தற்போதைய முன்முயற்சிகள் குறித்து வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இராஜதந்திரிகளுக்கு விளக்கம்

தற்போதைய முன்முயற்சிகள் குறித்து வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இராஜதந்திரிகளுக்கு விளக்கம்

புதிய ஆண்டின் முதலாவது இராஜதந்திர மாநாட்டின்போது, வெளிநாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இராஜதந்திரிகளுக்கு வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் 2022 ஜனவரி 26ஆந் திகதி உரையாற்றினார்.

தற்போதைய முன்னேற்றங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக அமைச்சினால் ஒழுங்கமைக்கப்பட்ட வழக்கமான விளக்கங்களின் தொடர்ச்சியாக, முழு இராஜதந்திரப் படையினரையும் சந்திப்பதற்கான வாய்ப்பை வெளிநாட்டு அமைச்சர் பாராட்டினார். பெப்ரவரி இறுதி வாரத்தில் ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் 49ஆவது கூட்டத் தொடருக்கு முன்னதாக மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான முன்னேற்றம் தொடர்பான தகவல்களைப் பகிர்வதே இன்றைய மாநாட்டின் நோக்கமாகும்.

மனித உரிமைகள் பேரவையின் செப்டெம்பர் 2021 அமர்வில், மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும், மனித உரிமைகள் பேரவை உட்பட ஐக்கிய  நாடுகள் சபையுடன் தொடர்ந்தும் ஈடுபடுவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியதை அமைச்சர் நினைவு கூர்ந்தார். இந்த சூழலில், சர்வதேச சமூகத்துடனான ஒத்துழைப்பு மற்றும் உரையாடல் சார்ந்த உணர்வுடனான ஆக்கபூர்வமான ஈடுபாட்டை அமைச்சர் குறிப்பிட்டார்.

பொறுப்புக்கூறல், நீதி மறுசீரமைப்பு மற்றும் அர்த்தமுள்ள நல்லிணக்கம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு உள்நாட்டு நிறுவனங்களின் செயற்பாடுகளினூடாக இலங்கை அரசாங்கம் கணிசமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்த வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ், தற்போது ஏற்பட்டுள்ள உறுதியான முன்னேற்றங்கள் குறித்து விளக்கமளிக்குமாறு  இந்த நிறுவனங்களின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார். அதற்கிணங்க, கடந்த வருடத்தில் உள்நாட்டு நிறுவனங்களால் ஏற்படுத்தப்பட்ட முன்னேற்றங்கள் தொடர்பான விளக்கங்கள் இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் தலைவி திருமதி தாரா விஜயதிலக, நிலையான அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் நாயகம் திருமதி சாமிந்திரி சப்பரமாது, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. தீப்தி லமாஹேவா, காணாமல் போனோர் அலுவலகத்தின் சட்டப் பிரிவின் தலைவர் திரு. த. தப்பரன் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆய்வு மற்றும் கண்காணிப்புக்கான பணிப்பாளர் திரு. நிஹால் சந்திரசிறி ஆகியோரினால் வழங்கப்பட்டன.

43 வருடங்களின் பின்னர் சர்வதேச நியதிகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு  அமைவாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் கொண்டுவரும் நோக்கத்துடன் திருத்தப்பட்டு வருவதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார். உத்தேசத் திருத்தங்கள் அடங்கிய சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் இறுதி அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சட்டமூலத்தை சமர்பிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். பல மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட நீண்ட கலந்துரையாடலின் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டம் திருத்தப்பட்டு வருவதாக அமைச்சர் விளக்கமளித்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் முக்கிய திருத்தங்களில் தடுப்புக் காவல் உத்தரவு, கட்டுப்பாட்டு உத்தரவு, நீதித்துறை மீளாய்வு உத்தரவுகளை வெளிப்படையாக அங்கீகரித்தல் தொடர்பான பிரிவுகளில் திருத்தங்களை மேற்கொள்ளுதல், நீண்ட கால தடுப்புக் காவலில் வைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்குகளை விரைவாகத் தீர்த்தல், சுதந்திரத்துக்கு இடையூறு விளைவிக்கும் பிரிவுகளை இரத்துச் செய்தல், நீதிவான்கள் மற்றும் நீதித்துறை மருத்துவ அதிகாரிகளை அணுகுவதற்கான விதிகளை வெளிப்படுத்துதல் மற்றும் அறிமுகப்படுத்துதல், தடுப்புக் காவலில் உள்ள காலத்தில் துஷ்பிரயோகம் மற்றும் சித்திரவதைகளைத் தடுத்தல், குடும்பத்துடன் தொடர்புகொள்வதற்கான உரிமை, நீண்ட  கால கைதிகளுக்கு பிணை வழங்குதல் மற்றும் வழக்குகளை நாளாந்தம் விசாரணை செய்தல் போன்ற பிரிவுகளிலான திருத்தங்கள் உள்ளடங்கும்.

நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதற்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 13ஆவது பிரிவின்  கீழ் ஆலோசனை சபையொன்றை ஸ்தாபிப்பதையும் அமைச்சர் குறிப்பிட்டார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவல் உத்தரவு அல்லது கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட எவருக்கும் அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோருவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தண்டனை அனுபவித்து வந்த 16 விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டதுடன், பயங்கரவாதச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டின் கீழ் நீண்டகாலமாக நீதிமன்றக் காவலில் உள்ள கைதிகளை விடுதலை செய்வதற்கான சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 2022 ஜனவரி 13 நிலவரப்படி மேலும் 13 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள  திரு. ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்பான வழக்கின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்தும் வெளிநாட்டு அமைச்சர் குறிப்பிட்டார். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பிணை வழங்குவதை எதிர்க்கப் போவதில்லை என சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் அறிவித்துள்ளார். தொல்பொருள் பாரம்பரிய முகாமைத்துவம் தொடர்பான ஜனாதிபதி செயலணி தொடர்பில், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களின் பிரதிநிதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

கிழக்கு, தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களுக்கு தான் மேற்கொண்ட விஜயங்கள் மற்றும் இலங்கையின் வடமாகாணத்திற்கான தனது எதிர்வரும் விஜயம் ஆகியன நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதற்காக அரசாங்கம் ஏற்கனவே முன்னெடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் குறித்து கலந்துரையாடி கருத்துக்களைப் பெறுவதற்காக, அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள், புத்திஜீவிகள் மற்றும் கல்வியியலாளர்கள், அடிமட்டத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புக்களின் உறுப்பினர்கள் உட்பட பல்வேறு தரப்பினருடன் ஆலோசனையில் ஈடுபடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தூதரகத் தலைவர்களுக்கு வெளிநாட்டு அமைச்சர் அறிவித்தார்.

நிலைமாறுகால நீதி, நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைதல் மற்றும்  பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்கள் ஆகிய துறைகளில் சம்பந்தப்பட்ட தேசிய நிறுவனங்கள் ஆற்றிய பணிகளை ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர்-ஹம்டி பாராட்டினார். மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்காக இலங்கையுடன் இணைந்து செயற்படும் சர்வதேச சமூகத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த எகிப்தின் தூதுவர் மகேத் மொஸ்லே, பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதிலும் அதன் பின்விளைவுகளைக் கையாள்வதிலும் இலங்கை அடைந்துள்ள அற்புதமான சாதனைகளை சுட்டிக்காட்டினார்.

வெளிநாட்டு அமைச்சு,

கொழும்பு

2022 ஜனவரி 27

Please follow and like us:

Close