ஜப்பானியவெளிவிவகாரஅமைச்சர்டாரோகொனோஅவர்களின்இலங்கைக்கானவிஜயம்
ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் கௌரவ டாரோ கொனோ அவர்கள் 2018 ஜனவரி 04ஆந் திகதி தொடக்கம் 06ஆந் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.
இவ் விஜயத்தின் போது வெளிநாட்டு அமைச்சர் கொனோ அவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க ஆகியோருடனான சந்திப்புக்களை மேற்கொண்டதுடன், ஜப்பானின் உதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடினார். இரண்டு நாடுகளுக்குமிடையிலான நட்புறவானதும், சுமுகமானதுமான உறவுகளை அமைச்சர் கொனோ அவர்கள் நினைவு கூர்ந்ததுடன், இலங்கைக்கான அபிவிருத்தி ஒத்துழைப்புக்கள் தொடர்ச்சியாக வழங்கப்படும் எனவும் வாக்குறுதியளித்தார். இலங்கையில் உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கான ஜப்பானின் விருப்பத்தையும் அமைச்சர் கொனோ அவர்கள் குறிப்பிட்டார்.
வருகை தந்திருந்த ஜப்பானிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சருக்கான கௌரவ செயற்பாட்டு விருந்துபசாரமொன்றை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன அவர்கள் வழங்கியதுடன், இதன் போது இரண்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்களும் முதலீடு மற்றும் வாணிபம் மற்றும் பொருளாதார மேம்பாடு, விவசாயம், விஞ்ஞானம் மற்றும் தொழினுட்பம், பாதுகாப்பு மற்றும் கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய மற்றும் பல்தரப்பு மன்றங்களிலான ஒத்துழைப்பு உள்ளடங்கலான பரஸ்பர நலன் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினர். இரண்டு நாடுகளினதும் வாணிபம் மற்றும் பொருளாதார அபிவிருத்திக்காக துறைமுக இணைப்பு தொடர்பான முக்கியத்துவம் குறித்தும் இரண்டு அமைச்சர்களும் மேலும் வலியுறுத்தினர். இந்த செயற்பாட்டு விருந்துபசாரத்தில் விஷேட பணிகளுக்கான அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, இடர் முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்சனயாப்பா, பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
2018 ஜனவரி 8 தொடக்கம் 10ஆந் திகதி வரையான காலப்பகுதியில் ஜப்பான் – இலங்கை பாராளுமன்ற நட்புறவு லீக்கைச் சேர்ந்த உறுப்பினர்களின் உத்தேசிக்கப்பட்ட இலங்கைக்கான விஜயத்தையும், 2018 ஜனவரி 25 தொடக்கம் 26 வரையான காலப்பகுதிக்கான ஜப்பானிய வணிக மற்றும் தொழிற்துறை சங்க குழுவினரின் விஜயத்தையும் இரண்டு அமைச்சர்களும் வரவேற்றுக் கொண்டதுடன், இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வுகளை ஆழமாக்குவதற்காக அத்தகைய விஜயங்களின் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்திக் கூறினர்.
வட கொரியாவுடன் தொடர்புடைய ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் சம்பந்தப்பட்ட தீர்மானங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான தேவை தொடர்பில் இரண்டு அமைச்சர்களும் உடன்பட்டனர்.