ஜிலின் பசுமை விவசாய மன்றத்தில் உரையாற்றிய தூதுவர் கலாநிதி பாலித கொஹொன, தொழில்துறை விவசாய நடைமுறைகளால் சுற்றுச்சூழலுக்கும் மனித ஆரோக்கியத்திற்கும் ஏற்படும் தீங்குகள் குறித்து கொள்கை வகுப்பாளர்கள் குறிப்பாக கவனிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். இருப்பினும், இன்று உலகில் உள்ள எட்டு பில்லியன் மனிதர்களுக்கு உணவளிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் உடனடியாக ஒப்புக்கொண்டார். ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்தின்படி, 836 மில்லியன் மக்கள் ஒவ்வொரு இரவும் பட்டினியாகப் படுக்கைக்குச் செல்கின்றார்கள். இந்த சவாலுக்கான தீர்வு, உகந்த உற்பத்தித்திறனையும் மனித ஆரோக்கியத்தையும் பராமரிப்பதற்காக விஞ்ஞான ரீதியாக சாத்தியமான குறைந்தபட்ச அளவிற்கு இரசாயன சேர்க்கைகள் மற்றும் புதைபடிவ எரிபொருட்களை நம்புவதாகும். சீனாவின் ஜிலின் மாகாணம் இதை உண்மையாகவே உணர முடியும் என்பதை நிரூபித்துள்ளது. தீவிரமான வறுமையை சீனா ஒழித்துவிட்டது, அதாவது யாரும் பசியுடன் வாடுவதில்லை.
அரசாங்கமும் விவசாயிகளும் குறைந்தபட்ச இரசாயன மாசுபாட்டுடன் பாதுகாக்கும் கறுப்பு மண்ணின் வளத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட நான்கு பிராந்தியங்களில் ஜிலின் மாகாணமும் ஒன்றாகும்
புவி வெப்பமடைதல் மற்றும் கடல் மட்ட உயர்வு ஆகியவற்றில் சந்தேகத்திற்கு இடமில்லாத பங்களிப்பின் காரணமாக மட்டுமல்லாமல், பரிஸ் உடன்படிக்கையின் கீழ் அரசுகளால் மேற்கொள்ளப்படும் சட்டப்பூர்வமான கடமைகளின் காரணமாகவும் விவசாயத்தில் புதைபடிவ எரிபொருள் வழித்தோன்றல்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தையும் கலாநிதி. கொஹொன சுட்டிக் காட்டினார்.
கோவிட்-19 தொற்றுநோய், உக்ரைன் போர் மற்றும் பல நாடுகளைப் பாதிக்கும் நிதி நெருக்கடி ஆகியவற்றின் தாக்கத்தால் இன்று உணவு நெருக்கடி உலகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது. எமது கிரகம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வு இன்று நாம் மேற்கொள்ளும் தெரிவுகளில் தங்கியுள்ளது.
உரம் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் அதிகரித்துள்ள உணவுப் பற்றாக்குறை உட்பட தற்போதைய நெருக்கடிகளை சமாளிப்பதற்காக இலங்கைக்கு உதவிகள் தேவைப்படுகின்றன. எவ்வாறாயினும், தனது பிரதான உணவான அரிசியில் கணிசமான அளவு தன்னிறைவு பெற்ற ஒரு நாடாக, உடனடியலான சிரமங்களை எதிர்கொண்டதுடன், இலங்கை விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கைத் தூதரகம்,
பெய்ஜிங்
2022 ஆகஸ்ட் 31