வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தனவை 2020 டிசம்பர் 17ஆந் திகதி மரியாதை நிமித்தம் சந்தித்த இலங்கைக்கான தாய்லாந்தின் தூதுவர் சூலாமணி சார்ட்சுவான், மேம்பட்ட வணிக ஒத்துழைப்பை எளிதாக்கும் நோக்கில் பிராந்திய மற்றும் சர்வதேச அரங்குகளில் நெருக்கமாக பணியாற்றுவது குறித்து கலந்துரையாடினார்.
இரு நாடுகளும் பிம்ஸ்டெக்கில் பொதுவானதொரு நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகவும், இலங்கையுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாகவும், உச்சி மாநாடு விரைவில் கொழும்பில் நடைபெறும் என நம்புவதாகவும் தாய் தூதுவர் மீண்டும் வலியுறுத்தினார்.
தாய்லாந்தின் இன்றைய வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கைகள் இலங்கைக்கான முதலீட்டு வாய்ப்புக்களைத் திறக்கின்றன. தாய்லாந்து முதலீட்டாளர்கள் வவுனியாவில் சர்க்கரைத் தோட்டத்திற்கான முதலீட்டுத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு ஆர்வமாக உள்ளதாக தூதுவர் குறிப்பிட்டார்.
ஜூலை 2018 இல் தாய்லாந்து பிரதமர் ஜெனரல் பிரயுத் சான்-ஓ-சா அவர்களின் விஜயத்தின் போது, மூலோபாயப் பொருளாதாரக் கூட்டாண்மை குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக தூதுவர் சார்ட்சுவான் மேலும் குறிப்பிட்டார். உட்கட்டமைப்பு, விவசாயத் துறை, மீன்வளம், மாணிக்கக்கற்கள் மற்றும் ஆபரணங்கள், சுற்றுலா, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், நிதி ஒத்துழைப்பு, பொதியிடல் தொழில்கள், தகவல் தொழில்நுட்பத் துறை அபிவிருத்தி மற்றும் பரஸ்பர பொருளாதார ஆர்வத்தின் ஏனைய 10 துறைகளை இந்த ஒத்துழைப்பு அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.
இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான வர்த்தகத் தொடர்புகளை விரிவுபடுத்துவதற்காக, மூலோபாயப் பொருளாதாரக் கூட்டாட்சியை இலங்கை அதிகபட்சமாக பயன்படுத்தும் என அமைச்சர் குணவர்தன தெரிவித்தார்.
வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு
19 டிசம்பர் 2020