'சூ சாய்', புதிய சிலோன் தேயிலை வர்த்தக நாமம் ஓமானில் அறிமுகம்

‘சூ சாய்’, புதிய சிலோன் தேயிலை வர்த்தக நாமம் ஓமானில் அறிமுகம்

சிலோன் மசாலா தேயிலையின் புதிய வர்த்தக நாமமான 'சூ சாய்' ஐ ஓமான் சுல்தானேற்றுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் 2021 நவம்பர் 10ஆந் திகதி மஸ்கட்டில் உள்ள ஓமான் தேசிய வங்கி அரங்கில் வைத்து அறிமுகப்படுத்தினார்.

இலங்கையில் உள்ள சூ குரூப் (பிரைவேட்) லிமிடெட்டின் தயாரிப்பான 'சூ சாய்' எனப் பெயரிடப்பட்டுள்ள சிலோன் மசாலா தேயிலை,  ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 10க்கும் மேற்பட்ட இயற்கையான உயர்தர இலங்கை சுவையூட்டிகளைக் கொண்ட சிலோன் தேயிலையின் பிரீமியம் தரக் கலவையை உள்ளடக்கியுள்ளது. மசாலா தேயிலை உற்பத்தி சந்தையில் சூ சாய் முதன்மை வகிப்பதுடன், ஏலம், கறுவா, கராம்பு, நட்சத்திர சோம்பு, ஜாதிக்காய், மிளகு, இஞ்சி, மஞ்சள் மற்றும் சீரகம் போன்ற சுவையூட்டிகளுடன் கூடிய இந்த தேயிலை, மசாலா தேயிலை சார்ந்த தொழில் துறைக்கு தனித்துவமானதொரு திருப்பத்தை வழங்குகின்றது.

புதிய வர்த்தக நாமமான 'சூ சாய்' அறிமுகத்தின் போது, அதன் ஆரோக்கிய நன்மைகளை சூ குரூப் (பிரைவேட்) லிமிடெட்டின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஷான் அபேவர்தன முன்னிலைப்படுத்தினார். ஓமான் தேசிய வங்கியின் பொது முகாமையாளர் தாரிக் அதிக் மற்றும் வங்கியின் விற்பனை மற்றும் வணிக அபிவிருத்தித் தலைவர் ஜி.வி. ராமகிருஷ்ணா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இந்த வெளியீட்டு விழாவில் பங்கேற்றனர். சூ குழுமத்தின் இணைப் பங்குதாரர் ஷெஸ்னா சுமனதீரவினால் பங்கேற்பாளர்கள் மத்தியில் சூ சாய் மசாலா தேநீர்  வழங்கப்பட்டது.

இந்த புதிய இலங்கைத் தயாரிப்பை ஓமான் சந்தையில் ஊக்குவிக்கும் நோக்கில், சூ குரூப் (பிரைவேட்) லிமிடெட்டின் தொழில்முனைவோர் மற்றும் ஓமானில் உள்ள பிரபல ஹைப்பர் மார்க்கெட் சங்கிலிகள் மற்றும் ஹோட்டல்களின் நிர்வாகத்தினரிடையே தொடர் சந்திப்புக்களை ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகம் ஏற்பாடு செய்தது. எதிர்கால இறக்குமதியாளர்கள் மற்றும் மசாலா தேயிலை ரசிகர்கள் மத்தியில் இந்தத் தயாரிப்பு பெரும் ஆர்வத்தை ஈர்த்தது.

இலங்கைத் தூதரகம்,

மஸ்கட்

2021 நவம்பர் 12

 

Please follow and like us:

Close