தீவுக்கூட்டம் மற்றும் தீவு அரசுகள் மன்றம் - பாலியின் 4வது அமைச்சர்கள் கூட்டத்தில் வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய பங்கேற்பு

தீவுக்கூட்டம் மற்றும் தீவு அரசுகள் மன்றம் – பாலியின் 4வது அமைச்சர்கள் கூட்டத்தில் வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய பங்கேற்பு

2022 டிசம்பர் 5 - 6 வரை இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற தீவுக்கூட்டம் மற்றும் தீவு அரசுகள் மன்றத்தின் 4வது அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றிய வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, கடல்சார் பேரழிவுகளுக்கு விரைவாகப் பதிலளிப்பதற்கும் உதவுவதற்கும் உறுதியான பொறிமுறையை நிறுவுவதன் முக்கியத்துவத்தையும், பேரழிவுகளுக்குப் பிந்தைய மீட்புக்கான உதவியையும் வலியுறுத்தினார். தீவுக்கூட்டம் மற்றும் தீவு அரசுகள் மன்றத்தின் நிகழ்ச்சி நிரலின் பணிகளுக்கு இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும், மன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள கூட்டு இலக்குகளை அடைவதற்காக தீவுக்கூட்டம் மற்றும் தீவு அரசுகளின் உறுப்பு நாடுகளுடன் திறம்பட ஒத்துழைத்து ஒருங்கிணைப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.

தீவுக்கூட்டம் மற்றும் தீவு அரசுகள் மன்றத்தின் அரசுகளுக்குள் இருக்கும் முதலீட்டு வாய்ப்புக்களையும், முதலீட்டை ஈர்ப்பதற்காக அந்தந்த உறுப்பு நாடுகளில் முதலீட்டு நட்பு சூழலை உருவாக்குவதையும் அவர் எடுத்துரைத்தார்.

தீவுக்கூட்டம் மற்றும் தீவு அரசுகள் மன்றத்தின் பக்க அம்சமாக, இந்தோனேசியாவின் கடல்சார் மற்றும் முதலீட்டு விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் லுஹூட் பி. பாண்டிஜைதன் மற்றும் மடகஸ்காரின் பாதுகாப்பு அமைச்சர் ரகோடோனிரினா ஜீன் ரிச்சர்ட் ஆகியோருடன் அமைச்சர் பாலசூரிய ஆக்கபூர்வமான இருதரப்பு சந்திப்புக்களில் ஈடுபட்ட அதே வேளை, முறையே பப்புவா நியூ கினியா மற்றும் திமோர் லெஸ்டே ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களையும் சந்தித்தார். மேலும், கடல் வளங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு தொடர்பான தனது எண்ணங்கள், முயற்சிகள் மற்றும் இலங்கையின் தலைமைத்துவத்தை பகிர்ந்து கொள்வதற்காக,  'நீலக் கண்டுபிடிப்புத் தீர்வு மாநாடு மற்றும் சமுத்திரப் பாதுகாப்பிற்கான உள்ளூர் வெற்றியாளர்கள்' என்ற பக்க நிகழ்வில் அமைச்சர் கலந்து கொண்டார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2022 டிசம்பர் 09

Please follow and like us:

Close