டோஹாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் கொண்டாடப்பட்ட இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினம்

டோஹாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் கொண்டாடப்பட்ட இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினம்

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினம், 2022 பெப்ரவரி 4 ஆம் திகதியன்று டோஹாவிலுள்ள இலங்கை தூதரக வளாகத்தில், தூதரக அலுவலர்களின் பங்கேற்புடன் கொண்டாடப்பட்டது.

தேசியக் கொடியேற்றி, தேசிய கீதம் இசைத்து ஆரம்பிக்கப்பட்ட சுதந்திர தின நிகழ்வில் அடுத்து, தாய் நாட்டின் விடுதலைக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்த எல்லா தேசப்பற்றாளர்களையும் கௌரவிக்கும் வண்ணம் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின், இலங்கை நாட்டிற்கும் அதன் தலைவர்கள் மற்றும் சகல மக்களுக்கும் ஆசீர்வாதங்களை வழங்குவதற்காக பௌத்த, இந்து, முஸ்லிம் மற்றும் கத்தோலிக்க மதங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சமய பிரமுகர்களால் பல்சமய பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.

தூதரக அதிகாரிகளால் இலங்கை பிரதம மந்திரி மற்றும் வெளிநாட்டு அமைச்சர் ஆகியோரின் சுதந்திர தின செய்திகள் வாசிக்கப்பட்டன.

74ஆவது சுதந்திர தின நிகழ்வில், “ஒரு வளமான எதிர்காலம் மற்றும் சவால்களைத் தோற்கடிக்கும் வளமான தாய்நாடு" எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரைக்கு அமைவாக, கூட்டத்தில் உரையாற்றிய கட்டார் நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் எம்.மஃபாஸ் மொஹிதீன் அவர்கள், அன்றைய தினத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.  தூதுவர் மஃபாஸ் மேலும் உரையாற்றுகையில், தற்போதைய உலகளாவிய கொவிட்-19 தொற்றுநோயின் பாதகமான தாக்கத்தைச் சமாளிக்க தீவிரமாக பாடுபடுவதற்கும் அத்தாக்கம் இலங்கைப் பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களை முறியடித்து, பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் இலங்கை அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு கட்டாரில் வசிக்கும் இலங்கை மக்கள் அனைவரும்  தம்மை மீள அர்ப்பணித்துக் கொள்ளவேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.

இலங்கைக்கும் கட்டார் அரசுக்கும் இடையில் நீடித்திருக்கும் இருதரப்பு உறவுகளை மதிக்கின்ற தூதுவர் மஃபாஸ் அவர்கள், இலங்கைக்கு தொடர்ந்த ஆதரவினை வழங்கி வருவதற்காக கட்டார் அரசர் மேன்மை தங்கிய ஷேக் தமிம் பின் ஹமாட் அல் தானி, மேன்மை தங்கிய தந்தை அமீர், ஷேக் ஹமாட் பின் கலீஃபா அல் தானி அவர்களுக்கும் நட்புறவுள்ள கட்டார் மக்கள் அனைவருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.

பாரம்பரிய இலங்கை உணவு வகைகள் மற்றும் சிற்றுண்டிகள் வழங்கியமையுடன் இந்நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.

இலங்கை தூதரகம்

டோஹா

09 பெப்ரவரி 2022

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close