தாய்லாந்து இராச்சியத்தின் பிரதம மந்திரி ஸ்ரேத்தா தவிசின்  இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு

தாய்லாந்து இராச்சியத்தின் பிரதம மந்திரி ஸ்ரேத்தா தவிசின்  இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு

தாய்லாந்து இராச்சியத்தின் பிரதம மந்திரி ஸ்ரேத்தா தவிசின் 2024 பெப்ரவரி 3 - 4 வரையான தனது இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில், இலங்கையின் 76வது சுதந்திர தின விழாவில் கௌரவ அதிதியாக கலந்துகொள்வதற்காகவும், இலங்கை - தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திடப்படுவதை பார்வையிடுவதற்காகவும் பிரதம மந்திரி தவிசின் இலங்கைக்கு  விஜயம் செய்திருந்தார். மேலும், 1950 இல் முதன் முதலாக கைச்சாத்திடப்படட விமான சேவைகள் ஒப்பந்தத்தை புதுப்பித்த இரு தரப்பினரும், இரத்தினங்கள் மற்றும் ஆபரணத் துறையிலான ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட்டனர். பிரதிப் பிரதமர் மற்றும் வர்த்தக அமைச்சர், வெளிவிவகார பிரதி அமைச்சர், நிரந்தர வெளிவிவகார செயலாளர் மற்றும் தாய்லாந்து அரசாங்கத்தின் சிரேஷ்ட பிரமுகர்கள் மற்றும் உயர்மட்ட வர்த்தகக் குழுவினரும் பிரதம மந்திரியுடன் இணைந்து வருகை தந்திருந்தனர்.

இலங்கையை வந்தடைந்த தாய்லாந்து பிரதமர் மற்றும் ஏனைய உயர்மட்டக் குழுவினரை பிரதமர் தினேஷ் குணவர்தன, பதில் வெளிநாட்டு அலுவல்கள்  அமைச்சர் தாரக்க பாலசூரிய மற்றும் வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன ஆகியோர் அன்புடன் வரவேற்றனர். இருதரப்புக் கலந்துரையாடல்கள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, தாய்லாந்து பிரதமருக்கு ஜனாதிபதி செயலகத்தில் இலங்கை விமானப்படையினரால் கௌரவிப்பு மரியாதை வழங்கப்பட்டது.

தாய்லாந்து பிரதம மந்திரி மற்றும் ஜனாதிபதி விக்கிரமசிங்க ஆகியோரின் முன்னிலையில், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இலங்கை - தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தாய்லாந்தின் பிரதிப் பிரதமரும் வர்த்தக அமைச்சருமான பம்தாம் வெச்சயச்சாய் மற்றும் இலங்கையின் வர்த்தகம், வணிகம் மற்றும்  உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நலின் பெர்னாண்டோ ஆகியோரால் கைச்சாத்திடப்பட்டது. சுதந்திர வர்த்தக உடன்படிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்துவதற்கு வலுவான உத்வேகத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இருதரப்புக் கலந்துரையாடல்களின் போது, பன்முகத்தன்மை கொண்ட  இலங்கை - தாய்லாந்து உறவு மற்றும் பிராந்திய மற்றும் பலதரப்பு மன்றங்களிலான ஒத்துழைப்பு ஆகியவற்றை இருதரப்பினரும் மீளாய்வு செய்தனர். குறிப்பாக மீன்பிடி, விவசாயம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை ஆற்றல், சுற்றுலா, விருந்தோம்பல் மற்றும் உணவுப் பதப்படுத்துதல் போன்ற இலக்காகக் கொள்ளப்படும் துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே முதலீட்டை ஊக்குவிப்பது குறித்து விஷேட கவனம் செலுத்தப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இணைப்பை மேம்படுத்தும் வகையில்,  பரஸ்பர அடிப்படையில் விசா இல்லாத பயணத்தை எளிதாக்குவதற்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். தாய் எயார்வேஸ் 2024 மார்ச் 31 ஆந் திகதி முதல் பேங்கொக் மற்றும் கொழும்புக்கு இடையே நாளாந்த வணிக விமானங்களை மீண்டும் தொடங்கவுள்ளதாக பிரதம மந்திரி தவிசின் அறிவித்தார். இந்த இரண்டு முக்கிய நடவடிக்கைகளும், மக்களுக்கு இடையேயான பரிமாற்றம், வர்த்தகம், சுற்றுலா மற்றும் முதலீட்டு உறவுகளை மேலும் எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தேரவாத பௌத்த உறவுகளின் அடிப்படையிலான பகிரப்பட்ட வரலாற்று மற்றும் கலாச்சார தொடர்புகளை பிரதிபலிப்பதன் மூலம் இலங்கைக்கும்  தாய்லாந்திற்கும் இடையிலான மத மற்றும் கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டது.

