கென்யாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் வேலுப்பிள்ளை கனநாதன், கென்யாவில் வதியும் கினியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமனம் பெற்றுள்ள தனது நற்சான்றிதழை 2022 மார்ச் 11ஆந் திகதி கொனாக்ரியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்து கினியாவின் ஜனாதிபதி மாமடி டூம்பூயாவிடம் வழங்கினார்.
நற்சான்றிதழ்களை சமர்ப்பித்ததன் பின்னர், இருதரப்பு உறவுகளின் நிலை மற்றும் பொதுவான நலன்கள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்காக ஒரு சுருக்கமான சந்திப்புக்கு இலங்கைத் தூதுவரை ஜனாதிபதி டூம்பூயா அழைத்திருந்தார். கினியாவில் நற்சான்றிதழ்களைக் கையளித்துள்ளஇலங்கையின் முதலாவது தூதுவராக தூதுவர் கனநாதனைப் பெற்றுக் கொள்வதில் மகிழ்ச்சியடைவதாகக் கூறிய கினியா ஜனாதிபதி, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் இது ஒரு 'வரலாற்று' தருணம் என்றும் குறிப்பிட்டார்.
தூதுவர் கனநாதன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வாழ்த்துக்களை ஜனாதிபதி டூம்பூயாவுக்குத் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி டூம்பூயா, தூதுவருக்கு நன்றிகளைத் தெரிவித்ததுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கான தனது வாழ்த்துக்களையும் நேர்மையான நல்வாழ்த்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
நெருங்கிய உறவுகளைப் பேணுவது தொடர்பான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட ஜனாதிபதியும் தூதுவரும், இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகளை உண்மையான சாத்தியங்களை அடைவதற்கு உறுதியளிக்கும் பொருளாதார செயற்பாடுகளை உள்ளடக்கிய செயற்பாட்டு ஒத்துழைப்பாக செயற்பட வேண்டியதன் அவசியத்தை சுட்டிக் காட்டினார்கள்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை அரசாங்கத்தின் கோவிட்-19 தொற்றை வினைத்திறனான நிர்வாகம், தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் மூலோபாயம் மற்றும் கோவிட்-19க்கு எதிராக மக்கள் தொகையில் 81% க்கும் அதிகமானோருக்கு தடுப்பூசிகளை வெற்றிகரமாக செலுத்தியமையை தூதுவர் கனநாதன் கினியா ஜனாதிபதியிடம் தெரிவித்தார். இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான பயனுள்ள மற்றும் ஆற்றல்மிக்க தடுப்பூசித் திட்டத்தை ஜனாதிபதி டூம்பூயா பாராட்டியதுடன், தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை விரைவாக புத்துயிர் பெறுவதற்கான அவரது முயற்சிகளில் வெற்றிபெற வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
மேலும், தூதுவர் கனநாதன், மோதலுக்குப் பிந்தைய பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் எஞ்சியுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் விரைவாகத் தீர்வு காண்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு குறித்தும் கினியா ஜனாதிபதிக்கு விளக்கினார். இது தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட உள்ளகப் பொறிமுறைகள், இலக்குகளை திறம்பட எட்டுவதற்கு சிறப்பாகச் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். மோதலுக்குப் பிந்தைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அடையாளம் காணப்பட்ட இலக்குகளை அடைவதற்கான இலங்கையின் முயற்சிகளை அங்கீகரிப்பதற்காக பலதரப்பு மன்றங்களில் கினியா இலங்கைக்கு ஆதரவளிக்கும் என கினியா ஜனாதிபதி பதிலளித்தார்.
ஆபிரிக்காவில் தொழில்முனைவோராக கினியாவுடனான தூதுவர் கனநாதனின் தொடர்புகள் மற்றும் கினியாவின் முன்னாள் ஜனாதிபதி அல்பா காண்டேவின் முதலீட்டு ஆலோசகராக அவரது கடந்த கால பங்களிப்பை நினைவுகூர்ந்த ஜனாதிபதி மாமடி டூம்பூயா, கினியா முதலீட்டு ஊக்குவிப்பு முகவரமைப்பின் மூலம் சோளப் பயிர்ச்செய்கை மற்றும் சர்க்கரைத் தொழிலில் வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வந்தமைக்கு நன்றிகளைத் தெரிவித்தார். கினியாவிற்கான தூதுவர் என்ற வகையில், கினியாவில் வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்காக முன்வைக்கப்பட்டுள்ள மிகவும் இலாபகரமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ் பல்வேறு துறைகளில் முதலீடு செய்வதற்கு இலங்கையில் இருந்து கினியாவுக்கு அதிக முதலீடுகளைக் கொண்டு வர முடியும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
ஆபிரிக்கா மற்றும் குறிப்பாக கினியாவுடன் நன்கு பரிச்சயமான கினியாவின் நண்பன் என்ற வகையில் ஒத்துழைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நன்கு அறிந்திருந்த தூதுவர் கனநாதனுக்கு இரு நாடுகளினதும் நலனுக்காக இலங்கை மற்றும் கினியாவுக்கு இடையிலான அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் சிறப்பான ஆற்றல் இருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். இலங்கைக்கும் கினியாவுக்கும் இடையிலான உறவுகளில் அடையாளம் காணப்பட்ட இலக்குகள் மற்றும் நோக்கங்களை அடைந்து கொள்வதற்கு கினியா ஜனாதிபதி தனது அரசாங்கத்தின் ஆதரவை உறுதிப்படுத்தி, தூதுவரின் பணிகளின் வெற்றிகளுக்காக வாழ்த்தியதுடன் சந்திப்பு நிறைவுற்றது.
இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,
நைரோபி
2022 மார்ச் 23