ஸ்லோவேனியாவிற்கான இலங்கையின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக நியமிக்கப்பட்ட தூதுவர் மஜிந்த ஜயசிங்க தனது நற்சான்றுகளை ஸ்லோவேனியா குடியரசின் ஜனாதிபதி போருட் பஹோர் அவர்களிடம் லுப்லஜானாவில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்து 2019 ஜூன் 29ஆந் திகதி கையளித்தார்.
ஸ்லோவேனியன் ஆயுதப்படைகளின் மரியாதை அணிவகுப்புடன் ஆரம்பமாகிய இந்த வைபவத்தைத் தொடர்ந்து நற்சான்றுகள் கைளிக்கப்பட்டதுடன், ஜனாதிபதி போருட் பஹோருடனான மரியாதை நிமித்தமான சந்திப்பும் இடம்பெற்றது. தூதரகத்தின் ஆலோசகரும் சான்சரி தலைவருமான திரு. சரித்த வீரசிங்க மற்றும் ஸ்லோவேனியாவிற்கான இலங்கையின் கௌரவ தூதுவரான திரு. அண்ட்ரேஜ் பிரீபில் ஆகியோர் இதன்போது தூதுவருடன் இணைந்திருந்தனர்.
ஸ்லோவேனியா ஜனாதிபதி போருட் பஹோர் மற்றும் ஸ்லோவேனியா மக்களுக்கான இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இலங்கை மக்களின் வாழ்த்துக்களை தூதுவர் மஜிந்த ஜயசிங்க வெளிப்படுத்தினார். ஸ்லோவேனியா அரசின் 30வது ஆண்டுவிழா மற்றும் 2021 ஜூலை 01ஆந் திகதி ஐரோப்பிய கவுன்சிலின் தலைமைப் பதவிக்கு ஸ்லோவேனியா நியமிக்கப்பட்டமையை தூதுவர் பாராட்டினார். ஜனாதிபதி போருட் இலங்கை ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்கான தனது ஆர்வத்தையும் வெளிப்படுத்தினார்.
கோவிட்-19 தொற்றுநோயால் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து தூதுவர் மஜின்த ஜயசிங்க ஸ்லோவேனிய ஜனாதிபதியிடம் விளக்கியதுடன், தடுப்பூசிகளின் சமமான விநியோகப் பகிர்விற்கான நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
இலங்கை - ஸ்லோவேனிய உறவுகள் பரஸ்பர நன்மைகளுடன் கூடிய பல பகுதிகளை உள்ளடக்கி அதிவேகமாக வளர்ச்சியடைந்துள்ளதாக தூதுவர் குறிப்பிட்டார். பொருளாதாரம், வர்த்தகம், முதலீடுகள் மற்றும் சுற்றுலாத் துறைகளில் நட்புறவுகளை மேலும் பலப்படுத்தவும் விரிவுபடுத்தவும் இலங்கை நம்புவதாக மேலும் குறிப்பிட்டார்.
இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி போருட் பஹோருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் சார்பாக இலங்கைத் தூதுவர் அழைப்பு விடுத்தார். ஸ்லோவேனிய ஜனாதிபதி தனது இரண்டாவது பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் செய்ய விரும்புவதாகத் தெரிவித்தார்.
நற்சான்றுகளை கையளித்தமையைத் தொடர்ந்து, ஸ்லோவேனியாவின் பிரதமர் சார்பில் இராஜாங்க செயலாளர் கலாநிதி. இகோர் செங்கார், வெளியுறவு அமைச்சின் இராஜாங்க செயலாளர் கலாநிதி. ஸ்டேனிஸ்லாவ் ராஸ்கன், வெளியுறவு அமைச்சின் ஆசியா மற்றும் ஓசியானியா திணைக்களத்தின் தலைவர் திரு. போஜன் பெர்டன்செல்ஜ், வெளியுறவு அமைச்சின் பன்முக விவகாரங்கள் மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான இயக்குநரகத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. இகோர் ஜுகிக் ஆகியோருடன் தூதுவர் மஜிந்த ஜயசிங்க கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.
ஸ்லோவேனிய வணிக சபையின் பணிப்பாளர் நாயகம் திரு. அலெஸ் கப்டருட்டி மற்றும் ஸ்லோவேனிய சுற்றுலா சபையின் பணிப்பாளர் நாயகம் திருமதி. மஜா பக் ஆகியோருடன் வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா வாய்ப்புக்களை மேம்படுத்துவதற்கான புதிய வழிகள் ஆராயப்பட்டன.
1998இல் இலங்கை வெளிநாட்டு சேவையில் இணைந்த தூதுவர் மஜிந்த ஜயசிங்க ஒஸ்ட்ரியாவில் நியமனம் பெறுவதற்கு முன்னர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் தூதுவராகப் பணியாற்றினார். தனது இராஜதந்திர தொழில் வாழ்க்கையில், மக்கள் சீனக் குடியரசின் ஷாங்காயில் துணைத் தூதுவராகவும், மலேசியாவில் பிரதி உயர் ஸ்தானிகராகவும் பணியாற்றியுள்ளார்.
தூதுவர் மஜிந்த ஜயசிங்க ஐக்கிய இராச்சியத்தின் பேர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவராவதுடன், இலங்கையில் உள்ள புனித ஜோசப் கல்லூரி மற்றும் ரோயல் கல்லூரியின் பழைய மாணவரும் ஆவார்.
இலங்கைத் தூதரகம் மற்றும் நிரந்தரப் பணிமனை
வியன்னா, ஒஸ்ட்ரியா
2021 ஜூலை 07