துருக்கிய வான்வெளித் தொழில்துறை மற்றும் இலங்கையின் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இடையே இணைப்புக்கள்

துருக்கிய வான்வெளித் தொழில்துறை மற்றும் இலங்கையின் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இடையே இணைப்புக்கள்

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் துருக்கிய வான்வெளித் தொழில்துறை அகடமி ஆகியவற்றுக்கு இடையே ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்காக, இலங்கையின் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் மற்றும் துருக்கிய வான்வெளி தொழில்துறை அகடமியின் தலைவர் பேராசிரியர் அஹ்மட் பனார்பாசி ஆகியோருக்கு இடையில் மெய்நிகர் கலந்துரையாடல் 2022 பெப்ரவரி 14ஆந் திகதி நடைபெற்றது.

15வது சர்வதேச பாதுகாப்பு தொழில் கண்காட்சி 2021 இல் கலந்துகொள்வதற்காக துருக்கிக்கு சென்ற இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் ஜி.டி.எச் கமல் குணரத்ன (ஓய்வு பெற்றவர்) WWV RWP RSP USP ndc psc MPhil அவர்களின் விஜயத்தின் தொடர்ச்சியாகவே இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. விஜயத்தின் போது, பாதுகாப்பு செயலாளர் ஐ.டி.இ.எப். கண்காட்சியில் உள்ள துருக்கிய வான்வெளி தொழில்துறைக் கூடத்தைப் பார்வையிட்டார். துருக்கிய வான்வெளித் தொழில்துறையின் தலைவர் பேராசிரியர் ரஃபெட் போஸ்டோகன் மற்றும் துருக்கிய வான்வெளித் தொழில்துறையின் தலைமை நிர்வாக அதிகாரி பேராசிரியர் டெமெல் கோடில் ஆகியோர் துருக்கிய வான்வெளித் தொழில் குறித்து விஷேன விளக்கமளித்ததுடன், இலங்கையுடன் ஒத்துழைக்க விருப்பம் தெரிவித்தனர்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் தனது கருத்துரையின் போது, துருக்கிய வான்வெளித் துறையின் வலிமையைக் குறிப்பிட்டு துருக்கிய வான்வெளித் தொழில்துறைக்கான தொழில்துறை பயிற்சி வாய்ப்புக்கள் மற்றும் ஆய்வு விஜயங்கள் உள்ளடங்கலாக மாணவர் பரிமாற்றங்கள், கல்விப் பரிமாற்றங்கள், போன்றவற்றில் தொடர்புகளை ஏற்படுத்த விருப்பம் தெரிவித்தார்.

துருக்கிய வான்வெளித் துறை அகடமியின் தலைவர் பேராசிரியர் அஹ்மத் பனார்பாசி, துருக்கிய வான்வெளித் தொழில் குறித்து விளக்கியதுடன், துருக்கிய வான்வெளித் தொழில்துறையானது ஒத்துழைப்பின் சாத்தியமான பகுதிகளில் பணியாற்றத் தயாராக இருப்பதாகவும், அது விரைவில் முன்மொழியப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.

தனது ஆரம்ப உரையின் போது, துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் ரிஸ்வி ஹாசன், துருக்கிய வான்வெளித் தொழில்துறைக்கும் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்திற்கும் இடையில் தொடர்புகளை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

மேலும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை இரு தரப்பும் ஆராய்ந்தன.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட கல்வி ஊழியர்கள் மற்றும் துருக்கிய வான்வெளி தொழில்துறையின் சிரேஷ்ட அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டதுடன், ஒத்துழைப்பு தொடர்பான தமது நிபுணத்துவத்தை பகிர்ந்து கொண்டனர்.

இலங்கைத் தூதரகம்,

அங்காரா

2022 பிப்ரவரி 21

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close