சூடானில் இருந்து வெளியேற்றப்பட்ட இலங்கையர்கள் இலங்கையை வந்தடைவு

 சூடானில் இருந்து வெளியேற்றப்பட்ட இலங்கையர்கள் இலங்கையை வந்தடைவு

சூடான் குடியரசில் நிலவும் நெருக்கடி காரணமாக வெளியேற்றப்பட்ட 14 இலங்கையர்கள் இன்று பண்டாரநாயக்க சர்வதேச  விமான நிலையத்தை வந்தடைந்ததுடன், அவர்களை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சிசிர செனவிரத்ன அன்புடன் வரவேற்றார். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஒருங்கிணைப்பு மற்றும் சவூதி அரேபிய அரசாங்கத்தின் தாராளமான உதவியினால் அவர்களது வெளியேற்றம் எளிதாக்கப்பட்டது.

கார்ட்டூமில் வசிக்கும் இலங்கையர்களை வெளியேற்றுவதற்காக, ரியாத் மற்றும் கெய்ரோவில் உள்ள இலங்கைத் தூதரகங்கள்  மற்றும் ஜெட்டாவில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் ஆகியன சவுதி அரேபியா மற்றும் இந்திய அரசாங்கத்தின் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகின்றன. நைரோபியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் மஸ்கட்டில் உள்ள இலங்கைத் தூதரகம் ஆகியனவும் வெளியேற்றும் பணியில் உதவிகளை வழங்கியுள்ளன.

சூடான் குடியரசின் நிலைமையை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தொடர்ந்தும் கண்காணித்து வருவதுடன், இன்னும் சூடான் குடியரசில் இருக்கும் இலங்கைப் பிரஜைகள் நாடு திரும்புவதற்கான கோரிக்கையை முன்வைக்கும் பட்சத்தில், அவர்களுக்கு உதவுவதற்குத்  தயாராக உள்ளது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2023 ஏப்ரல் 29

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close