துபாயில் எக்ஸ்போ 2020 இல் 'இலங்கையின் எக்ஸ்போ தேசிய தினத்தின்' பிரமாண்டமான கொண்டாட்டங்கள்

துபாயில் எக்ஸ்போ 2020 இல் ‘இலங்கையின் எக்ஸ்போ தேசிய தினத்தின்’ பிரமாண்டமான கொண்டாட்டங்கள்

இலங்கையின் எக்ஸ்போ தேசிய தினம் 2022 ஜனவரி 03ஆந் திகதி துபாயில் நடைபெற்ற எக்ஸ்போ 2020 இல் அல் வாசல் பிளாசாவில் கொண்டாடப்பட்டது. எக்ஸ்போ 2020 இல் இடம்பெற்ற தேசிய தின உத்தியோகபூர்வ விழாவில் சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் தொடர்பான கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் ரொஹான் ரத்வத்த, பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே, வெளியுறவச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே மற்றும் துபாய் மற்றும் வடக்கு எமிரேட்ஸிற்கான இலங்கையின் துணைத் தூதுவர் நலிந்த விஜேரத்ன ஆகியோருடன் இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டனர். ஐக்கிய அரபு இராச்சியத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கு ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர் அஹ்மத் அலி அல் சயேக் தலைமை தாங்கினார்.

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளினதும் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டு கொடியேற்றத்துடன் உத்தியோகபூர்வ விழா தொடங்கியது. இராஜாங்க அமைச்சர் அஹமட் அலி அல் சயேக் தனது ஆரம்ப உரையில், இலங்கையின் தூதுக் குழுவை அன்புடன் வரவேற்றதுடன், எக்ஸ்போ 2020 இல் இலங்கையின் வெற்றிகரமான பங்கேற்பிற்கு ஐக்கிய அரபு இராச்சிய அரசாங்கத்தின் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், சுற்றுலாத் தலமாக மட்டுமன்றி, பெறுமதி சேர்க்கப்பட்ட பொருட்கள், கற்கள் மற்றும் ஆபரணங்கள், தொழில்துறை மற்றும் தயாரிக்கப்பட்ட பொருட்கள் உட்பட ஏற்றுமதிகளை ஊக்குவிக்கும் தளமாகவும் எக்ஸ்போ 2020 இல் இலங்கை பங்குபற்றுவதன் முக்கியத்துவத்தை விளக்கினார். சன்னா-உபுலி நடனக் குழுவின் வண்ணமயமான கலாச்சார நிகழ்ச்சியுடன் உத்தியோகபூர்வ விழா நிறைவடைந்தது.

உத்தியோகபூர்வ வைபவத்தின் இறுதியில் இரு தூதுக்குழுக்களும் இலங்கையின் கூடம் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் கூடம் ஆகியவற்றை பார்வையிட்டதுடன், கௌரவப் புத்தகத்தில் வெளிநாட்டு அமைச்சர் கையொப்பமிட்டதன் மூலம் உத்தியோகபூர்வ நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.

உத்தியோகபூர்வக் கொண்டாட்டங்களுக்கு இணையாக சர்வதேச ஊடகப் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் இலங்கையின் துணைத் தூதுவர் மற்றும் இலங்கை சுற்றுலாத்துறையின் தலைவருடன் ஊடகவியலாளர் மாநாடும் நடைபெற்றது.

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் அழைப்பின் பேரில், விமான நிலையம் மற்றும் விமான சேவைகளின் உப தலைவர் ராஜீவ் சூரியாராச்சி, லக்சலவின் தலைவர் லக்மால் விக்கிரமாராச்சி, இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்க மற்றும் உள்ளூர் ஊடகப் பிரதிநிதிகள் குழுவும் துபாயில் நடைபெற்ற எக்ஸ்போ 2020 இன் இலங்கை தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர்.

துபாய் மற்றும் வடக்கு எமிரேட்ஸ் துணைத் தூதரகம்,

ஐக்கிய அரபு இராச்சியம்

2022 ஜனவரி 11

Please follow and like us:

Close