தென்னிந்தியாவில் இருந்து இலங்கை தனது முதல் 'முருகன் பாதை' பயணத்தை ஏற்பாடு

தென்னிந்தியாவில் இருந்து இலங்கை தனது முதல் ‘முருகன் பாதை’ பயணத்தை ஏற்பாடு

 தென்னிந்திய ஊடகக் குழுக்களுக்கு இலங்கையில் 'முருகன் பாதை' விளம்பரப்படுத்துவதற்காக அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி, 2022  ஆகஸ்ட் 03 முதல் 11 வரை, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்துடன் இணைந்து, சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்மாதத்தில் நடைபெறும் கதிர்காமம் எசல திருவிழாவை தென்னிந்தியாவில் இருந்து வரும்  சுற்றுலாப் பயணிகளுக்கு ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இதனுடன், கண்டியில் எசல பெரஹெரா மற்றும் யாழ்ப்பாணத்தில் நல்லூர் திருவிழா போன்ற ஏனைய கலாச்சார நிகழ்வுகளுக்கும் விளம்பரம் வழங்கப்படும்.

பழமையான கதிர்காமம் கோவிலில் முருகப்பெருமானை வழிபடும் வகையில் கதிர்காமம் எசல  திருவிழா ஆண்டுதோறும் ஜூலை / ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறுகின்றது. கதிர்காமம் எசல பெரஹெரா (ஊர்வலம்) பண்டிகைக் காலத்தின் இரவுகளில் பாரம்பரிய நடனக் கலைஞர்கள், மேளக் கலைஞர்கள், தீயில் நடப்பவர்கள், யானைகள் மற்றும் ஏனைய சடங்குகளுடன் நடைபெறுகின்றது. இது இலங்கையின் மிக நேர்த்தியான மற்றும் கண்கவர் வரலாற்றுக் கலாச்சாரப் போட்டிகளில் ஒன்றாக அறியப்படுகின்றது.

முதன்முறையாக, 'தி இந்து', 'பிஹைண்ட்வுட்ஸ்', 'நியூஸ் 07 தமிழ்', 'விகடன்', 'நியூஸ் 18', 'டிவி 09' மற்றும் 'மதுரா டிஜிட்டல் மீடியா' உட்பட தென்னிந்தியாவில் உள்ள அச்சு மற்றும் இலத்திரனியல் ஆகிய இரண்டிலும் புகழ்பெற்ற ஆறு ஊடக நிறுவனங்கள் 09 நாட்கள் விஜயமாக ஆகஸ்ட்  03 ஆந் திகதி இலங்கைக்கு புறப்பட்டன.

இந்த ஊடகப் பிரதிநிதிகள் நாடு முழுவதும் குறிப்பாக கொழும்பு, யாழ்ப்பாணம், அனுராதபுரம்,  தம்புள்ளை, கண்டி மற்றும் கதிர்காமம் போன்ற வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் நிகழ்வுகளை உள்ளடக்கும். கதிர்காமம் எசல விழாவை ஒரு சில ஊடக நிறுவனங்கள் நேரடியாக ஒளிபரப்பும்.

இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயம்,

சென்னை

2022 ஆகஸ்ட் 08

Please follow and like us:

Close