1951 செப்டம்பர் 06ஆந் திகதி சென் பிரான்சிஸ்கோவில் அப்போதைய நிதியமைச்சர் திரு. ஜே.ஆர். ஜயவர்த்தன அவர்களால் ஆற்றப்பட்ட உரையானது, டோக்கியோவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் 2021 செப்டம்பர் 06ஆந் திகதி மட்டுப்படுத்தப்பட்ட மிக முக்கியமான ஜப்பானியத் தூதுக்குழுவுடன் நினைவுகூரப்பட்டது. பாரம்பரிய எண்ணெய் விளக்கை ஏற்றி வைத்தல் மற்றும் மலர் வைக்கும் நிகழ்வைத் தொடர்ந்து தேசிய கீதத்துடன் விழா தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்புவதற்காக முக்கிய ஜப்பானியத் தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் அனைத்து முக்கிய அச்சு ஊடகப் பிரதிநிதிகளும் வருகை தந்திருந்தனர். மறைந்த திரு. ஜயவர்த்தன அவர்களின் உண்மையான உரையை வாசித்தல், புகைப்படக் கண்காட்சி, உரை பற்றிய வீடியோக் காட்சி மற்றும் 1951 இல் இடம்பெற்ற சென் பிரான்சிஸ்கோ மாநாடு ஆகியவை இந்த நிகழ்வில் உள்ளடங்கியிருந்தன.
இலங்கையில் அமைதியை கட்டியெழுப்புதல், புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு தொடர்பான ஜப்பான் அரசாங்கத்தின் முன்னாள் பிரதிநிதி திரு. யசுஷி அகாஷி, ஜப்பானின் கௌரவ முன்னாள் பிரதமர் திரு. யசுவோ புகுடா மற்றும் ஜப்பான் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் நட்புக் கழகத்தின் தற்போதைய பொதுச் செயலாளர் யூகோ ஒபுச்சி அம்மணி ஆகியோர் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் உரையாற்றினர். ஜனாதிபதி ஜயவர்த்தனவின் பேரன் திரு. பிரதீப் ஜயவர்தன இந்த நிகழ்ச்சியில் நேரடியாகக் கலந்து கொண்டு கொழும்பில் உள்ள ஜயவர்த்தன நிலையத்தில் இருந்து உரையாற்றினர்.
ஆசிய நாடுகளுடனான அதிக ஆலோசனைகள் மற்றும் சந்திப்புகளுக்குப் பின்னர் இந்த உரை எவ்வாறு எழுதப்பட்டது என்ற வரலாற்றைக் குறிப்பிட்ட தூதுவர் சஞ்சீவ் குணசேகர, சுதந்திர ஜப்பானின் விடயம் முதலில் 'கொழும்புத் திட்ட மாநாட்டில்' பரிசீலிகக்கப்பட்டதாகத் தெரிவித்தார். பரஸ்பர அபிமானத்தின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட இலங்கை - ஜப்பான் உறவைப் பற்றியும் குறிப்பிட்ட தூதுவர், பகிரப்பட்ட மதிப்புக்கள், கலாச்சாரம் மற்றும் இரு நாட்டு மக்களிடையேயான பொதுவான பௌத்த மதப் போதனைகளின் நடைமுறையை எடுத்துரைத்தார்.
இலங்கைத் தூதரகம்,
டோக்கியோ
2021 செப்டம்பர் 08