவு சங்கங்களின் கூட்டமைப்பான தென்னிந்திய விசைத்தறி சம்மேளனத்தின் பிரதிநிதிகள், அந்தக் கூட்டமைப்பின் தலைவர் கலாநிதி எம்.எஸ். மதிவாணன் அவர்களுடன் 2021 நவம்பர் 22ஆந் திகதி இலங்கைக்கு விஜயம் செய்தனர்.
இந்தியாவின் விசைத்தறித் தொழில் துறையில் தென்னிந்தியா வரலாற்று ரீதியாக மிகப்பெரிய பங்களிப்பாளராகத் திகழ்வதனால், இந்த விஜயத்தின் நோக்கமானது தென்னிந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தகத் தொடர்புகளை வலுப்படுத்தி, ஆடைத் தொழிலில் 'இலங்கையில் முதலீடு' செய்வதற்கான வாய்ப்புக்களைக் கண்டறிந்து கொள்வதாகும்.
இலங்கையில் விசைத்தறித் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கான புதிய வழிகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, பத்திக், கைத்தறி மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்திகள் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா, மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே மற்றும் முதலீட்டு சபையின் தலைவர் சஞ்சய மொஹொட்டால ஆகியோரை கலாநிதி வெங்கடேஸ்வரன் தலைமையிலான குழுவினர் இந்த விஜயத்தின் போது சந்தித்தனர்.
தூதுக்குழுவினர், இலங்கையில் குறிப்பாக சமீபத்தில் நிறுவப்பட்ட, ஆடைத் தொழிற்துறையில் பல சாத்தியமான முதலீட்டு வாய்ப்புக்களுக்கு வழிவகுத்துள்ள ஏறாவூர் துணிப் பூங்காவில் உள்ள வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக, தேசிய வர்த்தக சம்மேளனம் மற்றும் கொழும்பு வர்த்தக சங்கம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றுக்கு இந்த தூதுக்குழுவினர் மேலும் விஜயம் செய்தனர்.
இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயம்,
சென்னை
2021 டிசம்பர் 01