கடல்சார் இணைப்பு தொடர்பில், தாய்லாந்து தரைப்பாலத் திட்டம் மற்றும்  இலங்கையின் தற்போதைய துறைமுக அபிவிருத்திகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இலங்கை மற்றும் தாய்லாந்தின் புவிசார் மூலோபாய அமைவிடங்களின் அடிப்படையில் கடல்சார் இணைப்பு எதிர்கால ஒத்துழைப்பின் முக்கியமான பகுதியாகக் கருதப்பட்டது.

இலங்கை அதிகாரிகளின் திறன் அபிவிருத்தி, நிபுணத்துவப் பகிர்வு மற்றும் பயிற்சி ஆகியவற்றிற்காக தாய்லாந்து சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம்  பல ஆண்டுகளாக வழங்கிய உதவிகளுக்கு ஜனாதிபதி விக்கிரமசிங்க நன்றிகளைத் தெரிவித்தார்.

இரு தரப்புக்கும் இடையே பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை  அதிகரிப்பதுடன், நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதன் முக்கியத்துவம் குறித்தும் இந்தக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

பிம்ஸ்டெக், ஐயோரா, ஆசியான் பிராந்திய மன்றம் மற்றும் ஐக்கிய நாடுகளுக்குள் உள்ள பிராந்திய மற்றும் பலதரப்பு மன்றங்களில் இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான சிறந்த ஒத்துழைப்புக்களை இரு நாடுகளும்  தொடர்ந்தும் பகிர்ந்து கொள்வதானது, இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான வலுவான உறவுகளைப் பிரதிபலிக்கின்றது.

இந்த விஜயத்தின் பக்க அம்சமாக, கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்ற இலங்கை - தாய்லாந்து வர்த்தக மாநாட்டில் பிரதம மந்திரி தவிசின் மற்றும் ஜனாதிபதி விக்கிரமசிங்க ஆகியோர் உரையாற்றினர். உணவு பதப்படுத்துதல்,  சுகாதாரம், எரிசக்தி, விருந்தோம்பல், சுற்றுலா, மீன்பிடி, விவசாயம் மற்றும் உற்பத்தித் துறைகள் சார்ந்த 21 தாய்லாந்து நிறுவனங்களின் உயர்மட்ட வணிகக் குழுவினரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான  இணைப்பு ஆகியவற்றில் குறிப்பிட்ட வகையில் கவனம் செலுத்துவதன் மூலம் ஒத்துழைப்பிற்கான பகுதிகளை பன்முகப்படுத்தும் இரு அரசாங்கங்களினதும் வலுவான நோக்கத்தை தாய்லாந்து பிரதம மந்திரியின் இந்த விஜயம் எடுத்துக்காட்டுகின்றது.

விஜயத்தின் நிறைவில், பிரதம மந்திரி ஸ்ரேத்தா தவிசின் மற்றும் தூதுக்குழுவினருக்கு இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எம்.யூ.எம்.  அலி சப்ரி அன்பான பிரியாவிடையை வழங்கினார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2024 பிப்ரவரி 04

 

Please follow and like us:

Close